மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 44: துளிர்க்கும் - தழைக்கும்

8th Sep 2021 06:00 AM | சாந்தாகுமாரி சிவகடாட்சகம்

ADVERTISEMENT

 

பாண்டியன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தைத் தாண்டியதுமே வேகம் பிடித்துப் போகத் தொடங்கியது. முன்பதிவு செய்யப்படாதப் பெட்டியில், உலகத்தின் சோகத்தை எல்லாம் முகத்தில் தேக்கிப் பாண்டியன் அமர்ந்திருந்தான்.

சென்னையில் இவனுக்கு இதுநாள் வரை துணையாக இருந்த பாட்டி இன்று அதிகாலை இறந்து விட்டாள். பகல் இரண்டு மணிக்கு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள்  உதவியோடு அவளைத் தகனம் செய்தாகிவிட்டது. மல்லித் தோட்ட ஏரியாவில் இட்டிலிக் கடை வைத்து இருபது வருஷங்கள், பிழைப்பு நடத்தியவளுக்கு அந்தக் குடிசைவாழ் மக்கள் மாலை, மரியாதைகள் செய்து நல்லபடியாக அவளை வழியனுப்பி வைத்தனர்.

பாட்டியின் சாம்பலை வங்கக் கடலில் கரைத்துவிட்டு வீடு திரும்பியவனை, பக்கத்து குடிசைக்காரி வந்து சாப்பிடக் கூப்பிட்டாள், இவன் வேண்டாம் என்று சொன்னவுடன் கிளம்பிப் போய்விட்டாள்.

ADVERTISEMENT

பாயில் சுருண்டுப் படுத்திருந்தான் பாண்டியன். கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது. பாட்டி பட்டம்மாவை நினைத்து உள்ளம் மறுகியது.

பாவி நான்; அநாதையாக விட்டு ஓடிச் சென்ற அம்மா, அதை நினைத்து நினைத்துக் குடித்து ஈரல் கெட்டு மாண்டுப் போன அப்பன், தன் மகன் வயத்துப் பேரனை நெஞ்சோடு அணைத்து, நான் இருக்கேண்டா உனக்கு என்று இதுநாள் வரை அவன் வயிறு காயாமல் வளர்த்த பாட்டி.

ஐயோ அவளுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லையே; பாண்டியனின் மனசாட்சி விழித்துக் கொண்டது, அவனைத் துரோகி துரோகி என்று திட்டியது, குடிசையில் கிடந்த இட்லிப் பாத்திரங்கள் அவனைப் பார்த்துக் கைக்கொட்டிச் சிரித்தன,  பாட்டியின் டிரங்க் பெட்டியைக் குடைய, ஒரு டப்பாவில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்தான். இனி இங்கே திரும்புவதில்லை என்று முடிவு செய்து, திரும்பிப் பார்க்காமல் நடந்தான் பதினெட்டே வயதான பாண்டியன்.

ரயில்வே நிலையத்தை அடைந்தான். மணி மாலை ஆறாகியிருந்தது. டிக்கெட் கவுண்டருக்குச் சென்றான். 

""எங்கே போகணும்?'' என்று கவுண்டரில் இருந்தவர் கேட்டார்.
""இப்போ எந்த ரயில் புறப்படுது சார்?''  என்றான் பாண்டியன்.

புறப்படும் ரயில்களின் பெயர் பட்டியலைச் சொன்னவர், பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரைச் சொன்னதும், ""சார், பாண்டியன் எக்ஸ்பிரஸ் எப்போ கிளம்புது? அது எங்கே போகுது?'' என்றான்.

அவனை ஒரு விநாடி ஆச்சரியமாகப் பார்த்தவர், ""அந்த வண்டி ஒன்பது இருபதுக்குக் கிளம்புது, மதுரைக்குப் போகுது'' என்றார்.

""மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்க'' என்றான் பாண்டியன்.

மதுரையை அவன் தேர்ந்தெடுத்தது, அந்த ரயிலின் பெயர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று அவன் பெயரைக் கொண்டிருந்ததினால்தான்.

கையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான், ஐம்பது ரூபாயும் ஐம்பது காசுகளும் இருந்தது. இதைக் கொண்டு என்ன செய்யப் போகிறான். மதுரையில் அவனுக்கு யாரைத் தெரியும். சென்னையை விட்டு, மல்லித் தோட்டத்தை விட்டு எந்த ஊருக்கும் செல்லாதவன். பாண்டியனின் வயிறு ஒருமுறை கலங்கி அடங்கியது. அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட மனம் பரபரத்தது.

செங்கல்பட்டில் ரயில் நின்றது. ஒரு வயதான தம்பதியர், பாண்டியன் இருந்த பெட்டியில் ஏறினார்கள். இங்கே இறங்கலாமா, வேண்டாமா என்று பாண்டியனின் மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.

""பேராண்டி, இந்தப் பெட்டியைச் சித்த வாங்கி, பெஞ்சுக்கு அடியிலே உள்ளே தள்ளி வைக்கிறியா'' என்றாள் எழுபது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்.

""மீனாட்சி, ஏண்டி அந்தப் புள்ளையாண்டானைக் கஷ்டப்படுத்தற, பொறுமையா இரு, வண்டி புறப்பட்டதும் நான் உள்ளே தள்ளி வைக்கிறேன்'' என்றார் அந்தப் பெரியவர்.

அந்தப் பெரியவருக்கு எண்பது வயசு இருக்குமா, எங்கே இந்த வயசில் இரண்டும் கிளம்பிட்டுதுங்க என்று எரிச்சல் பட்டான் பாண்டியன். பிறகு மெதுவாக எழுந்து அந்தப் பெட்டியை எதிர் சீட்டுக்கு அடியிலே உள்ளே தள்ளி வைத்தான்.

""ரொம்ப நன்றிடா நோக்கு'' என்றாள் பாட்டி.

அரைச் சிரிப்பு சிரித்தான் பாண்டியன். 
""அண்ணா உட்காருங்கோ, ரயில் புறப்படப் போகுது'' என்று ரயிலின் சிறு அசைவுக்கு, தன் கணவரை உஷார் படுத்தினாள் பாட்டி.
""மீனாட்சி சாப்பாட்டுக் கூடையை உன் பக்கத்துலே வைக்கிறேன்'' என்று ஒரு ஒயர் பையை சீட்டின் மேல் வைத்தார் பெரியவர். தன் தோளில் மாட்டியிருந்த தோல் பையை ஜன்னலுக்கு அருகே இருந்த கொக்கியில் மாட்டினார்.
அன்று ரயிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. பாண்டியனின் எதிர் சீட்டில் மீனாட்சி பாட்டியும், அவள் கணவரும் அமர்ந்துக் கொண்டனர். ரயில் வேகம் எடுத்து ஓடியது.
""மீனாட்சி மணி பத்தரை ஆகுது சாப்பிடலாமா?'' என்றார் பெரியவர்.
""பாவம்ண்ணா நீங்க. ராத்திரி எட்டு மணிக்கே சாப்பிட்டுவிடுவீங்க. இன்னைக்கு லேட் ஆயுடுத்து''.
""என்ன பண்ணறது, திடீர்ன்னு காலையிலே சுப்பு போன் பண்ணி, மீனாட்சி அம்மன் கோயில்லே யாரோ அபிஷேகத்தைக் கேன்சல் செஞ்சதாலே, நாளைக்கு பத்து மணிக்கு அபிஷேகத்தைச் செய்ய நமக்கு அனுமதி கிடைச்சுடுச்சுன்னு சொன்னான். நீயும் ஒரு வருஷமா, நான் படுத்த படுக்கையாகிப் பொழச்சதுக்கு, அம்மனுக்குப் புதுசா தாலி செஞ்சுப் போடறேன்னு வேண்டிக்கிட்டதை நிறைவேற்றனும்னு காத்துக் கிடந்தே. இப்போ அதிர்ஷ்டவசமா சான்ஸ் கிடைச்சு இருக்கு, அதான் உடனே மதுரைக்கு, ரிசர்வ் செய்யாத கம்பார்ட்மெண்டிலே பயணம் செய்யறோம்''.
""அண்ணா, நம்ம அதிர்ஷ்டம், மீனாட்சி அம்மன் கருணை, இந்தப் பெட்டியிலே கூட்டமே இல்லை. இந்தப் புள்ளையாண்டான் பக்கம் நான் படுத்துக்கிறேன். 
இந்தப் பக்கம் நீங்க காலை நீட்டிப் படுத்துக்கோங்கோ'' என்றாள் மீனாட்சி பாட்டி.
""பேராண்டி, உனக்கு ஏதும் ஆட்சேபணை இல்லையே'' என்றாள்.
""இல்லை'' என்று பாண்டியன் பலமாகத் தலையை ஆட்டினான்
சிறிது நேரத்தில் சாப்பாட்டுக் கூடையில் இருந்த பெரிய டிபன் பாக்ஸ் திறக்கப்பட்டது.
வெண்ணிலாவை ஒத்த இட்லிகள், சட்டினி, மிளகாய்ப் பொடி என்று வரிசையாக டப்பாக்கள் கொலுவிருந்தன.
ஒரு மந்தார இலையில் மீனாட்சி பாட்டி, நான்கு இட்லிகளை வைத்து, சட்னி, 
நல்லெண்ணெயில் மூழ்கிய மிளகாய்ப் பொடியையும் வைத்து, பாண்டியனிடம் நீட்டினாள்.
""ஐயோ, வேண்டாம் பாட்டி'' என்றான் பாண்டியன்.
""என்னப்பா இப்படிச் சொல்லறே, ஆரம்பத்திலே இருந்தே உன்னைப் பேராண்டி என்று கூப்பிடுகிறேன். உன் முகம் வேறே வாடிக் கிடக்குது. வயிறு காய்ந்து கிடப்பதை முகம் காட்டுது. சாப்பிடு, நான் நிறைய 
இட்லிகளைக் கொண்டாந்து இருக்கேன்'' என்றாள்.
பெரியவரும், ""சாப்பிடுப்பா'' என்றார் பரிவோடு.
பாண்டியனின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ""யார் இவர்கள்? ஏன் என் மீது பரிவு காட்டுகிறார்கள்? நேற்று இரவு, என் பாட்டி செஞ்ச சோறும், ரசமும் சாப்பிட்டது. ராத்திரி படுக்கப் போகும்வரை உயிர்ப்புடன் இருந்தாளே, காலையிலே பார்த்தா போய்ச் சேர்ந்துட்டாளே. இவ்வளவுதான் வாழ்க்கையா? ஒரு நாளில் என்னை விதி  மீண்டும் அநாதை ஆக்கிடுச்சே. பாண்டியனின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
""என்னப்பா, இதுக்குப் போய் இப்படி உணர்ச்சி வசப்படறே. வாழ்க்கையில் உனக்கு என்ன கஷ்டமோ? கவலைப்படாதே அந்த மீனாட்சி துணையிருப்பா. எங்களைப் பாரு, இந்த வயசானக் காலத்திலே, துணைன்னு யாரும் இல்லாமல் தனியா கிடந்து கஷ்டப்படறோம். ஒரே பையன் அமெரிக்காவிலே பெரிய உத்தியோகத்திலே இருக்கான், கை நிறையச் சம்பாதிக்கிறான், பணமும் அனுப்பறான். செங்கல்பட்டுலே, வசதியா இருக்கிறோம். எல்லாம் இருந்தும், அநாதைகள் போல அல்லாடறோம்.
போன வருஷம் இவரு படுத்தப் படுக்கையாக ஆனப்பொழுது, பணம் இருந்தது, மனுஷாள் இல்லை. நான் மதுரையில் பொறந்து வளர்ந்தவ. அந்த மீனாட்சி அம்மனைத்தான் வேண்டிக் கொண்டேன். இவரு பொழச்சு எழுந்தா, திருமாங்கல்யம் செஞ்சுப் போடறதா வேண்டிக்கிட்டேன். என் பெரியப்பா பையன் சுப்பு கிட்டச் சொல்லி வெச்சிருந்தேன். அவன் மதுரையில் இருக்கிறான். அவன் இப்பத்தான் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் பண்ணச் சான்ஸ் கிடைச்சுதுன்னு கூப்பிட்டான், கிளம்பிட்டோம்''.
""சரி, எங்க புராணம் உனக்கு எதுக்கு? சாப்பிடு''.
வேண்டாம் என்று சொல்லச் சொல்ல ஆறு இட்லிகளைப் பாண்டியனுக்கு வேண்டி வேண்டிக் கொடுத்துச் சாப்பிட வைத்தார்கள்.
படுப்பதற்கு முன் மீனாட்சி பாட்டி தன் புருஷனைப் பார்த்துக் கேட்டாள், ""தாலியைப் பத்திரமா வெச்சிருக்கீங்க தானே''.
""எல்லாம் அந்தத் தோல் பையில் வெச்சிருக்கேன்'' என்றார் பெரியவர்.
திருச்சியில் ரயில் நின்றது. ஸ்டேஷனில் இருந்தக் கடிகாரம் அதிகாலை மணி மூன்று என்று காட்டியது.
மீனாட்சி பாட்டியும், பெரியவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
பாண்டியன் மெதுவாக எழுந்தான். கொக்கியில் மாட்டியிருந்த தோல் பையை எடுத்தான். அதைத் தன் தோளில் மாட்டிக் கொண்டு, ரயிலை விட்டு இறங்கினான். முதலில் மெதுவாக நடந்தவன், பிறகு ஓட்டம் எடுத்தான்.
மூச்சு வாங்க, சற்று நின்றான். பையின் ஜிப்பை இழுத்துத் திறந்தான். உள்ளே கையை விட்டுத் துழாவினான். பச்சை நிறத்தில் பட்டுப் புடவை, ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட புத்தம் புதிய தாலி, அந்தத் தாலி ஒரு தங்கச் சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்தது. இதைத் தவிர ரூபாய் கட்டு ஒன்று.
அடிடா சக்கை, புதிய தொழில் ஆரம்பமே அபாரம் என்று அவன் மனம் குதூகலித்தது.
""அடப்பாவி'', என்று உள்மனம் ஓங்கிக் குரல் கொடுத்தது, உன் பாட்டி பட்டம்மா தள்ளாத வயதுவரை உழைத்து உன்னைக் காப்பாற்றினாளே, இதற்காகத்தானா? திருடனாக வாழத்தானா-?  அவள் ஆன்மா சாந்தி அடையுமா? "பேராண்டி' என்று அன்புடன் அழைத்து மீனாட்சி பாட்டி, உன் பசியை ஆற்றினாளே? எத்தனை  நம்பிக்கை இருந்தால் பையைப் பத்திரப்படுத்தி வைக்காமல், கொக்கியில் மாட்டி வைத்திருப்பார்கள். கடவுளுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த இருந்தத் தாலியை எடுக்கத் துணிந்தாயே?
சே, கீழ் மகனே, கட்டிய கணவனைக் கைவிட்டு, உன்னை அநாதையாக்கிக் கள்ளக் காதலனுடன் ஓடிய உன் அம்மாவின் ரத்தம்தானே உன் உடலில் ஓடுகிறது. அதனால்தான் இப்படிச் செய்திருக்கிறாய்? ஓடு உன் பாட்டி பட்டம்மாளின் பேரன் நீ என்பதை நிரூபணம் செய், ரயில் கிளம்பப் போகிறது ஓடு ஓடு என்று அவன் உள்மனம் கூக்குரல் இட்டது.
ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டேன். ஓடினான் பாண்டியன், தன்னுடையப் பெட்டியை அடைந்தான். நல்லவேளை மீனாட்சி பாட்டியும், பெரியவரும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லை.
தோல் பையை கொக்கியில் மாட்டினான். தன் முகத்தைத் தன் முழங்கால்களில் புதைத்து அழத் தொடங்கினான். தன் பாட்டி பட்டம்மாள் இறந்தபொழுதுக் கூட அவன் அப்படி அழவில்லை, குலுங்கிக் குலுங்கி அழுதான்.
இனி அவன் வாழ்க்கை நெருப்பில் அகப்பட்ட வைக்கோல் போர் போலக் கருகாது, அது துளிர்க்கும், தழைக்கும், ஆலமரமாகப் பலருக்கும் நிழல் கொடுக்கும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

( குறள் எண்: 435)

பொருள் :

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் 
கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

(தொடரும்)
 

Tags : magaliarmani Sprouting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT