மகளிர்மணி

குழந்தைகளுக்கு வழிகாட்டி!

20th Oct 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT


தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தையை இழந்து, தனிமை தாயால் வளர்ந்த டாக்டர் வி.ஏ.ஜோதி, பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அரசு பள்ளித் தலைமை ஆசிரியையாக இருந்த இவரது பெரியம்மா, இவரை ஆசிரியை பயிற்சிப் பெற்று சமூகசேவை செய்யும்படி அறிவுறுத்தினாராம்.

பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட போதிலும் ஆசிரியை தேர்வு எழுதி முடித்தார். பயிற்சிப் பெற்று முடித்தவுடன் இவரது பெரியம்மா இவரை பேச்சுத் திறனற்ற, காது கேளாத சிறப்புக் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் சில்ரன் உதவும் பொருட்டு அதற்கான பயிற்சி படிப்பை படிக்கும்படி கூறினாராம். 1987- ஆம் ஆண்டு செகந்திராபாத்தில் உள்ள அலியாவர் ஜங் நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் தி ஹியரிங் ஹாண்டி கேப்ட் ( ஏ ஒய் ஜே என் ஐ எச்எச்) தென் மண்டல மையத்தில் சேர்ந்து பயிற்சிப் பெற்று பட்டம் பெற்றார்.

அதிர்ஷ்டவசமாக அவர் படித்த கல்லூரியிலேயே வேலையும் கிடைத்ததால், இன்று வரை தொடர்ந்து சிறப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து மற்றக் குழந்தைகளுக்கு இணையாக பேசும் திறனை அளித்து வருகிறார். கூடவே எம்.பி.எல் பட்டம் பெற்று, இவரது குடும்பத்தில் எம்.பி.எல் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

தற்போது 58 வயதாகும் ஜோதி, தன்னுடைய வாழ்க்கையில் 40 ஆண்டுகளை இந்த சிறப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதிலும், வழிகாட்டுவதிலும் செலவழித்துள்ளார். இதற்கிடையில் இந்தப் பயிற்சி தொடர்பாக, 2000-ஆண்டு மும்பையில் உள்ள ஏ ஒய் ஜே என் ஐ எச் எச் கூட்டமைப்பான ரிசர்ச் புராஜக்ட் ஆன் மதர்ஸ் டிரெயினிங் திட்டத்தில் துணை பேராசிரியர் இன்வெஸ்டிகேட்டராகவும், 2005-06 ஆம் ஆண்டில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், 2009 முதல் 2012 -ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் வித்யா மிஷனில் பிரப்ரேஷன் ஆஃப் ஸ்பீச் தெரபி பேனல் உறுப்பினராகவும், கூடவே ஆந்திர மாநில அரசின் கம்யூனிடி மேனேஜ்மெண்ட் எஜூகேஷன் சர்வீஸில் புராஜக்ட் மானேஜராகவும் பணியாற்றினார். மேலும், சென்னை பாலவித்யாலயாவில் சிறப்புக் குழந்தைகளுக்கான மூன்று கட்ட மாஸ்டர் டிரெயினிங் திட்டத்திலும் பயிற்சி பெற்றார். சிறப்புக் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்:

ADVERTISEMENT

""பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு பேசும் திறன் இல்லை என்பதையோ கேட்கும் திறன் இல்லை என்பதையோ குழந்தை வளரும் பருவத்திலேயே கவனிக்க தவறிவிடுகின்றனர். குறிப்பிட்ட வயதுக்கு மேல் உணரும்போது ஆரம்பகட்டத்திலேயே இந்தக் குறையை தீர்க்க சிகிச்சை பெற முடியுமென்பதை அவர்கள் உணர்வதில்லை.

தனியார் மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்தப் பின்னர் ஏ ஒய் ஜே என் ஐ எச் எச் அமைப்பை தொடர்பு கொள்கின்றனர். இதுபோன்ற குழந்தைகளை இங்கு அழைத்து வரும்போது முதலில் ஸ்கிரீனிங் செய்கிறோம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் சிறப்பு விடுமுறைக்கால பயிற்சி கூடங்களுக்கு அனுப்பப்படுவர். அங்கு அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதோடு, விருப்பமான வேலையில் பயிற்சியளிக்கப்படுகிறது.

பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் சிறப்பு கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு பயிற்சியளிப்போம். மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை என்னிடம் அழைத்து வருவார்கள். குறைகளை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சையை ஆரம்பிப்பது தான் சரியானமுறை. அப்போதுதான் குழந்தைகள் கேட்கவும், பேசவும் சுலபமாக பயிற்சி பெற முடியும். பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் பாடங்கள் மூலம் பயிற்சியளிக்கிறோம். அந்த வயதில் குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுத்தாலும் கிரகிக்கக் கூடிய சக்தி அதிகமிருக்கும். நாங்கள் கற்றுக் கொடுப்பதை குழந்தைகள் வீட்டிலும் பயிற்சிப் பெற பெற்றோர்களுக்கும் கூடவே பயிற்சியளிக்கிறோம்.

முதல் ஆண்டில் குழந்தைகளுக்கு புரியும் சக்தி, சொற்கள் விரிவாக்கம், உருவங்களை மனதில் பதிய வைத்தல், கேட்பதற்கான பயிற்சி போன்றவைகளை இசைக் கருவிகள் மூலம் பயிற்சியளிப்பதால் உதட்டசைவின் மூலம் நாம் சொல்லும் சொற்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இரண்டாவது ஆண்டில் பார்க்கும் பொருள்களை விவரிக்கவும், சுலபமான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், ஆரம்ப கணிதமும் கற்றுத்தரப்படுகிறது.

இவை அனைத்தும் சைகை அடிப்படையில் பயிற்சியளிக்கப்படுகிறது.

பெற்றோர்களை நடிக்க வைத்து அவர்களை பார்த்து புரிந்து கொள்ளுதல் முக்கிய பாடமாகும். பண்டிகைகளைக் கொண்டாடுவது, சுலபமாக படிக்கக் கூடிய புத்தகங்களை கொடுத்து படிக்க வைப்பது மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறோம்.

இதன்பின்னர் குழந்தைகளுக்கு முழுமையாக புரிந்து கொள்ளும் திறமை அதிகரிப்பதால், மேற்கொண்டு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பரிந்துரை கடிதங்களை அளிக்கிறோம். வழக்கமான சேர்க்கை அல்லது கல்வி உரிமை சட்டத்தின் மூலம் இந்த சிறப்புக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை மறுப்பு தெரிவித்தால் மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் மற்றும் சமமான வாய்ப்பு, உரிமை பாதுகாப்பு சட்டங்களின் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும்.

ஒருமுறை என்னிடம் பயிற்சிப் பெற்ற குழந்தைகளை சேர்க்க மறுத்த பள்ளிக்கு நானே நேரடியாக சென்று, விவரங்களை கூறிய பின்னரும் பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்தது. அந்தக் குழந்தைகளை அழைத்து அவர்களையே கேள்விகள் கேட்கச் சொன்னேன். குழந்தைகளின் அறிவுக் கூர்மையை கண்டு வியந்த அவர்கள் குழந்தைகளை சேர்த்துக் கொண்டனர். இதன்பின்னர் இன்று வரை எங்களிடம் பயிற்சிப் பெற்ற சிறப்புக் குழந்தைகளை சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இந்திய மக்கள் தொகையில் இதுபோன்ற மாற்றுத் திறனாளிகள் 2 : 2 சதவீதம் உள்ளனர். 2: 3 சதவீத்தினர் கிராமப் பகுதிகளிலும், 2 சதவீதத்தினர் நகரங்களிலும் உள்ளனர்.

இந்த பயிற்சிமுறைகள் இப்போது பிற மாநில சென்டர்களிலும் கடைப்பிடிக்கப்படுவது சிறப்புக் குழந்தைகளுக்கு பேருதவியாக உள்ளது என்று கூறும் டாக்டர் ஜோதி, இதுவரை, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்டியாக விளங்கியுள்ளார்.

இவரிடம் பயிற்சி மேற்கொண்டு பள்ளிகளில் சேர்ந்து படித்த பல மாணவ - மாணவியர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் அமர்ந்துள்ளனர். சிலர் சுயமாக தொழில் நடத்துகின்றனர். சிறுவயதில் ஆசிரியை பயிற்சி பெற பொருளாதார அடிப்படையில் சிரமப்பட்டாலும், விடாமுயற்சியால் படித்து முன்னேறி சமூக தொண்டாற்றி பல விருதுகளைப் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

இவரது இருமகன்களும் அமெரிக்க குடியுரிமை பெற்று வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். இது எனக்கு நீண்ட வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும், என்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தையும் பயிற்சி பெற்று வெளியேறும் போது என்னால் கேட்க முடிகிறது என்னால் பார்க்க முடிகிறது அதனால்தான் நானாக இருக்கிறேன் என்று'' குழந்தைகள் நினைப்பதாக உணர்கிறேன் என்கிறார் டாக்டர் ஜோதி.

Tags : magaliarmani Guide for kids!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT