மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 66: நல்வழியில்  வந்த செல்வம்!

9th Feb 2022 06:00 AM | சாந்தாகுமாரி சிவகடாட்சகம்

ADVERTISEMENT


"ம்மா.. ம்மா' என்று தொழுவத்தில் கட்டியிருந்த சீமைப் பசுக்கள் பதினைந்தில், சில குரல் கொடுத்துக் கொண்டிருந்தன.

சடக்கென்று தனலட்சுமிக்கு விழிப்பு வந்து விட்டது. அலாரம் மணி ஐந்து என்று காட்டிக் கொண்டிருந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். நாலரை மணிக்கு அலாரம் அடித்தது கூடத் தெரியாமல் தூங்கிவிட்டிருக்கிறேனே, உடம்பில் அப்படி ஒரு அசதி. கறவை மாடுகள் போல் அல்லாமல் எருதுகள் போல காலையிலிருந்து உழைக்க வேண்டியிருக்கிறது.

கணவன் தங்கவேலுவைத் தட்டிஎழுப்பினாள்.

""தே, எழுந்திரி இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது நல்லா விடிஞ்சுடும். பாலைக் கறந்து வாடிக்கைக்காரங்களுக்குக் கொடுக்க வேண்டாமா?''

ADVERTISEMENT

முணுமுணுத்துக்கிட்டே தங்கவேலு புழக்கடையை நோக்கி நடந்தான்.

பல்லைத் தேய்ச்சிட்டு, முகம் கழுவி நேராக இரண்டு பேரும் தொழுவத்தை நோக்கி நடந்தனர்.

குவிந்துக் கிடந்த சாணத்தை வாரிக் கூடைகளில் போட்டனர். கிணற்றிலிருந்து தண்ணீரை முகர்ந்து வந்து தொழுவத்தைக் கழுவி விட்ட பின்பு பால் கறக்கத் தொடங்கினர்.

பதினைந்து பசுக்களில் பத்து மட்டுமேகன்றுகளை ஈன்று பால் கொடுத்தன. மீதி ஐந்தில் நான்கு கர்ப்பிணிகள்; ஒன்றுஇப்பொழுதுதான் பால் சுரப்பதை நிறுத்தியிருந்தது.

பாலைக் கறந்துக் கேன்களில் ஊற்றி முடித்ததும், பரபரவென்று தங்கவேலு கிணற்றடியை நோக்கிச் சென்றான். அங்கே அண்டாக்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் பக்கெட்டில் எடுத்துக் கொண்டு வந்து கேன்களில் இருந்த பாலின் அளவுக்குச் சரிபாதியான அளவு தண்ணீரைச் சேர்த்தான்.

""தே, ஏன் இவ்வளவு தண்ணீரை ஊத்தற, நம்பள நம்பித்தானே பால் வாங்கறாங்க, இப்படிச் செய்யாதேன்னு எத்தனை வாட்டிச் சொல்லறேன்''.

""ஏய், நீ சும்மா கிட, நல்ல சீமைப் பசுங்க, பாலு எவ்வளவு திக்கா இருக்கு. இதுலே தண்ணீர் சேர்த்தா யாருக்கும் தெரியாது.

கடவுளுக்குத் தெரியுமே, சிவன் கோயில் அபிஷேகத்துக்குக் கொடுக்கற பால்லேயே தண்ணீரைக் கலக்குறே.

சிவன் தலையிலே குடம் குடமாத் தண்ணீரைக் கொட்டறாங்க, ஏன் குடத்திலே ஓட்டைப் போட்டு, சிரசிலே சொட்டுச் சொட்டா விழ வைக்கறாங்க, அப்படியிருக்க பால்ல தண்ணீரைச் சேர்த்தா சிவன் ஒண்ணும் சொல்லமாட்டாரு''.

""வேணாய்யா, கடவுள் விஷயத்திலே விளையாடாதே. நம்ம கிராமத்திலும், பக்கத்து கிராமத்திலும் எத்தனை குழந்தைங்க இந்தப் பாலைக் குடிக்குதுங்க, குழந்தைகளும் தெய்வத்திற்குச் சமம்''.

""இவ ஒருத்தி, அறிவு கெட்டவ, தெய்வம் அது இதுன்னு. நம்ம கையிலே காசு இல்லாம நடுத்தெருவிலே நின்னபொழுது தெய்வம்தான் வந்து சோறு போட்டுதாக்கும்''.

""உன் தாலியை வித்து, ஒரு பசு மாட்டை வாங்கிக் கடுமையா உழைச்சு, இதோ இன்னைக்குப் பதினைஞ்சு சீமைப் பசுக்கள், கிராமத்து எல்லையிலே ஒரு காணி நிலத்திலே வீடு, தோட்டம்ன்னு எவ்வளவு வசதியா இருக்கோம். எல்லாம் இப்படி பால்லே தண்ணியைக் கலந்ததிலே வந்த துட்டு''.

""இரண்டு பொட்டப் புள்ளைகளைப் பெத்துப் போட்டிருக்கியே, அதுங்கள எப்படிக் கரை சேர்க்கறது. இந்தக் காலத்திலே நியாயம், அநியாயம் எல்லாம் பார்த்தா வாழ முடியாது. வாடிக்கையா பால் வாங்கறவங்களே கேள்வி கேக்கல, இவ பெருசா சொல்ல வந்துட்டா. போ போ, போய் வேலையைப் பாரு''.

பால் கேன்களை ஸ்கூட்டரின் பின்புறத்திலும், முன்புறத்திலும் கட்டிக்கிட்டு வண்டியை வேகமாக ஓட்டிச் செல்லும் கணவனையே பார்த்துக் கொண்டு கல்லாகச் சமைந்தாள் தனலட்சுமி.
தங்கவேலு தன் கிராமத்திலேயே, ஒரு சின்ன மளிகைக் கடையை வெச்சி வியாபாரம் செய்து பொழப்பை நடத்திக் கொண்டிருந்தான். வயித்துப் பாட்டுக்குக் கஷ்டம் இல்லைன்னுதான் தனலட்சுமியை அவள் அப்பா, தங்கவேலுக்கு கட்டிக் கொடுத்தாரு. தங்கவேலுவின் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் முடிந்து மாமியார் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். தங்கவேலுவின் அம்மா இறந்த மறுவருடமே அவனுடைய அப்பாவுக்கு வயிற்றில் புற்றுக்கட்டி வந்துவிட்டது. டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவரைப் பிழைக்க வைக்க முடியவில்லை.
தங்கைகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனுடன், தந்தைக்கான வைத்தியச் செலவு என்று வட்டியுடன் விஸ்வரூபம் எடுக்க தங்கவேலு கதிகலங்கிப் போனான். மளிகைக்கடை, குடியிருந்த வீடு என்று எல்லாவற்றையும் வித்துக் கடன்களை அடைத்து நிமிர்ந்தபொழுது கையில் ஒரு ரூபாய்க் கூட நிற்கவில்லை.

தங்கவேலுவின் பால்ய சிநேகிதன் ஒருவன் தன் வயலில், சிறு குடிசையைப் போட்டுத் தங்கவேலுவைத் தங்க வைத்தான். தன் இரண்டு பெண் குழந்தைகளோடு தங்கவேலு அங்கு தங்கினான். நண்பனின் வயலில் தினக்கூலியாக வேலை செய்தான். ஒரு பசு மாட்டை வாங்கி வீட்டு உபயோகத்திற்குப் போக மிச்சத்தை விற்கத் தொடங்கியவன் பிறகு அதையே தொழிலாக்கிக் கொண்டான்.

முதலில் தண்ணீரைக் கலக்காமல்தான் பாலை விற்றான். பிறகு கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து விற்கக் கொஞ்சம் லாபம் அதிகமாக வந்தது. பிறகு கேட்க வேண்டுமா? தாராளமாகத் தண்ணீர்; லாபமும் தாராளமாக வந்தது.

கையில் பணம் சேரச் சேர பசுமாடுகளின் எண்ணிக்கையும் கூடியது. தங்கவேலுவின் வியாபாரம் பக்கத்துக் கிராமம் வரை விரிந்தது.

கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்திலே ஒரு காணி நிலம் வாங்கிப் பெரிசாக மாட்டுத்தொழுவம் கட்டிவிட்டான். வீடு, தோட்டம், லோனில் ஸ்கூட்டர் என்று வசதிக்காரனாகி விட்டான் தங்கவேலு.

ஆனால் தனலட்சுமிக்கு ஏனோ மனத்தில் சந்தோஷம் இல்லை. நியாய வழியில் சம்பாதிக்காத பணம் நல்லது செய்யுமா? என்று கலக்கமுற்றாள்.

இரண்டு நாளாகவே மழை பெய்துக் கொண்டிருந்தது. மிதமான மழை என்பதால் தங்கவேலுவின் பால் வியாபாரம் முடங்கவில்லை.

அன்று இரவு மழை கொஞ்சம் வலுக்கத் தொடங்கியது. தொழுவத்தில் மாடுகள் தீனக் குரல் எழுப்பின. தனலட்சுமியின் வயிறு கலங்கியது. தங்கவேலுவும், குழந்தைகளும் இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கி விட்டனர். தனலட்சுமியை மட்டும் நித்திராதேவி தழுவிக் கொள்ளவில்லை.

திடீர் என்று பெரும் சத்தம், வானமே இடிந்து தரையில் இறங்கினார் போல. கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்த தனலட்சுமி போட்ட சத்தத்தில் எல்லோரும் அலறிக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் மளமளவென சூழ்ந்துக் கொள்ளத் தொடங்கியது. முழங்கால் அளவு இருந்த தண்ணீர் இடுப்பளவு உயர, தீவிரத்தை உணர்ந்த தங்கவேலு, மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.

பக்கத்தில் இருந்த குன்று ஒன்றை அடைந்து அதன் மீது ஏறிவிட்டனர். கும்மிருட்டில் அவர்களை வழிநடத்திச் சென்றது எது? தண்ணீர் கலந்த பால் என்றாலும் தினமும், தலைக்குக் கொடுத்தானே என்று சிவபெருமான் கருணை காட்டினார் போலும்.

குளிரில் நடுங்கி, மழையில் நனைந்து, வெட்ட வெளியில் மீண்டும் அநாதைகளாக நின்றது தங்கவேலுவின் குடும்பம்.

கிளவுட் பர்ஸ்ட் அதாவது முகில் வெடிப்பு என்கின்ற அதீதியான மழை, பெரும் வெள்ளத்தைக் கொண்டு வரும். அதுதான் அன்று நிகழ்ந்தது. ஏற்கெனவே தங்கவேலுவின் குடியிருப்பு சற்றுத் தாழ்வான பகுதியில் இருந்ததினால், அது இருந்த சுவடே தெரியாமல் அத்தனையையும், நீர் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டது.
பிறர் அழத்திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் என்று இதைத்தான் திருவள்ளுவர் சொல்கிறாரோ!

அழக்கொண்ட வெல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

( குறள் எண்: 659)

பொருள் :

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT