மகளிர்மணி

தான்சானியாவில் தமிழ் சேவை!

பொ. ஜெயசந்திரன்

தமிழ் மொழியை நாடு கடந்து போற்ற வேண்டும் என்று உறுதியாக இருப்பவர். "லாஜீனி' என்ற பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவன இயக்குநர், தான்சானியாவின் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்ட மேலாளர். அயல் நாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் ஆப்பிரிக்க கண்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர். "தமிழ் அமெரிக்கா அமைப்பின் புதுமைப் பெண் விருது-2021', "ஊருணி அறக் கட்டளையின் பீனிக்ஸ் பெண் விருது- 2021', தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர் இது போன்ற பல சாதனைக்குச் சொந்தக்காரர் தான் நாச்சியார். தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

அயல்நாடுகளில் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற துடிப்பு எப்படி உருவானது?

சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீதும், இலக்கியங்களில் மீதும் ஆர்வம் அதிகம். தான்சானியா தமிழ்ச்சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தவுடன் சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கினேன். இதனால் பொது மேடைகளில் பேசவும் வாய்ப்பு அதிகரித்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் காங்கோவிலிருந்து வெளியாகும் "காங்கோ தமிழ்ச்சாரல்' இதழில் முதன் முதலாக ஒரு ஆய்வுத் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து "ஆப்பிரிக்கா தமிழ்ச்சாரல்' இதழின் மண்டல ஆசிரியாரக பணியில் அமர்ந்தேன். அதே இதழில் நான்கு தொடர்கள் எழுதி வந்தேன். இப்படி ஒவ்வொரு வாய்ப்புகளும். நிகழ்வுகளும் தமிழை நோக்கி என்னை ஈர்த்தது. ஒரே வரியில் சொல்வதானால் வினைப்பயனால் தமிழையும், தமிழோடு எனக்கிருந்த தொடர்பையும் அறிந்தேன். தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வரை அதை முழுமையாக செயல்படுத்தி வருகிறேன்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு எப்படி கிடைத்தது?

2019-ஆம் ஆண்டில் சென்னை வந்தேன். அப்பொழுது ஊடக நண்பர் வாயிலாக அந்த வாய்ப்பு கிடைத்தது. அதாவது, " பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் சிறப்பு தொகுப்பாளினியாக கலந்து கொண்டேன். இன்று பல சாட்டிலைட் சேனல் இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷன் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. குறிப்பாக செய்தி வாசிப்பாளர்களைப் பார்க்கும்போது நாமும் ஒரு நாள் செய்தி வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் அல்லவா? அது போலத்தான்; எனக்கும் தூர்தர்ஷன் ஸ்டூடியோவில் கால் வைத்த பொழுது ஒரு பெருங்கனவு நிறைவேறிய தருணமாக உணர்ந்தேன்.

"தமிழ் ஆப்பிரிக்கா' வலையொளியின் சிறப்பு பற்றி?

ஆப்பிரிக்க தமிழர்கள் என்றாலே பொதுவாக எல்லோருக்கும் தென் ஆப்பிரிக்க தமிழர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். எங்களுடைய "ஆப்பிரிக்கா தமிழ்சாரல்' இதழுக்கு ஒரு பெரும் வாசகர் வட்டம் உண்டு. ஆப்பிரிக்க தமிழர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு வேண்டும் என்று தோன்றியது. மேலும் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். இதன் பொருட்டு 2020-ஆம் ஆண்டில் உருவானது தான் "தமிழ் ஆப்பிரிக்கா வலையொளிதளம்'. இன்று இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகளை குழந்தைகளுக்காகவும். பெரியவர்களுக்காகவும் நடத்தி வருகிறோம். ஒரு வலையொளிதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஆப்பிரிக்கா இன்று ஓர் அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது.

சமூகப் பணியாளர்கள் சர்வதேச கூட்டமைப்பில் தங்களின் பங்களிப்பு?

சமூகப்பணி என்பது வெளிநாடுகளில் குறிப்பாக கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொறியாளர், மருத்துவர், வழக்குறைஞர்களுக்கு இணையான மதிப்பு உண்டு. தொழில்முறைக் கல்விக்கு பின்னர் அந்தந்த தொழில் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மற்றும் பயிற்சிக்குப் பின்னர் தான் ஒருவர் அந்த தொழிலை மேற்கொள்ள முடியும். அதே போலத்தான் சமூகப்பணிக்கும் சமூகப் பணியாளர்களுக்கான நெறிமுறைகளையும் வகுப்பது செயல்படுத்துவது, கண்காணிப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் அமைப்பு தான் சர்வதேச சமூகப் பணியாளர்கள் கூட்டமைப்பு. இந்த அமைப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

"லாஜீனி' நிறுவனம் தொடக்கமும் வெற்றியும்?

நானும் எனது கணவரும் இணைந்து தொழில் முறை சமூகப்பணியாளர்களாக கிட்டத்தட்ட 14-ஆண்டுகளாக இத்துறை யில் இருந்து வருகிறோம். லாப நோக்கற்ற அமைப்புகள் எனப்படும் தொண்டு நிறுவனங்கள் நிறைய தோல்வி அடைவதற்கு முழுக்காரணம் சரியான நெறிமுறைகள் திட்டங்கள் இல்லாதது தான். இம்மாதிரியான தொண்டு நிறுவனங்களுக்கும் முறையான பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் தான் எங்கள் "லாஜீனி' நிறுவனம். இன்று ஆப்பிரிக்க நாடுகளில் தொண்டாற்றி வரும் சில தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக சேவையாற்றி வருகிறோம். "லாஜீனி' என்றால் பிரெஞ்சு மொழியில் "திஜீனியஸ்' என்று பொருள்.

எழுத்து மூலமாக நீங்கள் அடைந்த மகிழ்ச்சி?

ஒரு சராசரி நடுத்தர குடும்பத்து பெண் நான். நிறைய கனவுகளோடு இருந்தவள். அதில் ஒன்று நல்ல எழுத்தாளராக மாற வேண்டும் என்பதும். முன்பெல்லாம் மனதின் உணர்வுகளை வெளிப்படுத்த எழுதினேன். அது எழுத்தால் உணர்வுகளை கடந்த சமயம். தற்போது இந்த சமூகத்தின் நல்லவை, கெட்டவை பற்றி எழுதுகிறேன். இது எனக்கு நிறைய அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது.

தன்னம்பிக்கை பேச்சு மூலமாக பெண்களுக்கு சொல்ல நினைப்பது?

உங்கள் வாழ்வில் அல்லது முயற்சியில் தோல்வியுற்று இருந்தால் அப்படியே முடங்கிக்கிடக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியாகி விட்டதே என்று சொல்லி, சொல்லியே இந்த சமூகம் நம்மை அதிலேயே முடக்கி வைக்க நினைக்கிறது. அதையெல்லாம் தூக்கியெறியுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்கு தேவை மன ஆறுதல் அல்ல முன்னேற்றம். உங்களைப் பற்றி குறை சொல்பவர்களுக்கு செவி கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தால் அவர்களோடு நீங்களும் பின் தங்கி விடுவீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT