மகளிர்மணி

பொருத்தமான  கதாபாத்திரங்களில் நடிப்பேன்!

கண்ணம்மா பாரதி

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான பாடல் ராஜலட்சுமி "சாமி- வாயா சாமி' பாடல் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்சென்றடைந்துள்ளார்.

தனது நாட்டுப்புற இசைப் பயணம் குறித்து ராஜலட்சுமி மனம் திறக்கிறார்:

""எனது சொந்த ஊர் பூட்டுக்கும் புகையிலைக்கும் பெயர் பெற்ற திண்டுக்கல்லில் இருக்கும் நாகல்நகர். நெசவாளர் குடும்பம். தாத்தா மார்கழி மாதத்தில் பஜனை பாடல்கள் பாடுவார். நானும் அவருடன் சேர்ந்து பாடுவேன். இப்படித்தான் நான் பாட ஆரம்பித்தேன். பஜனைப் பாடல்கள் மார்கழி மாதத்துடன் நிறைவு பெறும். பஜனைப் பாடல்கள் பாடியதால் கவனம் பாட்டு பக்கம் திரும்பியது. திண்டுக்கல்லில் பாட்டுக் கச்சேரி எங்கு நடந்தாலும் தாத்தாவை அழைத்துக் கொண்டு போய்விடுவேன்.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது சீனியர்கள் பாடுவதில் உள்ள நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

"இட்டுக்கட்டிப் பாடுவது' என்ற பாணியையும் கற்றுக் கொண்டேன். அதனால் பாடல் வரிகள் இப்படித்தான் அமையணும் என்ற புரிதல் என்னுள் உருவானது. இந்த வகைப் பாடல்கள்தான் கணவர் செந்திலை அறிமுகம் செய்தது. நாட்டுப் புறப் பாடல்களை மேடையில் பாடத் தொடங்கி, ஒரு கட்டத்தில் செந்திலுடன் மேடைகளில் பாடும் வாய்ப்பும் உருவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற ஊர்தான் செந்திலின் சொந்த ஊர். மழை இல்லாமல் வறண்டிருக்கும் பூமி. குக் கிராமம் என்பதால் ஊர் மக்கள் பாட்டுப்பாடிக்கொண்டே வேலை பார்ப்பார்கள். அதைக் கேட்டு வளர்ந்த செந்தில் பாட்டுப் பாடவும் புனையவும் கற்றுக் கொண்டவர். புதுக்கோட்டை மாவட்டத்தின் களபம் ஊருக்குப் பெருமை சேர்த்த நாட்டுப்புறக் கலைஞர்களான கோட்டைச்சாமி, ஆட்காட்டி ஆறுமுகம், மாரியம்மாள் போன்றவர்கள்தான் செந்திலின் மானசீக குருக்கள். இசையில் ஆர்வம் காரணமாக தஞ்சை இசைக்கல்லூரியில் சேர்ந்து செந்தில் படித்தார்.

செந்திலின் சொந்த ஊரான களபத்தில் இவருடன் இணைந்து பாடினேன். எங்களை நாட்டுப்புறப் பாடல்கள்தான் இணைத்தன. நான்கு ஆண்டுகள் மேடையில் ஒன்றாகப் பாடினோம். அவர்தான் என்னை விரும்புவதாகச் சொன்னார்... நான் சரி என்று ஆறு மாதம் கழித்து சொன்னேன். எனக்கு வழிகாட்டியாக இருந்த செந்தில் வாழ்க்கைத் துணையும் ஆனார்.

தொடக்கத்தில் எங்க வீட்டில் "காதல் திருமணமா... அது சரிப்படாது' என்றார்கள். செந்தில் வேறு ஜாதி. நான் வேறு ஜாதி. திருமணம் தாமதமாக ஜாதியும் ஒரு காரணம். சில மாதங்களில் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டேன். உறவு சுமூகமாகிவிட்டது.

திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு "சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பு வந்தது, அந்த நிகழ்ச்சி எங்களை உயரத்துக்கு கொண்டு சேர்த்துவிட்டது. "சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நாட்டுப்புறப் பெண் மாதிரி கண்டாங்கி சேலை கட்டி... தலை நிறைய பூக்களுடன் கலந்து கொண்டேன். அது மிகவும் பொருத்தமாக இருந்தது என்று பலரும் பாராட்டினார்கள். "சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி நிறைவானதும், "சார்லி சாப்ளின் 2' படத்தில் "என்ன மச்சான்' என்ற பாடலை நாங்கள் இருவரும் சேர்ந்து பாட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து "விஸ்வாசம்', "அசூரன்', படங்களுக்காவும் பாடியிருக்கிறேன். புடவை, நகை விளம்பரங்களுக்காக மாடலாகவும் மாறியிருக்கிறேன்.

"சூப்பர் சிங்கர்' தந்த புகழை இப்போது "சாமி ... வாயா சாமி' பாடல் கொடுத்துள்ளது. "பெரிய பட்ஜெட் படம். பாடல்கள் சிறப்பாக அமையணும். எவ்வளவு நாள் வேணுன்னாலும் எடுத்துக்கோங்க... ஆனா பாடலை உயிர் கொடுத்துப் பாடணும்' என்றார்கள். நானும் பலமுறை பாடி பயிற்சி செய்து பாடினேன். காதலனை "சாமி சாமி' என்று போற்றி புகழ்ந்து பாடும் பாடல்தான் "சாமி... வாயா சாமி..'. எனக்கு குருவாகவும் கணவராகவும் அமைந்த செந்தில் மாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பாடலுடன் இசையுடன் ஒன்றி பாடி முடித்தேன். இந்தப் பாடல் என்னை பொறுத்தவரை மிகப் பெரிய சாதனையாக மாறியுள்ளது . என் மேல் நம்பிக்கை வைத்த "புஷ்பா' படத்தின் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் சாருக்குத்தான் எல்லாப் புகழும் .

"கண்டா வரச் சொல்லுங்க..' பாடலும் எங்களைப் பிரபலமாக்கியது. படங்களில் நடிக்க ஆர்வம் உண்டு. பொருத்தமான கதாபாத்திரங்கள் என்றால் நிச்சயம் நடிப்பேன். எங்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். என்கிறார் ராஜலட்சுமி செந்தில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT