மகளிர்மணி

கணிதம் கற்பித்தலில் புதுமை!

வி.குமாரமுருகன்

வழக்கமான மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியராக இல்லாமல் வித்தியாசமாகக் கற்பித்தல் பணியை செய்து வருகிறார் நல்லாசிரியர் விருது பெற்ற பெண் ஆசிரியர்.

அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும்ப.யுவராணி, அவரின் கற்பித்தல் முறையால் கணிதம் மாணவர்களுக்கு கற்கண்டாய் மாறிபோயுள்ளது.

இதுகுறித்து யுவராணியிடம் பேசியபோது:

""அரசுப் பணியில் சேர்ந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. மாணவர்களுக்கு கணிதம் என்றாலே கசப்பாகவும், கடினமானதாகவும் இருப்பதாக நினைக்
கின்றனர்.

தமிழ் பாடத்தை கற்பிப்பவர்கள் திருவள்ளுவர் குறித்தும், இளங்கோவடிகள் குறித்தும்,கம்பன் குறித்தும் ,பாரதி குறித்தும் பேசுகிறார்கள். ஆங்கிலம் கற்பிப்பவர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர் ,வில்லியம் போன்றவர்களை உதாரணமாக பேசி கற்பித்து வருகின்றனர்.

கணிதம் கசப்பல்ல; அது எப்போதுமே கற்கண்டுதான். எங்கள் பள்ளியில் கணிதத்துக்கு என்று தனியாக ஆய்வகமும் உருவாக்கியுள்ளோம். முன்னர் பொம்மலாட்ட வழியிலும், வில்லுப்பாட்டு கதைகள், நாடகங்கள் மூலமாக கணிதத்தைக் கற்பித்து வந்தேன். இந்தக் கல்வியாண்டு முதல்தான் பல்வேறு வேடம் தரித்து கற்பிக்கும் முறையை கையில் எடுத்திருக்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் பாடம் குறித்த குறிப்பேட்டைத் தயார் செய்யும்போதே, எந்த வேடத்தில் அல்லது எந்த கணித மேதை வேடத்தில் வந்து பாடத்தை நடத்துவது என திட்டமிடுவேன். பின்னர் அதற்கு தேவையான உடை, பிராப்பர்டீஸ் எனப்படும் உதவிப் பொருள்களை வாங்கி வைத்து விடுவேன். பின்னர் அந்த வேடத்துடன் வந்து பாடத்தை நடத்துவேன்.

கணிதம் என்பது வாழ்க்கையின் ஒவ்வொருநிமிடத்திலும் தொடர்புடைய ஒன்று என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வாழ்க்கையுடன் தொடர்புடைய விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன்.

"கணமொழி' என்றால், எங்கெங்கெல்லாம் வாழ்க்கையில் பயன்படுகிறது என்பதையும் தெரிவித்து விடுவேன். அப்படி சொல்லி கொடுப்பதால், வாழ்க்கையில் அத்தகைய இடம் வரும் போதெல்லாம் கணிதம் அவர்களுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

மாணவர்களுக்கு கணித மேதை என்றால் ராமானுஜரை மட்டும்தான் தெரியும். அதை தாண்டி மற்ற கணித மேதைகளின் கணித கண்டுபிடிப்புகளை, அவர்களைப் போல வேடமிட்டு கற்பித்தால் நிச்சயம் பலனிக்கிறது.

"சிறிய குழந்தைகளுக்குத்தான் இது சரி வரும்' என சிலர் சொன்னார்கள். "நீங்கள் உயர்வகுப்பு எடுக்கிறீர்களே? அவர்கள் வேடம் தரித்து பாடம் எடுத்தால் கேலி செய்ய மாட்டார்களா?' எனவும் சிலர் கேட்டனர். ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களும் குழந்தைகள்தானே? அதனால் கேலி செய்தாலும் பரவாயில்லை என அவர்களிடம் சொல்லி விட்டு பாடம் எடுக்க தொடங்கினேன். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது. கணிதப் பாட வேளை எப்போது வரும் என மாணவர்கள் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

கணிதத்தின் மீது முதலில் ஒரு ஈர்ப்பை மாணவர்களுக்கு உருவாக்க இது உதவுகிறது. கோமாளி, மிக்கி மவுஸ், மற்றும் கணித மேதைகள் வேடம் தரிப்பதற்கு 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ஆகும்.

பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் ஆசிரியர்களின் கடமை. அதற்கு நாம் தேர்வு செய்யும் வழி சிறப்பானதாக இருக்க வேண்டும். அந்த வழி மூலம் மாணவர்கள் சிறப்பான கற்றலை அடைந்து விட்டால் அதைவிட ஆனந்தம் ஆசிரியருக்கு எதுவும் கிடையாது.வெறும் வேடம் மட்டுமே எனது நோக்கமல்ல. வேடத்தின் மூலம் கற்றலை எளிதாக்குவதுதான் எனது நோக்கம். ஆடல்,பாடல் போன்ற வழியிலும் வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக்கி கற்பித்தால் அது எளிதாக மாணவர்களை சென்றடையும் .

என்னுடைய இந்த முயற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

கரோனா தொற்று காலத்தில், ஆன்லைனில் கற்பித்து வந்ததுடன், மாணவர்களின் வீடுகளுக்கே தினமும் சென்று கணிதத்தைக் கற்பித்து வந்தேன்.

இதை பாராட்டி , கடந்த ஆண்டில் நல்லாசிரியர் விருதை தமிழக அரசு வழங்கியது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT