மகளிர்மணி

ஆவணப்படம்: சுவாரசியமான அனுபவம்!

எஸ்.சந்திரமெளலி


தீப்தி சிவன். மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர்.

ஆவணப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு, பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் வாழ்க்கையை "டீகோடிங் ஷங்கர்" என்ற பெயரில் ஆவணப்படமாக்கி, ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்றுள்ளவர். ஜீ கேரளம் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியாகவும் இருந்தவர். திரைப்படப் பிரபலங்களான சந்தோஷ் சிவன் மற்றும் சங்கீத் சிவனின் சகோதரரான சஞ்சீவ் சிவன் இவரது கணவர். சங்கர் மகாதேவன் குறித்த தனது ஆவணப்பட இயக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:

நடிகையாக அறிமுகமான நீங்கள் ஆவணப்பட இயக்குநர் ஆனது எப்படி?
என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பெரிய முயற்சி ஏதுமில்லாமல் தானாகவே நிகழ்ந்தன. நான் இயக்குநர் வேணு நாகவள்ளி இயக்கத்தில் மோகன்லால் நடித்த "களிப்பாட்டம்' என்ற மலையாளப் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானேன். நான் நடித்த இன்னொரு முக்கியமான படம் இயக்குநர் ஹரிதாசின் "மூணிலொண்ணு'. டிஸ்கவரி, அல்ஜசீரா போன்ற தொலைக்காட்சிகளுக்கு ஆவணப்படங்கள் எடுத்திருக்கும் சஞ்சீவ் சிவனுடனான சந்திப்பும், திருமணமும் கூட இயல்பாகவே நிகழ்ந்தன. "அபரிசித்தன்' என்ற படத்தின் புரொடக்ஷன் டிசைனராகப் பணியாற்றினேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில், பாடகர் சங்கர் மகாதேவனின் சுவாரசியமான வாழ்க்கை அனுபவங்களை, அவரது இசையுலக வெற்றிக் கதையை, அறியப்படாத அவரின் மற்ற முகங்களை ஆவணப்படமாக எடுக்க முடிவு செய்து, அதன் இயக்குநர் ஆனேன்.

சங்கர் மகாதேவனை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சங்கர் மகாதேவன் சினிமாவில் பாட ஆரம்பித்தது முதலே அவருடைய விசிறி நான். அவரது குரலை, திறமையை சிலாகித்து, நான், பலமுறை என் கணவரிடம் பேசியதுண்டு. எனவே, அவர்தான் ஒருநாள், "சங்கர் மகாதேவனைப் பற்றி ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கலாமே?" என ஐடியா கொடுத்தார். இன்னொரு விஷயம், எனக்கு எப்போதுமே ஒரு கருத்து உண்டு. இறைவன் சிலருக்கு சில பிரத்யேகமான திறமைகளைக் கொடுக்கிறார். ஆனால் பல்வேறு காரணங்களால், அந்தத் திறமைகள் மெருகூட்டப்படாமலேயே போய்விடுகின்றன.

சங்கர் மகாதேவன், சிறுவயது முதலே இசையில் பயிற்சி பெற்று, திறமையை வளர்த்துக் கொண்டாலும், எஞ்சினீயரிங் படித்துவிட்டு, சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி, ஒரு கட்டத்தில், அதை உதறித் தள்ளிவிட்டு, முழு நேர இசைக் கலைஞர் ஆனவர். அவருடைய இந்த இசை மற்றும் வாழ்க்கைப் பயணம் சுவாரசியமானது; மற்றவர்களுக்கு மிகவும் இன்ஸ்பிரேஷன் ஆனது. எனவே, அவரைப் பற்றி ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தேன்.

இதற்காக அவரை அணுகியபோது, அவர் என்ன சொன்னார்?

அவருக்கு ஓர் இனிய ஆச்சர்யமாகவே இருந்தது. அவரைப் பற்றி முன்கூட்டியே நான் தெரிந்து வைத்திருந்த தகவல்களை எல்லாம் நான் சொன்னபோது, அவர், "என்னைப்பற்றி, என்னைவிட நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்களே!" என்று சொல்லிவிட்டு, ஆவணப்பட திட்டத்துக்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். வழக்கமாக ஆவணப்படம் என்றால், பின்னணிக் குரல்தான் பிரதானமாக இருக்கும், சம்பந்தப்பட்டவர் குறித்த தகவல்களை பின்னணிக் குரலில் சொல்லிக் கொண்டே போவார்கள். ஆனால், இந்த ஆவணப்படத்தை வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு எடுக்கவேண்டும் என்பதில் நான் மிகவும் குறியாக இருந்தேன். எனவேதான், அவரே தன் வாழ்க்கையைப் பற்றி பேசுவதாக திட்டமிட்டுக்கொண்டேன். அதே சமயம் அவர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பலரும் இதில் பங்களிக்கவும் வழி செய்தேன். உதாரணமாக, அவர் தன் இளமைப் பருவம் பற்றி பேச ஆரம்பித்த சில விநாடிகளில், அவரது தாய் வெகு இயல்பாக, தன் மகனின் சின்ன வயசு பற்றி நினைவு கூறுவார். சினிமா உலக அனுபவங்களைப் பற்றி பேசும்போது, அந்த அனுபவங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் அவருடன் சேர்ந்து கொள்வார்கள். இப்படி சின்னச் சின்னதாக செய்த புதுமைகள், படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டி உள்ளன.

படப்பிடிப்பு அனுபவம் பற்றி?

எனது மூன்றாவது குழந்தையை கர்ப்பத்தில் சுமந்திருந்தபோதுதான் இந்த படத்தின் வேலைகள் ஆரம்பித்தன. எனவே, படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முடித்தவுடன், மகளின் பிரசவம். அடுத்த மூன்றாவது மாதத்தில் கைக் குழந்தையோடு, ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டேன். இதைப் பார்த்துவிட்டு எங்கள் யூனிட்டில், சிலர், தீப்தி தன் குழந்தைக்கு இப்போதே சினிமாவில் பயிற்சி கொடுக்கிறார் என்று தமாஷாக சொன்னார்கள். தோளில் குழந்தையை கட்டிக் கொண்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயங்கியது ஓர் வித்தியாசமான அனுபவம். மும்பை மற்றும் அதன் புறநகரில் உள்ள ஓர் பண்ணைவீடு உள்ளிட்ட சில இடங்களில் படம்பிடித்தோம். சங்கர் மகாதேவனின் ஒப்புதல் பெற்றது முதல், படத்தை எடுத்து முடிக்கும்வரை சுமார் இரண்டரை வருடங்கள் ஆனது.

படத்தின் முக்கியமான ஹைலைட் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

சங்கர் மகாதேவன், ஒரு குறிப்பிட்ட இசையை எப்படி தன் கற்பனை திறன் மூலமாக உருவாக்குகிறார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் இருக்கும். நான் இதைச் சொன்னபோது, அவர் ஈஷன். லாய் ஆகிய தன் சகாக்களோடு சேர்ந்து ஒரு பாடலுக்கு இசை அமைக்கப் போவதாகவும், அதை அப்படியே லைவ் ஆக படம் பிடித்துக் கொள்ளும்படியும் சொன்னார். அது மிகவும் யதார்த்தமாகவும், புதுமையாகவும் அமைந்துவிட்டது.

"டீகோடிங் ஷங்கர்' பற்றி சங்கர் மகாதேவன் என்ன சொன்னார்?

அவரும், அவரது மனைவியும் சேர்ந்துதான் படம் பார்த்தார்கள். படத்தைப் பார்த்துவிட்டு. ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரது மனைவி கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். என்னைக் கட்டிப் பிடித்து, நெகிழ்ந்து போனார். எனக்கு வாழ்க்கையில் இதைவிட சிறந்த ஒரு பரிசு இருக்கமுடியாது. என் நன்றியை சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது எனக்கு மட்டுமில்லை, என் வருங்கால சந்ததியினருக்கும் ஒரு பொக்கிஷம் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

இந்தப் படத்துக்கு இத்தனை விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?

சினிமாவைப் பொருத்தவரை எனக்கு குரு என் கணவர்தான். இந்தப் படத்தை எடுத்து முடித்தபோது, அலாதியான ஒரு திருப்தி எனக்கு ஏற்பட்டது; பார்த்தவர்கள் பலரும் பாராட்டினார்கள்.

என் கணவர், இந்தப் படம் உனக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும்" என்று கூறினார். அவர் வாக்கு பலித்துவிட்டது.

இந்தப் படத்துக்கு டொரன்டோ, டோக்கியோ, சாந்தா மோனிகா, இந்தோ-பிரஞ்ச், லண்டன் என மொத்தம் ஒன்பது திரைப்பட விழாக்களில் விருது கிடைத்துள்ளது. அண்மையில் உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படம், சிறந்த இந்திய திரைப்படம் என இரு விருதுகள் கிடைத்தன.

சர்வ தேச விழாக்களில் கலந்துகொண்ட பலரும், ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் எப்படி எடுக்கவேண்டும் என்பதற்கு இந்தப் படம் இலக்கணம் வகுத்துள்ளது என்று பாராட்டினார்கள். ஆக, நிச்சயமாக இத்தனை விருதுகளை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT