மகளிர்மணி

வாழ்நாள் முழுவதும்...!

28th Aug 2022 06:00 AM | ஆர்.பட்டாபிராமன் கூற மாலதி சந்திரசேகரன்.

ADVERTISEMENT

 

காமராஜர்,  ராஜாஜியின் உற்ற தொண்டனாக,   காந்திஜியின் வழியில் கதர், தீண்டாமை, மது ஒழிப்பு, தலித்துகளின் மறுவாழ்வுக்காக தன் வாழ்நாளைச் செலவிட்டவர் தேவராஜ அய்யங்கார்.

மும்பையில் 1942 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-இல் "வெள்ளையனே வெளியேறு' மாநாட்டில் காந்திஜி, வல்லபபாய் பட்டேல், காமராஜர் உள்பட பல தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற காமராஜர் உள்ளிட்டோரை சென்னையிலேயே கைது செய்ய போவதாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் கிடைத்தது.  மும்பையிலிருந்து சென்னை  திரும்பும் அந்த ரயிலில்,  காமராஜரும்  மாநிலப் பிரதிநிதிகளும் திரும்பினர்.  அதே ரயிலில் ஆந்திரத் தலைவர் என்.சஞ்சீவ ரெட்டியும் வந்தார். ஆனால் ரயில் ஆந்திர எல்லைக்குள் நுழைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

காமராஜர் தான் கைதாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை.  அவ்வாறு கைது செய்யப்பட்டால், மும்பை மாநாட்டிலிருந்து கொண்டு வந்த தீர்மானங்கள்,  துண்டுப் பிரசுரங்கள்  காங்கிரஸ் தொண்டர்களுக்கு, விநியோகிக்க முடியாமல், ஆங்கிலேய அரசு போலீஸாரால் அழிக்கப்பட்டுவிடுமோ?  என்று அஞ்சினார்.  

ஆகஸ்ட் புரட்சிக்கான முயற்சிகள் வீணடிக்கப்பட்டு விடுமோ என்பதே அவரின் பிரதானக் கவலையாக இருந்தது.  வழிநெடுக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களுக்குத் தேவையான தலைவர்களைக் கைது செய்ய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  ரயில் தமிழக எல்லைக்குள் நுழைவதற்கு முன் வரதன் கைது செய்யப்பட்டார். 

மும்பை எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து வெளியே  பார்த்த காமராஜர், அங்கு  இறங்கி விடவேண்டும் என்று தீர்மானித்தார். 

அரக்கோணத்தில் இறங்கியதற்கு முக்கிய காரணம் , தேவராஜ அய்யங்கார் . அவர் அரக்கோணத்தின்  முக்கிய காங்கிரஸ் பிரஜை என்பதும், ராஜாஜியின் நெருங்கிய தொண்டர் என்பதை அறிந்தவர் காமராஜர்.  மேலும், அடுத்த  6 மாதத்திலேயே, "வெள்ளையனே வெளியேறு'  என்ற இயக்கம் தொடங்க இருப்பதாலும், காமராஜர் தேவராஜ அய்யங்காரை மனதில் கொண்டே, அரக்கோணத்தில் இறங்கினார். 

இதற்கு முன்னதாகவே அரக்கோணம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு, காமராஜர் வருவதை தேவராஜ அய்யங்கார் தெரிவித்துவிட்டார். அவரின் அறிவுறுத்தலின்படி, ரயில் நிலையத்தில் காத்து கொண்டிருந்தனர் காங்கிரஸ் தொண்டர்கள். 

தொண்டர்களைக் கண்ட காமராஜர், தேவராஜ அய்யங்காரை பற்றி விசாரிக்க , சோளிங்கரில் இருப்பதாகவும் ரயில் நிலைய வாசலில் ஜட்கா வண்டி தங்களுக்காக காத்திருப்பதையும் தெரிவித்தனர். 

யாரும் அடையாளம் கண்டு கொள்ளாதபடி,  ஜட்காவில் ஏறி சில தொண்டர்களுடன் ரகசியமாக சோளிங்கர் புறப்பட்டார் காமராஜர். முன்னதாக, தலைக்கு முண்டாசும்,  மும்பை மாநாட்டில் எடுத்து கொண்ட தீர்மானங்களை, துண்டுச் சீட்டுகளை தொண்டர்கள் உதவியுடன், மூட்டையாக கட்டப்பட்டன.  அவை காமராஜர் தலையில் வைக்கப்பட்டன.  ஒரு கிராமிய தோற்றத்தில் காமராஜர் புறப்பட்டார். 

இதில் முதலில் காமராஜருக்கு உடன்பாடில்லை. தன்னை சார்ந்த தலைவர்கள், சிறைபடும்போது தான் கைது செய்யப்படுவது குறித்து அஞ்சவில்லை.  ஆனால் ராஜாஜியின் அறிவுறுத்தலுக்கான காரணம்  தேவராஜ அய்யங்கார் மூலமாக அறிந்த காமராஜர்  அவருடன் புறப்பட தயாரானார்.  மாவட்ட வாரியாக ஆகஸ்ட் புரட்சிக்கான ஏற்பாட்டுக்குப் பிறகுதான் அவர் தன்னைக் கைது செய்ய முடிவு செய்தார். 

ஜட்கா வண்டி அரக்கோணத்தில் இருந்து, இரவோடு இரவாக சோளிங்கரை நோக்கி பறந்தது.  முன்னதாக தேவராஜ அய்யங்கார் சோளிங்கரில் நடத்தி வந்த ராஜேந்திர பிரசாத் ஓட்டலில், சுந்தராஜுலு நாயுடு உட்பட  தேவராஜ அய்யங்காருடன் காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர்.  அவர்களுடன் மும்பை மாநாடு குறித்து விவரித்தார் காமராஜர்.

மும்பையில் இருந்து கொண்டு வந்த  தீர்மானங்கள்,  துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த காமராஜர் அடுத்த கட்ட போராட்டத்தை தொண்டர்களிடம் விவரித்தார். தேவராஜ அய்யங்காரிடமும் தீர்மானங்களை விநியோகிக்குபடி பணித்தார். 

பின்னர் தேவராஜ அய்யங்காரின் ஓட்டலிலேயே சாப்பிட்டு விட்டு, ராஜாஜி தேவராஜ அய்யங்காரிடம் அறிவுறுத்தியபடி,  ராணிப்பேட்டை கல்யாணராமன் ஜயர் வீட்டுக்குப் புறப்பட தயாரானார் காமராஜர். காமராஜரின் முக்கிய நண்பர்களில் கல்யாணராமன் ஐயரும் ஒருவர். 

காமராஜர் புறப்பட கார் ஏற்பாடு செய்யப் பட்டு, சோளிங்கரில் இருந்து வழியனுப்பப்பட்டார் காமராஜர்.  இவர்களுடன் சில காங்கிரஸ்  தொண்டர்களும் ராணிப்பேட்டை வரை உடன் சென்று சந்தேகம் வராத வண்ணம் திரும்பிவிட்டனர். 

ராணிப்பேட்டையில் கல்யாணராம ஐயரின் துணையுடன் வேலூர் முதல் தூத்துக்குடி உட்பட தான் வந்த நோக்கத்தை செவ்வனே செய்தார். வேலூர் உபயதுல்லா காமராஜருக்கு பெரும் உதவிகரமாக இருந்தார். 
தமிழகத்தில்  ஆகஸ்ட் புரட்சிக்கான விதையை விதைத்து விட்ட காமராஜர், விருதுநகரில் தானே சரணடைந்தார். காமராஜரை கைது செய்தனர் போலீசார். 

இதன் பிறகு வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ்  தொண்டர்களின் ஒவ்வொரு வீடுகளையும் போலீஸார், முற்றுகையிட்டனர். வீடு, வீடாக சோதனை செய்தனர்.  ஆனால் அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. 

இதன் தொடர்ச்சியாக தேவராஜ அய்யங்காரும், தடுப்புக் காவல் சட்டத்தில், காமராஜர் சிறைப்படுத்தப்பட்ட அதே சிறையில், வேலூர், தஞ்சை சிறையில் இரண்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டார். 1944-இல் விடுதலை செய்ய பட்டார். 

1979-ஆம் ஆண்டு அக். 19-இல் காலமானபோது,  சாதி பேதமின்றி மக்கள் திரண்டு தேவராஜ அய்யங்காரின் பூத உடலை மயானத்துக்கு சுமந்து சென்று, அஞ்சலி செலுத்தியது வரலாற்று நிகழ்ச்சி. 

அரக்கோணம் தியாகி தேவராஜ அய்யங்காரை நினைவு கூர்ந்து,  குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனால் 1992-இல் திறந்து வைக்கப்பட்ட நினைவுத் தூண்  இப்போதும் சிறப்புடன் திகழ்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT