மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: நினைத்த கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை ! 

DIN


தனியார் நிறுவனத்தில் மேலாளர், சமூக வலைதளங்களில் கவிதை எழுதுபவர், சின்னத்திரை, சினிமாத்துறை, புத்தக ஆர்வலர் இப்படி அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் நடிகை கிருபா.

அவரிடம் பேசியதிலிருந்து:

""திருநெல்வேலி மாவட்டத்தில், தேனீர் குளம் பண்ணையார் வீடு என்றால் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்து விடும்.  அவருடைய பேத்தி தான் நான். அதனால் என்னை "பண்ணையார் வீட்டு பொண்ணு' என்று கூட அழைப்பார்கள். அப்பா இறந்து விட்டபின், தனியாக பெண் பிள்ளையை வீட்டில் வைத்திருக்க முடியாததால்  எனக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.

இதனால், 12-ஆம் வகுப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது. பிறகு சென்னையை நோக்கிய பயணம். ஊர் புதிதாக இருந்தாலும் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி நடைபோடலாம் என முழு தைரியத்துடன் இருந்தேன். மூன்று குழந்தைகளை படிக்க வைத்தேன். நானும் சில மேற்படிப்புகளை படித்து பட்டம் பெற்றேன். ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதை ஒரு சவாலாகவே நினைத்தேன்; ஏனென்றால் தினந்தோறும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 

போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் புதுமையான யுக்திகளை கையாள வேண்டும். அந்த துறைக்கு ஏற்றது போலவும் நமக்கு கீழே வேலை பார்ப்பவர்களுக்கு புதிய திட்டங்களை அதிகரிக்கவும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெரிய பெரிய மாற்றங்களை நிறுவனத்திற்குள் கொண்டு வந்து வெற்றிகளையும் பெற்றேன். இது எனக்கு புத்துணர்ச்சியை ஊட்டுவதாக இருந்தது. என்னுடைய பெயரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியதும் இது தான் என்று கூட சொல்லலாம். 

மனிதவள மேம்பாட்டு பிரிவில் படித்து முடித்து பட்டம் பெற்றதும் சக தோழிகள் நீ  சினிமாவில் நடிக்கலாமே என ஆலோசனை வழங்கினர். 

யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க மனமில்லை.  அந்த சமயத்தில் தானாகவே ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அதன் தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில்  "நிறம் மாறாத பூக்கள்',  "அவளும் நானும்', "அரண்மனை கிளி'  "ராஜபார்வை', சன் டிவியில் "மகாலட்சுமி',  "பூவே உனக்காக',  கலர்ஸ் சேனலில் "திருமணம்', "அம்மன்'. ஜீ தமிழில் "சூரிய வம்சம்' போன்ற தெடர்களில் நடித்துள்ளேன். 

சினிமாத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.எல்.விஜய் இயக்கிய "வனமகன்', "தியா', "மெர்சல்', "சர்கார்' உள்ளிட்ட  படங்களில் நடித்தேன். இப்போது "மாநாடு', " அன்பரிவு'  போன்ற பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் விரும்பி நடிக்க நினைக்கும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டல், பெண்களுக்கான முன்னேற்றம் இப்படித் தான் ஆசைப்படுவேன் ஆனாலும்; அந்த கதாபாத்திரங்கள் கிடைப்பது குறைவு தான். 

இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்புவதற்கு முக்கிய காரணம் பல்துறையில் சாதித்த பெண்மணிகளின் வரலாறை நான் படித்தது தான். குறிப்பாக,  வேலு நாச்சியார், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், அன்னை தெரசா போன்ற புகழ் பெற்றவர்கள் எண்ணற்ற சேவைகளையும், வீரத்தையும் நமக்கு தூண்டுதலாக எடுத்து காட்டியிருக்கின்றனர்.  எனது வாழ்விலும் நிறைய தொண்டுகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். காமெடி கதாபாத்திரங்கள் ரொம்பவும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் மனித வாழ்வில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் மரணம் கண்டிப்பாக நிகழும். ஆனால் நாம் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதில் தான் நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது. நூற்றுக்கணக்கான காமெடி நடிகர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும்  அவர்களுடைய திரைப்படங்களை நாம் பார்க்கும் போது சிரித்துக் கொண்டு தான் இருக்கிறோம்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா

வட சென்னை தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

உணவகத்தில் தீ விபத்து

வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT