மகளிர்மணி

உன்னால் முடியும் நம்பு.. நம்பு!: நம்புங்கள் நம்மாலும் முடியும்!

DIN

கங்கை நதி பெரும் பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. என்றைக்கும் போல நதிக்கரை ஆரவாரத்தோடு இருந்தது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்து கங்கையில் நீராடி இறைவனை தரிசனம் செய்ய மக்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். இளம்வயதினர் முதியவர் என்ற பாகுபாடே இல்லை. பித்ரு கடன் செய்யும் ஜனங்களும் கங்கையில் தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தும் அன்பர்களும் கூடியிருந்ததால் கங்கைக்கரை மட்டுமல்ல காசி நகரமே பெரும் ஆரவாரத்தோடும் குதூகலத்தோடும் இருந்தது.

அன்னை காசி விசாலாட்சி ஈசனிடம் மகிழ்ச்சியோடு உரையாடத் தொடங்கினாள். ""சுவாமி, கங்கையில் தங்கள் பாவத்தைத் தீர்த்துக் கொண்டு புண்ணிய ஆத்மாக்களாய் மக்கள் கரையேறுகிறார்கள் கவனித்தீர்களா?'' என்று கேட்டாள்.

ஈசனோ புன்னகையை மட்டுமே பதிலாக வைத்தார்.
""சுவாமி எனக்கொரு வினா எழுகிறது கேட்கட்டுமா?"" என்று அம்பிகை கேட்க ஈசன் அம்மையை ஏறிட்டு நோக்கி, ""கேளேன்'' என்றார்.
""அன்றாடம் கங்கையில் நீராட லட்சோபலட்சம் மக்கள் வருகிறார்கள். எனில், அனைவரும் புண்ணிய ஆத்மாக்களாக மோட்சம் அடைய வேண்டுமல்லவா? அப்படி நடப்பதில்லையே ஏன்?'' என்றாள் அம்பிகை.
""ஏன் என்று பார்த்து விடுவோமே வா'' என்று இறைவன் இறைவியை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தார். சாமானிய மனிதர்
களைப் போல அவர்களின் தோற்றம் இருந்தது.
""தேவி, நான் கங்கையில் இறங்கி நடு ஆற்றில் சுழலில் சிக்கிக் கொள்வேன். நீ கரையிலிருந்து யாரேனும் என் கணவரைக் காப்பாற்றுங்கள். எந்தப் பாவமும் செய்யாத மனிதரால் மட்டுமே இத்தகைய சூழலில் என் கணவரைக் காக்க முடியும் என்று ஒரு சாபம் இருக்கிறது. அதனால் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா உங்களில் யாரேனும் இருப்பீர்களேயானால் அவர்கள் விரைந்து வந்து என் கணவரைக் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பு'' என்றார்.
தேவியும் அப்படியே பதறி அழைத்தாள். அத்தனை பெரிய ஜனக்கூட்டத்தில் ஒருவரேனும் அதற்கு முன்வரவில்லை. அம்பிகையின் குரல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தது. யாருமே பாவமற்ற புண்ணியாத்மா இல்லையா என்று அம்பிகையின் மனதில் வியப்பு மேலிட்டது.
அந்த நேரத்தில், வயிற்றுப்பசிக்காக அங்கே வந்தவர்களிடம் திருடும் ஒரு திருடன் நிலைமையைப் புரிந்து கொண்டு ஓடி வந்தான். திடு திடுவென கங்கையின் படித்துறையில் இறங்கி நதியில் முழ்கி எழுந்தான். சுழலில் அகப்பட்டுக் கொண்டிருந்த மனிதரை நோக்கி விரைந்து நீந்தினான். மனிதராகச் சுழலில் மூழ்கிக் கொண்டிருந்த இறைவனை இறுகப் பிடித்துக் கொண்டு நீந்திக் கரை சேர்த்தான்.
அம்மை அவனிடம், ""நீ திருடனல்லவா? எப்படி பாவமற்ற புண்ணியாத்மா என்று உன்னைக் கருதினாய்'' எனக் கேட்டாள். ""அம்மா, நான் திருடனாக இருக்கலாம். என்றாலும் கங்கையில் முழ்கி எழுந்தால் நம் பாவங்கள் நீங்கி புண்ணியாத்மாவாகத் துலங்குகிறோம் என்று கேட்டிருக்கிறேன். அந்த நம்பிக்கையில் தான் முதல் முதலாக இந்த நதியில் இறங்கினேன். பெரியவரையும் காப்பாற்றினேன்'' என்றான்.
அம்பிகையும் இறைவனும் அவனுக்குக் காட்சி கொடுத்ததோடு காசியில் மஹாராஜனாய் வாழ்வாய் என்று வரமும் தந்தார்கள். அப்படியே அவனும் காசிராஜனாய் பேரோடும் புகழோடும் வளமாய் வாழ்ந்தான்.
இந்தக் கதையை ஒரு முறையேனும் அனைவருமே கேட்டிருப்போம். என் சிறு வயதில் பாட்டி இந்தக் கதையைச் சொல்லிவிட்டுச் செல்லமாய் கன்னம் தட்டிச் சொல்வார்.
""எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே ஓடிக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு அணுகினால் அவை நம்முடையதாகும். நம்பிக்கை இருப்பவருக்குத் தான் வரம் கிடைக்கும்.
ஆம், இந்தக் கதையை இதற்காகத் தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் தங்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்றோ அல்லது வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றோ கருதுவதில் அர்த்தமில்லை. கங்கையைப் போல வாய்ப்புகள் பிரவாகமாக ஓடிக் கொண்டே இருக்கின்றன. நாம் நம்பிக்கையோடு நோக்கும் பொழுது நிச்சயம் வரம் பெறுவோம்.
கதையில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். உண்மை வாழ்வில் என்னுடைய பாடு யாருக்குப் புரியும்? எந்த வாய்ப்புக்கும் வழியில்லாமல் இருக்கும் என் நிலையைப் புரிந்து கொள்ள யாராலும் முடியாது. உலகம் என்னவோ வேகமாகத் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு ஒன்றும் நடப்பதாகக் காணோம் என்ற வாசகங்களைப் பலரும் மனதுக்குள் முணுமுணுத்துக் கொள்ளக் கூடும். உண்மை தானே. கதை சொல்வது எளிது. உவமான உவமேயங்களுடன் பேசுவது இன்னும் எளிது. நிஜ வாழ்வில் சாத்தியங்கள் வேறு என்றும் தோன்றலாம். ஆனால், நம் கண்முன்னே காணும் வாழ்க்கையில் இந்த உண்மையை உணரும் பொழுது
நம்பிக்கை தோன்றும்.
மணிப்பூர் மாநிலத்தில் போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன். அவளின் குடும்பம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வந்தது. வளர்ச்சி சாத்தியமாகாத வறுமையான குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண்ணும் அவரது சகோதரரும் அன்றாடம் காட்டிற்கு சுள்ளி சேகரித்துக் கொண்டுவரச் செல்வார்களாம். வீட்டுக்கு அடுப்பெரிக்கப் பயன்படுத்தியது போக எஞ்சிய சுள்ளிகளை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பச் செலவுக்கு என்று வாழ்ந்திருக்கிறார்கள். கற்பனைக்கும் எட்டாத இந்தக் கடின வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்வது கூட நம்மில் பலருக்கு இயலாமல் போகலாம்.
ஆனால், இந்தப் பெண் அதையெல்லாம் பற்றி வருந்திக் கொண்டிருக்கவில்லை. அதிக சுள்ளிகளை எடுத்துக் கொண்டு சென்றால் அதிகம் பணம் கிடைக்கும். அம்மா மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது. குடும்பச் சுமையை மனதில் சுமந்து கொண்டு அவள் சுள்ளிகள் சுமப்பதை உற்சாகமாக எடுத்துக் கொண்டாள். தன் சகோதரனை விடத் தானே அதிகம் சுமைகளைத் தூக்கும் திறன் கொண்டவள் என்று நம்பியதோடு அன்றாடம் அதைச் செயலில் காட்டினாள். சுமையைத் தூக்குவதில் தானே சிறந்தவள் என்பது போல தன் வயதுக்கும் மீறிய சுமையைத் தூக்கிக் கொண்டு ஊருக்குள் அவள் வருவதைப் பார்த்து கிராமத்து மக்கள் ஆச்சர்யப்பட்டுப் போவார்களாம்.
குடும்பத்தின் வறுமையைத் தன் உழைப்பால் துடைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை அவளிடம் அவளின் சுமைகளைப் போலவே அதிகம் இருந்தது. இவளின் செயலைத் தற்செயலாகக் கண்ட பளுதூக்கும் வீராங்கனை குஞ்சாராணி ""என்னோடு வா உன்னைப் பளுதூக்கும் வீராங்கனை ஆக்குகிறேன்'' என்று தன் பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே பயிற்சி பெறுவதில் மிகுந்த ஆர்வம் தான் என்றாலும் இந்தப் பயிற்சி மையம் அவள் தங்கியிருந்த இடத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் துôரத்தில் இருந்தது. குக்கிராமத்தில் குடும்பத்தின் அன்றாடங்களுக்காகவும் உழைத்தாக வேண்டும். வருங்காலத்தில் நமக்கென அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தப் பயிற்சி வகுப்புக்கும் சென்றாக வேண்டும்.
அறுபது கிலோமீட்டர் தூரம் பயணிக்க மணிக்கணக்கில் நேரம் செலவாகும் அதற்கான வாகனத்திற்கு எங்கே போவது? தன்னுடைய கிராமத்திலிருந்து பிரதான நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டால் அந்த வழியாக வரும் லாரிகள் டிரெக்குகள் போன்றவற்றைக் கைகாட்டி நிறுத்தி அதில் ஏறிக் கொண்டு பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்திருக்கிறார்.
ஒருநாள் இருநாள் அல்ல வருடக்கணக்கில் இப்படித் தொடர்வதென்றால் எளிதா? விரும்பியதைக் கற்றுக் கொள்வதில் அவருக்கிருந்த முனைப்பும் உற்சாகமும் எந்த அளவுக்கு இருந்திருக்குமென நினைத்துப் பாருங்கள்.
பயிற்சியின் பொழுது உடற்பயிற்சிகளோடு எப்படியான ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் இருக்கும். பால் இறைச்சி முட்டை என்று உணவு வகைகள் எடுத்துக் கொள்ளப் பயிற்சி மையத்தில் அறிவுரைகள் தந்தபோதிலும் அதெல்லாம் பண்டிகைகளின் பொழுது மட்டுமே கிடைக்கும் விசேஷ உணவுகள் என்பது தான் நிதர்சன நிலைமை. முட்டையும் பாலும் மகளுக்கு எப்படியும் கொடுக்க வேண்டுமே என்பதற்காக அவளுடைய தாயார் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. உடலின் உறுதி மனதின் வலிமையைப் பொறுத்தே இருக்கிறது என்ற நம்பிக்கையோடு அவள் தொடர்ந்திருக்கிறாள்.
வறுமை ஒருபுறம் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் அவளுடைய நம்பிக்கை அவளை உலகுக்கு அறிமுகம் செய்தது. மீராபாய் சானு என்ற அவளின் பெயர் நம்பிக்கைக்கான அடையாளமாயிற்று. ஒலிம்பிக் போட்டிகள் வரை மீராபாய் சானுவைக் கொண்டு நிறுத்தியது அவரின் நம்பிக்கை. கடந்த 2016- ஆம் ஆண்டின் ரியோ ஒலிம்பிக் போட்டியின் போதே கவனம் பெற்றார். பதக்கம் பெற்றிருக்க வேண்டியவர் முதுகுவலி காரணமாகத் தோல்வியைத் தழுவினார். ஆனால் சற்றும் நம்பிக்கை இழக்கவில்லை. இதே ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாமல் விடுவதில்லை என்று அதன் பிறகு இன்னும் அதிக உற்சாகமும் முயற்சியுமாக ஐந்து ஆண்டுகள் பயிற்சியைத் தொடர்ந்தார்.
கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பளுதுôக்கும் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப்பட்டியலில் முதல் வீராங்கனையாக இடம் பிடித்தார் மீராபாய் சானு.
முதல் நாள் போட்டியிலேயே இந்தியாவுக்குப் பதக்கம் வாங்கித் தந்துவிட்டார் என்று பிரதமர் துவங்கி சாதாரண குடிமக்கள் வரை மீராபாய் சானுவின் வெற்றியைக் கொண்டாடினார்கள்.
மீராபாய் சானு," இதற்கும் முன் ஆசியா விளையாட்டில் தங்கப்பதக்கம் போன்ற பல்வேறு பதக்கங்கள் பெற்றிருந்தாலும் பத்மஸ்ரீ விருது வாங்கியிருந்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்னுடைய கனவு. அந்தக்கனவு இன்று நனவாகியிருக்கிறது" என்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
எங்கோ குக்கிராமத்தில் பிறந்த மீராபாய் சானு தன் நம்பிக்கையாலும் முயற்சியாலும் தனக்கும் தன் ஊருக்கும் நாட்டுக்கும் நம் கண்ணெதிரே வெற்றியை பெருமையைப் பெற்றுத் தர முடிந்திருக்கிறதெனில் "நம்புங்கள் நம்மாலும் முடியும்' நம்பிக்கையோடு தொடர்வோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT