மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 46: கூடா நட்பு - கேடாய் முடியும்!

22nd Sep 2021 06:00 AM | சாந்தாகுமாரி சிவகடாட்சகம்

ADVERTISEMENT


வரதராஜனின் குடும்பம் புகழ் வாய்ந்ததாகக் திகழ்ந்தது. வரதராஜனின் தந்தை நாராயணன் சென்ற நூற்றாண்டின் மத்தியில், இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த பொழுதே, வங்கியில் மேனேஜராகப் பணியாற்றியவர்.

வரதராஜன் தன்னுடைய வழிவழியாக வந்த குலப் பெருமையை இழக்காமல், அதே சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தார். ஒரு பெரிய கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்தாலும், ஒரு தீயப் பழக்கம் கூடத் தன்னை அணுகாமல் பார்த்துக் கொண்டார்.

""ஜானகி இங்கே கொஞ்சம் வரியா'' என்று வரதராஜன் குரல் கொடுத்தார்.

""இதோ வந்துட்டேங்க'', என்று சொல்லிக் கொண்டே ஜானகி விரைந்து வந்தாள்.

ADVERTISEMENT

அன்றைய தினம் வரதராஜனின் அப்பா நாராயணனுக்குத் திதி. அதனால் வீட்டில் வரதராஜன் காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க வில்லை.
""ஜானகி, தலை சுத்தறாப்போல இருக்கு, கொஞ்சம் மோர் தரியா?''

""நான் அப்பவே சொன்னேன். வயசு அறுபதைக் கடந்துடுச்சு. இப்படிப் பட்டினி இருக்காதீங்க என்றேன். என் பேச்சைக் கேட்டாத்தானே. இருங்கோ மோர் கொண்டு வரேன்''.

""ஜானகி, மதுசூதனன் எங்கே?''

"'ஆமாம், உங்க புள்ளையாண்டான் என்னைக்கு, இதுபோன்ற சம்பிரதாயங்களில் கலந்துக் கொண்டிருக்கிறான். சின்ன வயசுலே பய பக்தியாக இருந்ததோட சரி, எப்போ லண்டனுக்கு மேல் படிப்பு படிக்கப் போனானோ, அப்பவே ஆள் மாறிப் போயிட்டான். அவன் ஹேர் ஸ்டைலும், அங்கங்கே கிழிஞ்ச பேண்டைப் போட்டுட்டு அலையறதும் பார்க்கச் சகிக்கலை''.

""வெளிநாட்டுலே படிச்சப் புள்ள, அப்படித்தான் இருப்பான்''.

""நம்ம பாரம்பர்யம் என்ன? இவன் இப்படி நடந்தா நல்லாவா இருக்கு?''

""வெளிநாட்டுக்காரியைப் பொண்டாட்டியா அழைச்சுட்டு வராம இருந்தானே அதுவே எதேஷ்டம்'' என்றார் வரதராஜன்.

மதுசூதனன் ரொம்பத்தான் மாறிப் போயிருந்தான். சென்னையில் பி.ஏ., படிப்பு படிக்கிற வரையில், தன் குடும்பத்துப் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தான். அப்பாவைப் போலவே செந்நிறத் திருமண் அணிந்துதான் கல்லூரிக்குச் சென்றான். ஒரு கெட்டப் பழக்கம் கிடையாது. கல்லூரி, பிறகு வீடு, படிப்பு என்று இருந்தான்.

மதுசூதனனின் வாழ்க்கையின் இலக்கு, ஒரு வக்கீலாக ஆகவேண்டும் என்றே இருந்தது. அதுவும் லண்டன் சென்று கிங்ஸ் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

இருபத்தியொரு வயதான மதுசூதனனுக்கு எப்படித் திருமணம் செய்வது? ஜானகிக்குத் தன் மகனை, லண்டனுக்கு அனுப்பவே மனசு இல்லை. ஆனாலும் தன் மகனின் ஆசையைப் பூர்த்தி செய்ய, மனதைக் கல்லாக்கிக் கொண்டு அனுப்பி வைத்தாள்.

நான்கு வருடப் படிப்பை முடித்துக் கொண்டு மதுசூதனன் சென்னைக்குத் திரும்பிய பொழுது இருபத்து ஐந்து வயதைக் கடந்திருந்தான். ஏர்போர்ட்டில் மகனை வரவேற்கச் சென்றிருந்த வரதராஜனும், ஜானகியும் அவனை அடையாளம் கண்டுக் கொள்ள முடியாமல் தவித்தனர்.

தொங்கு மீசை, தாடி, கன்னங்களில் பாதியை அடைத்துக் கொண்டிருந்த கிரிதா, கழுத்துவரைத் தொங்கிய தலைமுடி, ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட், மூக்கின் மீது அமர்ந்திருந்த கண்ணாடி, அது ஸ்டைலுக்கா இல்லை பார்வை குறைக்காகவா புரியவில்லை,

""ஹாய் டாடி, மம்மி'' என்று அவன் ஓங்கிக் குரல் கொடுத்த பொழுதுதான், கூட்டத்தில் தொலைந்த பிள்ளையை இனம் கண்டுக்கொண்டு ஆனந்தம் அடைந்த நிலையை எய்தினர்.

உருவம் மட்டுமா மாறி இருந்தது, குணமும் அடியோடு தடம் புரண்டு இருந்தது.
மறந்தும் பூஜை அறைக்குள் வருவதில்லை. கோயில் குளம் என்று போவது இல்லை. பெற்றோரிடம் நின்று பேசுவதில்லை. தன் அறைக்குள் தாளிட்டுக் கொண்டு மணிக்கணக்காக செல்போனில் பேசுவது, இன்டர்நெட்டில் மூழ்கி இருப்பது, காதுகளில் மாட்டப்பட்டிருக்கும் புளூடூத்தில், ஜாஸ் பாடல்களைக் கேட்பது என்று பொழுதைக் கழித்தான்.

ஒருவழியாக, டெல்லியில் இருக்கும் புகழ்வாய்ந்த வக்கீல் சிவராமனிடம் ஜூனியராக இணையப்போவதாகக் கூறிவிட்டு மதுசூதனன் டெல்லிக்குக் கிளம்பிப் போய்விட்டான்.

""ஏங்க, நம்ப புள்ளையாண்டானுக்கு வயசு ஏறிட்டே போறது, அவனுக்கு ஒரு கால்கட்டுப் போட வேண்டாமா'' - ஜானகி, வரதராஜனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

""சரி'', என்று வரதராஜனும் தன் பிள்ளைக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஒரு பெரிய இடத்தில் அழகான, படித்த பெண் அமைய இருந்தது. பெண் வீட்டார் மதுசூதனனைப் பற்றியத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.

ஒரு காலைப்பொழுது, வரதராஜன் தினசரித் தாளில் மூழ்கியிருந்தார். ஜானகி சமையலில் ஈடுபட்டிருந்தாள். அவள் வாய், அம்மன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தொலைபேசி கிணு கிணுக்க வரதராஜன் ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தார், எதிர் முனையில்...

""வரதராஜன் சார், பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் வந்தவர்களாச்சேன்னு உங்களிடம் சம்பந்தம் பேச வந்தேன், உங்க மகனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நல்ல காலம், சம்பந்தம் செய்வதற்குள் நன்றாக விசாரித்தோம். உங்கப் பிள்ளைக்குக் குடிப்பழக்கம், போதை பொருள் பழக்கம். இது தவிரப் பல பெண்களுடன் உறவும் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். முதலில் பிள்ளையைத் திருத்துங்கள், பிறகு அவனுக்குக் கல்யாணம் பேசலாம். நல்ல காலம், என் முன்னோர் செய்த புண்ணியம் எங்கள் பெண் தப்பித்தாள்'' டொக்கென்று லைன் கட் செய்யப்பட்டது.

அவமானத்தால் வரதராஜனின் முகம் சிவந்துப் போனது. விஷயத்தை அறிந்த ஜானகி பெரும் குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

வெளிநாடுகளுக்குப் படிக்கப் போகின்ற, எல்லோருமா இப்படிச் கெட்டுப் போகிறார்கள், கூடா நட்பும், கெட்டப் பழக்கங்களும் ஒருவனை நாடி வந்தால் அதை ஒதுக்கக் கூடிய அறிவும், தெளிவும் இல்லா விட்டால் இப்படிப்பட்ட இழிச் சொற்கள்தானே வந்துசேரும்.

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது தன் இயல்பை இழந்தது போல, மதுசூதனன் தன் குலப்பெருமையை இழந்து நிற்கிறான். அவனை அந்தத் தெய்வமே காப்பாற்றட்டும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் : 452)

பொருள் : தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது தன் இயல்பை இழந்து, நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல் மனிதரின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகி விடும்.

(தொடரும்)

Tags : magaliarmani Even friendship
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT