மகளிர்மணி

திருப்பாவை: வண்ணக் கோலங்கள்!

12th Jan 2022 06:00 AM | எஸ். சந்திர மெளலி

ADVERTISEMENT

 

ராஜராஜேஸ்வரி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். படித்தது காஸ்ட் அகவுண்ட்டிங். திருமணத்துக்குப் பின் மும்பை வாசியாகிவிட்டவர். தாணே பகுதியில் உள்ள பெரிய தனியார் குடியிருப்பில் வசிப்பவர். நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். மார்கழியும் திருப்பாவையும் பிரிக்க முடியாதவையல்லவா? கடந்த சில ஆண்டுகளாக, மார்கழி மாதம் முழுவதும், தினமும் திருப்பாவையிலிருந்து ஒரு பாடலின் வரியை எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப தான் வசிக்கும் ஃப்ளாட்டின்  நுழைவாயிலில் வண்ணக் கோலமிடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார் ராஜராஜேஸ்வரி. அன்றாடம் தான் போடும் திருப்பாவைக் கோலத்தின் புகைப்படத்தையும், அதற்குரிய விளக்கத்தையும் வாட்ஸ் ஆப் மூலமாக பல்வேறு குழுக்களிலும் பகிர்ந்து கொள்கிறார். தனது புதுமையான கோலம் மூலமாக திருப்பாவை பற்றி சொல்கிறார் ராஜராஜேஸ்வரி:

சென்னையில் எனது பிறந்த வீட்டில் எல்லா பண்டிகைகளையும் முறைப்படி கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். வீட்டில் பண்டிகை என்றால் மாக்கோலம் இல்லாமலா? எனவே, எனக்கு சிறு வயது முதலே உலர்ந்த கோலமாவில் கோலங்கள் போடுவதைவிட, வெண்மையாகப்  பளிச்சிடும் மாக்கோலங்கள் போடுவது  மிகவும் பிடிக்கும். திருமணமாகி, மும்பைக்கு வந்த பிறகும், பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுவதும், வீட்டில் பிரம்மாண்டமாக மாக்கோலங்கள் போடுவதும் எனக்கு வழக்கமாகிவிட்டது. நவராத்திரியின்போது, கொலு வைப்பதும், தேவிக்கு விதம் விதமாக அலங்காரங்கள் செய்வதும் எனது வழக்கம். அதே போல மும்பையில் விநாயகர் சதுர்த்தி எத்தனை கோலாகலமாகக் கொண்டாடப்படும் என்பது உங்களுக்கே தெரியும். விநாயகர் சதுர்த்தித் திருவிழாவின்போது, பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளில் விநாயகருக்கு நான் அலங்காரம் செய்வதை இங்கே அனைவரும் பாராட்டுவார்கள்.

திருப்பாவை பாடல் வரிகளுக்கு கோலம் போடுகிற ஐடியா எப்படி வந்தது?

ADVERTISEMENT

மார்கழி மாதம் என்றாலே கோலத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வெறுமனே, விதம் விதமாகக் கோலங்கள் போடுவதை விட மார்கழியோடு நெருக்கமான திருப்பாவை பாடல் வரிகளுக்கு ஏற்ப தினமும் கோலம் போடலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த ஆண்டிலிருந்தே அதனை செயல்படுத்தி வருகிறேன். 

கோலத்துக்குரிய பாடல் வரிகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

மார்கழி முதல் தேதி, முதல் பாடலில் தொடங்கி, நாள்தோறும் ஒரு பாடலை எடுத்துக் கொள்கிறேன். இதில் குறிப்பிடத்தக்க  விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் நான் திருப்பாவை பாடல்களை வாசிக்கிறபோதும், அடுத்து, அந்த பாடலில் ஆண்டாள் சொல்லி இருக்கும் விஷயங்கள் குறித்து சிந்திக்கிறபோதும், எனக்கு புதுப்புது அர்த்தங்கள் புலபப்டுகின்றன. வயசாக, வயசாக எனக்குள்ளே ஏற்படும் வாழ்க்கை அனுபவம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். 

நான் போடும் கோலங்களுக்குரிய திருப்பாவை பாடல் விளக்கங்களை என் தங்கை மைதிலி எழுத, கோலத்தையும், விளக்கத்தையும் வாட்ஸ் ஆப் மூலம் மற்றவர்களோடு தினமும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கோலம் மூலமாக, நான் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அறிஞர்கள் திருப்பாவைக்கு அளித்துள்ள விளக்கங்களை ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துவருவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். 

கோலம் போட்டு முடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?

முதல்நாள் மாலை ஆறு மணிக்கு மேல், மறுநாளுக்கான வேலைவை ஆரம்பித்துவிடுவேன். அன்றைய கோலத்தை அழித்துவிட்டு, இடத்தை சுத்தம் செய்து முடித்து, ஏற்கெனவே தீர்மானித்தபடி அடுத்த நாள் கோலத்துக்கான அடிப் படையான புள்ளிகள், இழைகள் இவற்றை முடிக்க இரவு எட்டு, எட்டரை மணி ஆகிவிடும். மறுநாள் காலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, பூஜையை முடித்துவிட்டு, கோலம் போட ஆரம்பிப்பேன். மாக்கோலமிட்டு, ரங்கோலி வண்ணம் தீட்டி, காலை ஆறுமணிக்கு, ஜனநடமாட்டம் துவங்கும் நேரத்தில் போட்டு முடித்துவிடுவேன். 

திருப்பாவை கோலங்களுக்கு வரவேற்பு எப்படி?

வீட்டுவாசலில் சுமார் பத்தடிக்கு பத்தடி இடத்தில் தினமும் கோலம் போடுகிறேன். நாங்கள் இருப்பது 27 மாடிக்கட்டடம் என்பதாலும், கோலம் போடும் இடம் லிஃப்ட்டுக்கு எதிரில் உள்ள இடம் என்பதாலும், தினமும் ஏராளமானவர்கள் கோலத்தைப்பார்த்து ரசிப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்கள் கூட, நான் போடும் கோலத்தைப்பார்த்து, ரசித்து, என்னைப் பார்க்கிறபோது புன்னகை செய்வதை கவனிக்க முடிகிறது. 

நேரில் பார்த்து ரசிப்பவர்களைவிட, வாட்ஸ் ஆப் மூலமாக கோலத்தைப் பார்த்து, விளக்கத்தைப் படித்துப் பாராட்டுகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். சிலர், தினமும் காலையில் எழுந்தவுடன் உன் கோலம் மூலமாக நாராயணனை தரிசிப்பதுதான் முதல் வேலை என்று சிலர் பாராட்டுகிறார்கள். இப்போது நாராயணனின் நாமத்தின் உள்ளர்த்தம் தெரிந்துகொண்டு, அவற்றுக்கு கோலத்தின் மூலமாக விளக்கம் அளிக்க முயற்சி செய்கிறேன். வரும் ஆண்டுகளில், இதனை செய்யும்போது,  முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற இதர சமூக ஊடகங்கள் மூலமாக இன்னும் ஏராளமானவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT