மகளிர்மணி

காகித  பாட்டில்...!

12th Jan 2022 06:00 AM | ஸ்ரீதேவிகுமரேசன்

ADVERTISEMENT

 

பிளாஸ்டிக் அல்லது பெட் பாட்டில்களின் விலையைவிட குறைந்த விலையில் காகித பாட்டில்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக காகித பாட்டில்களை உருவாக்குபவர் நோய்டாவைச் சேர்ந்த சமீக்ஷா கனேரிவால்.

இந்தக் காகித பாட்டில்களில் திரவ நிலையில் இருக்கும் எல்லாவற்றையும் குளியல் அறைகளை சுத்தம் செய்யும் ரசாயன கூட்டுகள் உட்பட ஊற்றி வைக்கலாம். இந்த பாட்டில்கள் காகிதத்தில் செய்யப்படுவதால் விரைவில் மக்கி போகவும் செய்யும். பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுப்புறச் சூழலைக் கெடுப்பதால், இந்தக் காகிதப் பாட்டில்கள் பிளாஸ்டிக் பரவும் அபாயத்தைக் குறைக்கும்.

ADVERTISEMENT

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இப்படியே போனால் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து கிடைக்கும்.

கல்லூரியில் படிக்கும் போதே பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற திசையில் எனது பயணம் தொடங்கியது. 2018 -இல் தான் அது சாத்தியமானது. முழுக்க முழுக்க காகிதத்தால் செய்யப்படும் பாட்டில்களை உருவாக்குவதில் வெற்றிபெற்றேன். அதற்குக் காகித பாட்டில் என்று பெயரையும் சூட்டினேன். வர்த்தக மேலாண்மையில் முதுகலை படித்திருந்தாலும் இந்தத் துறையில் எனக்கு ஒன்றும் தெரியாது. பல வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து இந்த காகிதப் பாட்டில்களை உருவாக்கும் மெஷின்களை வடிவமைத்தேன். இதற்கு பல முறை கருவிகளை வடிவமைத்து மேம்படுத்த வேண்டியிருந்தது.

காகித பாட்டில்களைத் தயாரித்ததும் உறவினர்களிடமும், நட்பு வட்டத்திடமும் கொடுத்து பயன்படுத்திப் பார்க்கச் சொன்னேன். அவர்கள் காகிதப் பாட்டில்களை பயன்படுத்தி பார்த்துவிட்டு தரமாக, திருப்திகரமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். காகிதப் பாட்டிலுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களில் எந்த நிலையிலும் பிளாஸ்டிக் சேர்க்கப்படவில்லை. இதர பன்னாட்டு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று பாட்டில்கள் தயாரித்தாலும், நாம் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் இருப்பது போல, உள்பக்கத்தில் பிளாஸ்டிக் பூச்சு தரப்பட்டுள்ளது.

பழைய காகிதங்களைக் கூழாக்கி அதிலிருந்து காகித பாட்டில்களைத் தயாரிக்கிறோம். திரவம் காகிதப் பாட்டிலில் ஊடுருவாமல் இருக்க வாழை இலையின் தன்மையுள்ள செயற்கைப் பூச்சை காகிதப் பாட்டில்களில் ஸ்ப்ரே செய்கிறோம். ஒரு காகித பாட்டிலின் விலை 20 ரூ. பயன்பாடு அதிகரித்தால் காகித பாட்டிலின் விலை குறையும். தற்சமயம் காகித பாட்டில்கள் ஷாம்பூ நிரப்பி விற்க பயன்பட்டுவருகிறது. குடிக்கும் நீர், பானங்கள் நிரப்பி விற்க சிறப்பு காகித பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்கிறார் சமீக்ஷா கனேரிவால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT