மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 62:  உழைப்பு - பலன்!

கணேஷ் சுந்தரமூர்த்தி


"கிருஷ்ணா' என்று தன் மகனை அன்புடன் அழைத்தாள் ரேவதி.
அம்மாவை  நோக்கி மூச்சிரைக்க ஓடி வந்தான் கிருஷ்ணன்.
""அம்மா கொஞ்சம் பொறும்மா, இன்னும் ஒரே ஒரு ஓவர்தான் இருக்கு பெளலிங் பண்ணிட்டு வந்துடறேன்'.
""கிருஷ்ணா, இப்பவே மணி ஆறாகப் போகுது, வீட்டுக்குப் போயி குளிச்சி, பாலும், ஸ்நாக்ஸூம் சாப்பிட்டுவிட்டுப் படிக்க உட்கார வேண்டாமா. இன்னும் ஒரு வாரத்தில் முழுப் பரீட்சை நடக்க இருக்குது''.
""அம்மா, பிளீஸ் இதோ வந்துடறேன்'' என்று ஓடிவிட்டான் கிருஷ்ணன்.
தன் ஒரே மகனை, தந்தையை இழந்தவன் என்று அதிகம் செல்லம் கொடுத்துக் 
கெடுத்துவிட்டேனோ, ரேவதி கவலையில் ஆழ்ந்தாள். கிருஷ்ணன் படிப்பில் சிறந்தவன்தான். வகுப்பில் உள்ள மாணவர்கள் முப்பது பேரில், இவன் முதல் மூன்று ரேங்குக்குள் ஒன்றைப் பெற்றுவிடுவான்.
பிறகு என்ன ரேவதிக்குக் கவலை? எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கும் பொறுப்புணர்ச்சிதான் என்றால் மிகையாகாது.
பரீட்சை முடிந்தது. கோடை விடுமுறையும் தொடங்கியது. அவ்வளவுதான் கிருஷ்ணன் கிரிக்கெட் கிரவுண்டே கதி என்று கிடந்தான். காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு பத்து மணிக்குச் சென்றால் திரும்பி வர மாலை ஆறாகிவிடும்.
அப்படியென்றால் பகல் உணவைக் காலையிலேயே, ரேவதி தயாரித்துக் கொடுத்து விடுவாள்.
ஒரு மாசம் இப்படியே போனது, ரேவதி ஒரு முடிவுக்கு வந்தாள். அதைச் செயல்படுத்தவும் செய்தாள்.
""கிருஷ்ணா...''
""என்னம்மா...''
""அடுத்த வருஷம் நீ +2 போறே. இப்படியே விளையாடிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. படிப்பிலே கவனம் சிதறிவிடும். நாளைக்குப் பத்து மணிக்கு, பஸ்ஸிலே பயணிச்சி சிதம்பரத்திலே இருக்கிற உங்க மாமா வீட்டுக்குப் போறே, அங்கே பள்ளிக்கூடம் திறக்கற வரைக்கும் +2வுக்கான கோச்சிங் வகுப்புகளுக்குப் போய் படிக்கிறே!''
""அம்மா எனக்கு கோச்சிங் கிளாசுங்க தேவையில்லை. நான் நன்றாகப் படிக்கிறேன், நல்ல மார்க்குகளை வாங்குவேன்''.
""நீ வளர்ந்து பெரியவனாகி, கை நிறையச் சம்பாதிக்கும்பொழுது, நீ சொல்லறதை நான் கேட்கிறேன்; இப்ப நான் சொல்லுவதை நீ கேள்'' என்றாள் ரேவதி.
வேண்டா வெறுப்போடும், மிகுந்த கோபத்தோடும், அம்மாவிடம் ""போய்ட்டு வருகிறேன்'' என்று கூட சொல்லிக் கொள்ளாமல் கிருஷ்ணன் கிளம்பிச் சென்றான்.
கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்ற உடன் ரேவதியின் மனதைச் சோகம் கவ்விக் கொண்டது. அவனைக் கலந்து ஆலோசிக்காமல் எடுத்த முடிவு, அவனை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதைப் புரிந்து கொண்டாள்.
பிற்காலத்தில் தன்னைக் கிருஷ்ணன் கொண்டாடுவான், அவனுடைய நன்மைக்காகத்தான் நான் பாடுபட்டேன் என்பதை அப்பொழுது புரிந்து கொள்வான் என்று குழம்பிய மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.
பாவம் ரேவதி, பேதைப் பெண். நாற்பது வயதுக்குள் கைம்பெண்ணாகி விட்டாள். தாய்நாட்டின் பாதுகாப்புக்காகப் பாடுபடுகிற ராணுவ வீரனை மணக்கிறேன் என்று முழு மனதோடுதான் விக்னேஷை மணந்தாள். ஆனால் விதி அவனை கார்கில் போரில் பலி வாங்கியபொழுது, கிருஷ்ணனுக்கு வயது மூன்று. இரண்டு வயதுக் குழந்தையாக, தந்தையின் முகத்தைப் பார்த்துக் கிருஷ்ணன் சிரித்து விளையாடியதோடு சரி, பிறகு அவனைப் பிணமாகத்தான் பார்த்தான்.
தாய் என்ற ஸ்தானத்தில் மட்டுமல்லாது தந்தையின் பொறுப்பையும் சேர்த்து ரேவதி சுமக்க வேண்டி இருந்தது. நல்ல பாதையில் கிருஷ்ணனை வழி நடத்தி நல்வழிப்படுத்த முயல்கிறாள்.
விதி மீண்டும் தன் சாட்டையைச் சுழற்றி அடித்தது. இந்த முறை அகப்பட்டது கிருஷ்ணனாக இருந்தான். சிதம்பரத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை ஓட்டிக் கொண்டு சென்ற ஓட்டுநருக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிக் கவிழ, அந்த விபத்தில் பலர் உயிர் இழந்தனர். அதில் பயணித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தான். ஆனால்...
""அம்மா, நான் ஏன் உயிர் பிழைத்தேன், செத்துப் போயிருக்கக் கூடாதா'' என்று அலறினான் கிருஷ்ணன்.
ஏன்? என்ன நடந்தது? இந்த விபத்தில் கிருஷ்ணன் தன் இரு கால்களையும் இழந்துவிட்டான்.
""ஐயோ! இது என்ன கொடுமை?'' 
ரேவதியின் துக்கத்திற்கு எல்லை இல்லாமல் போனது. ஒரே மகனை சீரும் சிறப்புமாகப் பார்க்கத் துடித்தாளே. யாருக்கும் எள்ளளவும்  தீமை  செய்யலியே, பிறகு ஏன் எனக்கு மட்டும் இப்படி? ஊருக்குப் போகமாட்டேன் என்று சொன்ன மகனை வற்புறுத்தி அனுப்பி வைத்தாளே, என்ன கொடுமை இது? அன்று கிருஷ்ணன் சிதம்பரம் போகாமல் இருந்தால் இப்படிப்பட்ட இழப்பு நேர்ந்திருக்காதே. என்னால் தானே கிருஷ்ணனுக்கு இந்த நிலை என்று பலவாறு எண்ணி ரேவதி துரும்பாய் இளைத்துப் போனாள்.
கணவனை இழந்தபொழுது, மகனுக்காக வாழத் துடித்தாள். ஆனால் இப்படிக் கால்களை இழந்த மகனைப் பார்க்கும் பொழுதும், அவன் படும் வேதனையை உணர்ந்த பொழுதும், வாழ்வா அல்லது சாவா என்ற முடிவை எடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.
ஊன்றுகோல்களோடு கிருஷ்ணன் வீடு வந்து சேர்ந்தான். தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையை விட்டு அவன் வெளியே வருவதே இல்லை. தொலைக்காட்சியைக் கூடப் பார்ப்பது இல்லை. அலைபேசியில் நண்பர்கள் கூப்பிட்டாலும் பேசுவது இல்லை. யாராவது பார்க்க வந்தால் அவர்களின் காதில் விழும்படியே சத்தம் போட்டு அவர்களை விரட்டி அடித்தான்.
ரேவதியின் கணவன் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்ததால், ரேவதிக்கு அரசாங்க வேலை கொடுக்கப்பட்டிருந்தது. மகனின் நிலை கருதி ஆறு மாத விடுப்பில் அவள் இருந்தாள். நாளைக்கு டியூட்டியில் சேர வேண்டும். எப்படித் தனியாகக் கிருஷ்ணனை வீட்டில் விட்டுச் செல்வது என்று தவித்தாள்.
நடு ஹாலில் வேகமாக கிரிக்கெட் மட்டையும், ஸ்டம்புகளும் வந்து விழுந்தன.
""இதையெல்லாம் ஏன் என் அறையில் வெச்சிருக்க? போய்க் குப்பைத் தொட்டியில் எறி. நான் கிரிக்கெட் விளையாடுறேன் என்றுதானே ஊருக்குத் துரத்தினே, நீ தாய் இல்லை பேய்'' என்று கிருஷ்ணன் கத்திவிட்டு, ஊன்றுகோல்களை ஊன்றியபடி வேகமாக நடந்து சென்று உள்ளே மறைந்தான்.
கல் பட்ட கண்ணாடியாக, ரேவதியின் மனம் சுக்குநூறாக நொறுங்கியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக ரேவதி வேதனையில் துடித்தாள். கிருஷ்ணன் நெருப்புத் துண்டுகளாக வீசிய வார்த்தைகள் அவளைச் சுட்டெரித்தன.
இரவு மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. தூக்கம் வராமல் ரேவதி படுக்கையில் புரண்டாள். காலையில் இருந்து கிருஷ்ணன் ஒன்றுமே சாப்பிடவில்லை. பூட்டிய கதவு பூட்டியபடியே இருந்தது. கதவைத் தட்டித் தட்டி ரேவதியின் கைகள் நொந்து போயின.
""போயிடு, என்னைத் தொந்தரவு செய்யாதே?''  என்று கிருஷ்ணன் கர்ஜித்தான்.
""டக் டக்'' என்று ஊன்றுகோலின் சத்தம், ரேவதியின் இருதயத்தைப் படபடக்க வைத்தது. நாக்கு வறண்டது. சொந்த மகனே அவளுக்குப் பயத்தை உண்டு பண்ணினான். ரேவதி தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.
""அம்மா... அம்மா..'' என்று கிருஷ்ணனின் குரல் கேட்டது.
என்னது கிருஷ்ணன் இவ்வளவு இனிமையாக, என்னை அம்மா என்கிறானா? வாரிச் சுருட்டிக் கொண்டு ரேவதி எழுந்தாள்.
"டமால்' என்று வெட்டிய மரமாகத் தாயின் கால்களில் சரிந்து கிருஷ்ணன் விழுந்தான்.
""அம்மா என்னை மன்னிச்சிடு. உனக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்துட்டேன். துரும்பா உருமாறிப்போன உன்னை, உன் பாசத்தை, என் நல்வாழ்விற்காக நீ எடுத்த முடிவு எல்லாவற்றையும் துச்சமாக மிதித்தேன். அதனால்தான் கடவுள் எனக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்திருக்கிறார்.
""ஐயோ! கிருஷ்ணா அப்படியெல்லாம் பேசாதே. நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ உன்னை இப்படி ஆக்கிடுச்சு''.
""அம்மா, நாளையிலே இருந்து நீ வேலைக்குப் போ. நான் வீட்டிலே இருந்தே படிக்கிறேன். அடுத்த மாசம் எனக்கு அதிநவீன செயற்கைக் கால்களைப் பொறுத்தப் போறாங்க. அதைத் துணையாகக் கொண்டு வாழ்வேன்; சாதிப்பேன்; உனக்கும் நம் நாட்டுக்கும், வீர மரணம் அடைந்த என் அப்பாவுக்கும் பெருமையைக் கொண்டு வருவேன்; இது சத்தியம். அம்மா, எனக்குப் பசிக்குது சாப்பிட ஏதாவது தாம்மா என்ற மகனை வாரி நெஞ்சோடு ரேவதி அணைத்துக் கொண்டாள். 
செயற்கைக் கால்களைக் கொண்டு முதலில் கிருஷ்ணன் நிற்கவே கஷ்டப்பட்டான். தொடைகளில் ஏற்பட்ட வலி உச்சி மண்டையைப் பிளந்தது. தொடைகள் புண்ணாகின. எதையும் கிருஷ்ணன் சட்டை செய்யவில்லை. முதலில் நடந்தான், பிறகு ஓடினான், அதன் பிறகு அந்தச் செயற்கைக் கால்களைக் கொண்டு மலை ஏறவும் பழகினான்.
விடா முயற்சியும், இயற்கை சூழ்நிலையும் மலை ஏறும்பொழுது கிடைக்கின்ற ஆனந்தமும் கிருஷ்ணனை மலை ஏற்றத்தில் வெற்றி பெற வைத்தது.
படித்துக் கெண்டே விடுமுறை நாட்களில் மலை ஏற்றத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டான். இந்த முறை ரேவதி அவனைத் தடுக்கவில்லை, அவனைப் படைத்த இயற்கையிடமே அவனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்து விட்டாள்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பைக் கிருஷ்ணன் முடிக்கும் பொழுது யாருடைய துணையும் இல்லாமல் வெள்ளியங்கிரி மலையை ஏறி வெற்றிக் கொண்டான். பிறகு "நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டனியரிங்' என்கின்ற  மலை ஏறும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் போய்ச் சேர்ந்தான். 
முதல் கட்டமாகவே எவரெஸ்ட் சிகரத்தை எட்டத் துடித்தான், அதற்காக உழைத்தான். செயற்கைக் கால்களை வைத்துக் கொண்டு இது சாத்தியமா என்று பலர் கேலி செய்தனர், இது வெறும் பகல் கனவு என்றனர்.
ஊனமுற்றோருக்கான பிரத்தேயகப் பிரிவில், தன்னுடைய உடல் வலிமையைக் காட்டி, சீதோஷண நிலைகளைப் புறம் தள்ளி, பனிச் சரிவுகளைச் சமாளித்து பயிற்சி பெற்றான்.
இன்னல்களையும், இடையூறுகளையும் புறம் தள்ளி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு விட்டான் கிருஷ்ணன். எவரெஸ்ட் உச்சியில், கிருஷ்ணன் இந்திய தேசியக் கொடிக்கு வைக்கும் சல்யூட், நிழல் படமாக உலகெங்கிலும் வெளியாயிற்று.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் இன்று உலகம் போற்றும் கதாநாயகனாகிப் போனான். கோடிக்கணக்கான பணம் அவனுக்குப் பரிசாக வந்து குவிந்தது. சொந்த வீடு, இந்திய ரயில்வேயில் மிக உயர்ந்த பதவி, பாரத பிரதமரின் பாராட்டு, ஜனாதிபதி கையால் "பாரத ரத்னா' விருது.
விதி கிருஷ்ணனின் கால்களைப் பறித்தது. ஆனால் அவனின் விடா முயற்சி அவனைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அழியாத புகழைத் தந்து, சரித்திர ஏடுகளில் பதிய வைத்துவிட்டது. பெற்ற தாய்க்கும்,  தாய் நாட்டிற்கும் பெருமையை ஈட்டித் தந்துவிட்டது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

குறள் எண்: 619

பொருள் :

விதி நமக்கு உதவ முடியாது போனாலும் முயற்சி உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT