மகளிர்மணி

மாதர்குல மாணிக்கங்களுக்கு சிலைகள்...

15th Sep 2021 06:21 AM | -தி.நந்தகுமார்

ADVERTISEMENT

 

சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்தியாவில் பங்கேற்ற முதல் பெண்மணி அஞ்சலையம்மாளுக்கு கடலூரிலும், பெண் சமூகச் சீர்த்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்த்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும், முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும் சிலைகள் வைப்பதாக சட்டப் பேரவையில் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த மூன்று பேரின் சொந்த ஊரிலே சிலைகள் அமைக்கப்பட இருக்கிறது. மாதர் குல மாணிக்கங்களாக, பெண்கள் முன்னேற பல்வழிகளில் பாடுபட்ட இவர்கள் மூவரின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம். கேட்டாலே அதிசயிக்கும் வகையிலும், ஆச்சரியமூட்டும் வகையில் மூவரின் வாழ்க்கை பயணமும் இருந்திருக்கிறது.

அஞ்சலையம்மாள்

ADVERTISEMENT

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற போராளி. கடலூரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் முத்துமணி- அம்மாக்கண்ணு. அஞ்சலை அம்மாளின் கணவர் முருகப்பன்.

இவரின் போராட்டக் குணம் பற்றி அறிந்த பாரதியார் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்து பாராட்டிச் சென்றார்.

சென்னையில் நிறுவப்பட்டிருந்த நீலன் என்ற ஆங்கிலேயரின் சிலையை அகற்றக் கோரி 1927-இல் மறியலில் ஈடுபட்டார். இதனால் அஞ்சலை அம்மாள், கணவர் முருகப்பன், 11 வயது மகள் லீலாவதி ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1934-ஆம் ஆண்டு காந்தியடிகள் கடலூர் வந்தபோது அவரை வரவேற்க போலீஸ் தடை விதித்திருந்தது. தடையை மீறி காந்தியை தமது வீட்டுக்கு அழைத்து வந்து அஞ்சலை அம்மாள் உபசரித்தார். அப்போது காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று புகழப்பட்டார்.

மது ஒழிப்பு. அந்நியத் துணி புறக்கணிப்பு. உப்பு எடுக்கும் போராட்டம். தனி நபர் சத்தியாகிரகம் என பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு 9 முறை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். கடலூர் தொகுதியில் இருந்து 1937, 1946 ஆகிய இரண்டு முறை சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சுதந்திரத்துக்குப் பிறகு கிராமத்தில் குடியேறி விவசாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுட்டார். தனது 71-ஆவது வயதில் 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி சிதம்பரம் அடுத்துள்ள சி.முட்லூர் கிராமத்தில் காலாமானர்.

மூவலூர் ராமாமிர்தம்

ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கீரனூருக்கு அருகேயுள்ள பாலூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் என்பதால், மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.

சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936-இல் வெளியான இவரது புதினமான மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர், 1925-இல் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகியபோது அவரோடு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930-இல் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது, அவருக்குத் துணை நின்றார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

1937 முதல் 1940 வரை நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.

இவர் மேற்கொண்ட தொடர் பிரசாரங்கள் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன.

தமிழக அரசின் ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

முத்துலட்சுமி ரெட்டி

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886-ஆம் ஆண்டு ஜூலை 30-இல் மகாராஜா கல்லூரியின் முதல்வர் நாராயணசாமி, சந்திரம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார்.

வீட்டிலேயே ஆரம்பக் கல்விகற்றார். மெட்ரிக். தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.பெண்ணாக இருந்த காரணத்தால் மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா, கல்வி உதவித் தொகையுடன் உயர்நிலைப் பள்ளியில் படிக்க இடம் அளித்தார். அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரே மாணவியாக அவர் இருந்தார்.

பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில் படித்த ஒரே இந்திய மாணவியாகவும் இருந்தார். கல்லூரியில் முதலாவது மாணவியாகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கமும் பெற்றார் முத்துலட்சுமி.

டாக்டர் டி. சுந்தராரெட்டியை 1914-ஆம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டார். சமூகச் சேவையில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் சுந்தராரெட்டியை முத்துலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

அன்னிபெசன்ட் அம்மையாரின் வழிகாட்டுதலின் கீழ் பெண்களுக்கான இயக்கங்களில் பங்கேற்றார். இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் 1926-இல் சென்னை சட்டமன்ற கவுன்சிலுக்கு அவர் நியமிக்கப்பட்டார். 1926-30 காலத்தில் அவர் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார். முதல் பெண் எம்எல்ஏ என்ற பெயரைப் பெற்றார். அடையார் புற்றுநோய் மருத்துவமனை இவரால் நிறுவப்பட்டது.

இவரது பெயரில் தமிழக அரசின் மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்
படுத்தப்பட்டுவருகிறது.

Tags : magaliarmani Statues for Matarkula gems ...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT