மகளிர்மணி

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 5: அச்சம் தவிர்  

9th Feb 2022 06:00 AM | கோதை. ஜோதிலட்சுமி

ADVERTISEMENT

 

எத்தனையோ சாதனைப் பெண்மணிகள் புகழ் வெளிச்சம் கண்டிருக்கிறார்கள். ஆனால், பேர் புகழ் என்று எதையும் சிந்திக்காமல் தன் கடமை என்றும் தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடனும் செயல்படும் ஓர் அத்தையின் கதையை இன்றைக்குச் சொல்ல நினைக்கிறேன். அத்தையின் பெயர் சொல்ல அவசியமில்லை. ஏனென்றால் நான் சொல்லும் அத்தையைப் போல உங்கள் அனைவருக்குமே தெரிந்த அத்தை ஒருவர் இருக்கக்கூடும். சரி, அத்தையின் கதைக்கு வருகிறேன்.

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஒரே பெண் என்பதால்,"வண்ண சீரடி மண்மகள் அறிந்திலள்" என்பார்களே அப்படி வளர்ந்தவர் அத்தை. செல்லம், அரவணைப்பு என்று ஒரு மகாராணி போல வளர்ந்தாள். அவள் கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைக்கும் முன் எல்லாமும் நடந்துவிடும். துணியில் எம்பிராய்டரி பூவேலைப்பாடுகள்  செய்து கொண்டிருப்பாள். அவள் வீட்டின் திரைசீலைகள் கூட அவளுடைய வண்ண வண்ணமான பூவேலைப்பாடுகளுடன் இருக்கும்.

பத்திரிகைகள் படிப்பது அத்தைக்குப் பிடித்த பொழுதுபோக்கு. தினசரி பத்திரிகை முதல் வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை என்று எல்லாமும் படித்துவிடுவாள். இந்திராகாந்தி என்றால் கொள்ளை பிரியம். இந்திராகாந்தி காலமான பொழுது அத்தை இரண்டு நாள்கள் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தாள்.

ADVERTISEMENT

அத்தையின் அழகுக்கு அவளை மணம் செய்ய விரும்பி வந்தவர்களைக் கொண்டு சுயம்வரம் நடத்தியிருக்கலாம். என்றாலும் அத்தையின் அப்பா தன் பெண் உள்ளூரிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணி பல தலைமுறைகளாக பலசரக்குக் கடை நடத்தி வரும் பெயர் பெற்ற குடும்பத்தில் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். அத்தையும் பிறந்த வீட்டுக்கு சற்றும் குறைவில்லாத வசதிகளுடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாள்.

அத்தையை எப்போது வெளியில் பார்க்க முடியும்? பட்டும் நகையுமாக எதாவது விசேஷங்களுக்குப் போகும் பொழுது மட்டுமே பார்க்க முடியும். சொகுசான வாழ்க்கை. சொன்ன வேலையைச் செய்வதற்கு வேலையாட்கள். சகல வசதிகளும் கொண்ட வீடு. நிறைவான வாழ்க்கை. அதிலே மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். பள்ளிக்கூடம் போகும் இளவரசிகள் போல அந்தக் குழந்தைகளும் இருந்தார்கள். 

ஒருநாள் அத்தையின் கணவர் பகல் பொழுதில் என்றும் இல்லாதபடி "என்னவோ போல இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொடு' என்று கேட்டார். அத்தை கொடுத்த தண்ணீரைக் குடிக்கும் முன் சரிந்து அத்தை மடியிலேயே தன் காலத்தை முடித்துக் கொண்டார். திடீரென ஏற்பட்ட இந்த இழப்பில் அத்தை நிலைகுலைந்து போய் விட்டாள். பள்ளிக்கூடம் போகும்  மூன்று பெண் குழந்தைகள். காப்பாற்ற சகோதரர்கள் என்று யாரும் இல்லை. குழந்தைகள் தாயின் முகம் பார்த்து நின்றார்கள். 

கணவர் மறைந்து சில நாள்களில் மூடிய கடையைத் திறக்காவிட்டால் தன் குடும்பத்தை நடத்துவதும் குழந்தைகளை வளர்ப்பதும் கடினம் என்பது புரிந்துவிட்டது. கடை வேலையாட்களை நம்பி ஒப்படைத்துப் பார்த்தார். உறவுக்காரர்களைக் கடையில் வேலைக்கு அமர்த்திப் பார்த்தார். ஒன்றும் தேறவில்லை. கணவர் காலமாகி இரண்டே மாதங்களில் அத்தையே வந்து கடையில் கல்லாவில் உட்கார்ந்து விட்டாள். தன் தேவைகளுக்காகக் கூட ஒரு கடைகண்ணி என்று போகாத அத்தை பலசரக்குக் கடையில் வியாபாரத்தை முழு மூச்சாய் கவனிக்கத் தொடங்கினாள். 

காலையில் ஏழு மணிக்குக் கடையைத் திறந்தால் இரவு பத்து மணி வரை அத்தையை எந்த நேரத்திலும் கடையில் பார்க்க முடியும். சில ஆண்டுகளில் அத்தைக்கு வியாபார நுணுக்கங்கள் எல்லாம் அத்துப்படி ஆகிவிட்டது. குடும்பத்தையும் கடையையும் மிக நேர்த்தியாகவும் லாகவமாகவும் நடத்திக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளில் காலத்தின் தேவையைப் புரிந்து கொண்டு அத்தை அதற்கேற்ப வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் கடை வாடிக்கையாளர்களின் அடுத்த தலைமுறையையும் தக்கவைத்துக் கொள்ளத் தன் கடைக்குப் பக்கத்திலேயே புதிதாக சூப்பர் மார்க்கெட் தொடங்கினார். இரண்டு கடைகளிலும் அமோகமாக வியாபாரம் நடந்தது. அத்தை மரியாதைக்குரிய பெண்ணாக அனைவராலும் பார்க்கப்பட்டார்.

குடும்பத்திலும் அத்தையின் கட்டுக்கோப்பான வளர்ப்பில் பெண் குழந்தைகள் நன்முறையில் பொறுப்போடு வளர்ந்தார்கள். முதல் பெண் மருத்துவர். இரண்டாம் பெண் என்ஜினீயர். மூன்றாமவள்  இன்ஜினியரிங்  படித்து முடித்துவிட்டு சூப்பர்மார்க்கெட்டைப் பார்த்துக் கொள்ள வந்துவிட்டாள். ஒரு சூப்பர்மார்க்கெட் இன்று மூன்று சூப்பர் மார்க்கெட்டுகளாக வளர்ந்து நிற்கிறது. இரண்டு பெண்களைப் பெரிய குடும்பங்களில் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொடுத்தாயிற்று.

அத்தை தனிப் பெண்ணாக உலகத்தை எதிர்கொள்ளத் தொடங்கி இருபதாண்டு காலத்தில் ஒரு சறுக்கல் இல்லை வளர்ச்சியோ பன்மடங்கு. அத்தை ஊருக்குள் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எந்த ஒரு பெண்ணுக்கும் வாழ்வின் மீது நம்பிக்கை வந்துவிடும். உறவுகள் அண்டை வீட்டுக்காரர்களின் சொந்தப்பிரச்னைகள் தொடங்கி ஊர் பொது விஷயங்கள் வரை அத்தையிடம் உதவியும் ஆலோசனையும் பெறுவது வழக்கமாகிவிட்டது. 

இன்றைக்கு அத்தை பல தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகர், சில அறக்கட்டளைகளின் அறங்காவலர் என்று சமூகத்தில் தனக்கென தனி அடையாளத்தோடு உயர்ந்து நிற்கிறார். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி கூட அத்தையின் பேச்சைக் கேட்டுவிட்டால் நம்பிக்கையோடு எழுந்து ஓடத் தொடங்கி விடுவான் என்பார்கள். அத்தையிடம் எதைப் பற்றிப் புலம்பினாலும் அதற்கு ஒரு கதை சொல்லி நம்மைத் தேற்றிவிடுவார். அத்தை கதையோடு அத்தையிடம் நான் கேட்ட கதையையும் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலை இருபுறமும் காடு போல உயரமான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து நின்றன. அந்த சாலையில் ஒருவன் பசியோடு நடந்து போய்க் கொண்டிருந்தான். பழங்கள் நிறைந்த மரம் ஒன்றைக் கண்டதும் அந்தப் பழங்களை உண்டு பசியாறி மரத்தடியில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று நினைத்தான். உடனே மரத்தில் ஏறினான். கைக்கெட்டிய பழங்களைப் பறித்து சாப்பிட்டான். அப்பொழுது நல்ல கனிந்த பழங்கள் மற்றொரு கிளையின் நுனியில் இருப்பது அவன் கண்ணில் தென்பட்டது. அவற்றைப் பறிக்க நகர்ந்த பொழுது கிளை முறிந்து விடவே அவன் சுதாரித்து கிளையின் அடிப்பாகத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.
கிளையில் தலைகீழாகத் தொங்கி கொண்டிருந்தவனுக்கு கீழே விழுந்தால் தன்கதி அதோகதி என்று பயம் பற்றிக் கொண்டது. கண்களை இறுக மூடிக்கொண்டான். பயத்தில், "யாராவது என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று  அழத் தொடங்கினான்.

சற்றுநேரத்தில், தற்செயலாக அந்தப்பக்கம் வந்த முதியவர் அவனுடைய நிலையைப் பார்த்தார். அப்படியொன்றும் அபாயமான நிலை இல்லை. அவனுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டலாம் என்று, "தம்பி" என்று அழைத்தார். யாரோ நிற்பது தெரிந்ததும் கண்களைக்கூட திறக்காமல் இன்னும் பலமாக அவன் கூக்குரல் எழுப்பினான். 

இதை பார்த்த முதியவர் ஒரு சிறிய கல்லை எடுத்து மரத்தில் தொங்கி கொண்டிருந்தவன் மீது எறிந்தார். கல் மேலே பட்டவுடன் சுரீர் என்று வலி ஏற்பட்டது. இது அவனை ஆத்திரமடையச் செய்தது. "உதவி கேட்டவனுக்குத் துன்பம் தருகிறீரே இது நியாயமா?" என்று கேட்டான். முதியவரோ மீண்டும் ஒரு கல்லை எடுத்து அவன் மீது வீசினார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது. 

கண்களைத் திறந்து பார்த்து பக்கத்துக் கிளை ஒன்றைப் பற்றினான். முதியவரைப் பார்த்து," நான் மட்டும் கீழே வந்தால் நீர் தொலைந்தீர்" கோபமாகச் சொன்னான். முதியவரோ சிரித்துக் கொண்டே இன்னுமொரு கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார். அவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து எம்பி மேலே இருந்த பெரிய கிளைக்குத் தாவினான். 

அவனுக்கு மரத்திலிருந்து இறங்குவது இப்பொழுது வசதியாக இருந்தது. இறங்கி வந்தான். முதியவரைப் பார்த்து," இப்படிச் செய்யலாமா? உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனைத் துன்புறுத்துவது என்ன அறம்?" என்று வினவினான். 

முதியவர், "தம்பி நான் உன்னைக் காப்பாற்றவே செய்திருக்கிறேன். நீ ஒன்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கவில்லை. என்றாலும் உன் மனதில் ஏற்பட்டிருந்த பயம் உனக்கு இருந்த வாய்ப்புகளை நீ உணர முடியாத படி செய்திருந்தது. நான் கல்லை விட்டெறிந்தவுடன் உனக்கு பயம் நீங்கி ஆத்திரம் வந்துவிட்டது. அதனால் உனக்கு தப்பிப்பதற்கு இருந்த வாய்ப்புகள் புலப்பட்டுவிட்டன. இதோ மரத்திலிருந்து பாதுகாப்பாய் கீழே இறங்கி வந்துவிட்டாய் பார்." என்று சொல்லி முடித்தார். அவன் முதியவருக்கு நன்றி கூற இருவரும் அந்தக் காட்டு வழியில் இணைந்தே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். 

பெண்களைப் பொறுத்தவரை நாம் பெரும்பாலும் நம்மைச் சுற்றி இருக்கும் நல்வாய்ப்புகளைக் காணத் தவறுவது நமக்குள் இருக்கும் பயத்தால் தான். பயம் என்ற உணர்வைக் கடந்து விட்டால் கண்முன்னே வாய்ப்புகள் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். சிலநேரங்களில் இந்த வாய்ப்புகள் நாம் நினைத்ததை விடவும் சுலபமானவையாகவும் இருக்கக்கூடும். அத்தை பயத்தை உதறினார். வெற்றிப் பெண்ணாக வலம் வருகிறார். இப்படி, நம்மோடு வாழும் இன்னும் பல அத்தைகளின் வெற்றிக் கதைகளையும் தொடர்ந்து பேசுவோம்.

தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT