மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 50: உயிரா - உடைமையா..?

20th Oct 2021 06:00 AM | சாந்தாகுமாரி சிவகடாட்சகம்

ADVERTISEMENT


""பிரமிளா, ஏன் முகத்தை இவ்வளவு சோகமாக வெச்சிருக்கே?'' என்று முகுந்தன் கேட்டான்.

""எனக்கு என்னவோ மனசு ரொம்ப சங்கடப்படுகிறது, இப்படிப் பைக்கில் தனியாக இந்தியா முழுவதிலும் சுற்றுப் பயணம் போகக் கிளம்பிட்டீங்க, அதுவும் மூன்று மாதங்கள் ஆகும் திரும்பி வர என்று சொல்றீங்க; நான் எப்படி இங்கே நிம்மதியாக இருக்கிறது?''

""பிரமிளா, இது என்னுடைய நீண்ட நாள் கனவு, ஏதாவது சொல்லி இதைத் தடுத்துடாதே. எனக்கு எதுவும் ஆகிவிடாது. அப்பப்ப உன்னோட செல்போனிலே பேசுவேன். உடல் உபாதையோ, இல்லை பயணத்திலே தடங்கல்களோ, கஷ்டமோ ஏற்பட்டால், நான் திரும்பி வந்துவிடுவேன். கவலைப்படாதே' என்றான் முகுந்தன். 

""இரண்டு வயசு கண்ணம்மாவையும், என்னையும் விட்டுப் போக எப்படித்தான் உங்களுக்கு மனசு வருதோ தெரியலை?

ADVERTISEMENT

இப்பவே எனக்கு வயசு நாற்பத்தி ஒன்று ஆயிடுச்சு. மல்யுத்த வீரனாக நேஷனல் அளவுலே விளையாடி, பல மெடல்களை வாங்கி, ரிடையர்டும் ஆயிட்டேன். அரசாங்கம் என்னுடைய தகுதியைச் சீர்தூக்கிப் பார்த்து ரயில்வேயிலே நல்ல வேலையும் கொடுத்திருக்காங்க. கைநிறையச் சம்பளம்; இளமையும் பாக்கி இருக்கு, இந்தப் பயணத்திற்கான செலவையும் அரசாங்கம் கொடுக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நான் கைநழுவ விடக்கூடாது''. 

""சரி, நான் சொன்னா நீங்க எங்கே கேட்கப்போறிங்க? நல்லபடியா போயிட்டு வாங்க'', என்று சிரிப்பை வலிய  முகத்தில் ஏந்திக் கொண்டாள்.

முகுந்தனைப் பார்த்தவர்கள், மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவிலான உடல்வாகைத் தன்னகத்தே கொண்டிருந்தான். நேஷனல் மல்யுத்த சாம்பியன் என்றால் சும்மாவா? உடற்பயிற்சி, சரியான உணவு, கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை என்று கடைப்பிடித்துத் தன் உடலை இரும்பு போல வைத்திருந்தான்.

காலையிலே ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பதினைந்து முட்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் தண்டால் எடுக்கிறான். அது மட்டும் அல்லாமல் மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்னால், டிரெய்னிங் காலத்திலே சக்கையாகப் பிழிந்து உடற்பயிற்சிகளைச் செய்ய வைப்பார்கள். சத்தான உணவு, அதற்கேற்ற பயிற்சிகள், இப்படி உடம்பு இரும்புப்போல இருக்கிறது என்று முகுந்தன் பெருமையாகச் சொல்லுவான்.

முகுந்தனின், இந்தச் சுற்றுப் பயணத்தை முதலிலேயே, சரியாக அட்டவணை போட்டு இந்தந்த நாட்களில், இந்தந்த இடங்கள் என்று வரையறைப்படுத்தி இருந்ததால், அங்கெல்லாம் தங்குவதற்கு அரசாங்க விடுதிகளை முன்கூட்டியே பதிவு செய்ய முடிந்திருந்தது.

முதலில் கன்னியாகுமரியை அடைந்த முகுந்தன், பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், வங்காளம், உத்திரப்பிரதேசம் என்று பைக்கிலேயே சுற்றிவிட்டு ஹிமாச்சலத்துக்குள் நுழைந்தான்.

வழிநெடுக, மக்கள் அவனை அன்பாக நடத்தினர். பலர் அவனை அடையாளம் கண்டுக்கொண்டு, அவனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தங்கள் வீட்டுக்கு வந்து உணவு அருந்த வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்று அறுசுவை உணவுகளை அளித்தனர்.

முகுந்தன் பெருமகிழ்ச்சியில் திளைத்தான். தன்னுடைய அனுபவங்களைத் தன் டைரியில் குறித்து வைத்தான். பிரமிளாவோடு கைபேசியில் அடிக்கடி உரையாடினான். கண்ணம்மாவுக்கும், பிரமிளாவுக்கும் பல பரிசுப் பொருட்களை மாநிலங்கள் தோறும் வாங்கிக் கைப்பைகளில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

இயற்கையின் அழகு, கிராமத்து மக்களின் அன்பு, நகரத்து மக்களின் வாசம் முகுந்தனின் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக ஆக்கிக் கொண்டிருந்தது.

காஷ்மீரைக் காண வேண்டும் என்பது முகுந்தனின் நீண்ட நாளைய கனவாக இருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல்கள் என்றெல்லாம் பயப்படாமல் தன்னுடைய பைக்கில் காஷ்மீரின் தலைநகரமான ஸ்ரீநகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.

குல்மார்க் (என்ப்ம்ஹழ்ஞ்) நகரத்தில் அன்று இரவு முகுந்தன் தங்க இருந்தான். இந்த நகரம் ஸ்ரீநகரிலிருந்து 67 கி.மீ தொலைவில் இருந்தது. மறுநாள் புல்வாமா (டன்ப்ஜ்ஹம்ஹ) நகரத்தின் வழியாக ஸ்ரீநகர் அடைய இருந்தான். காஷ்மீரின் அரிசி கிண்ணம் என்று குல்மார்க்கைப் புகழ்ந்து சொல்லுவார்கள். குல்மார்க் நகரத்தின் கீழ் பாகங்களில் அரிசி விளைந்தால், அதனுடைய மேற்பாகங்களில் ஆப்பிள், பியர்ஸ் விளைவிக்கப்படுகின்றது. ஆடுகளும் பெரும் அளவில் வளர்க்கப்படுகின்றன.

இமாலயத் தொடர்கள், மஞ்சள் பூக்களோடு, தென்றல் காற்றில் தலை அசைத்துக் கொண்டிருந்த கடுகுச் செடிகள், ஆப்பிள் மரங்கள் என்று தன் கண்முன்னே விரிந்த காட்சிகளை ரசித்துக் கொண்டே முகுந்தன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தான். 

குல்மார்க்கை அடைய இன்னும் 30 கிலோமீட்டர்கள் இருந்தது. திடீர் என்று பருவநிலை மாறியது. கடந்த இரண்டு மாதங்களாக இப்படி வானிலை மாறுவதை முகுந்தன் பல ஊர்களில் கண்டு இருந்ததால் பைக்கை மேலும் வேகமாகச் செலுத்தினான். பத்து நிமிடத்தில் ஆலங்கட்டி மழை பொழியத் தொடங்கியது. சிறிய டென்னிஸ் பந்துகள் சைஸில் பனிக்கட்டிகள் பட படவென்று விழ ஆரம்பித்தன.

நல்ல வேளை முகுந்தன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலை தப்பியது. ஆனால் மேலிருந்து விழுந்த ஐஸ் கட்டிகள் அவன் உடலைப் பதம் பார்த்தன, மிகுந்த வலியை ஏற்படுத்தின.

ஒரு பெரிய வால்நட் மரத்தின் கீழ் முகுந்தன் அடைக்கலம் புகுந்தான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்து கொண்டே இருந்தது. சிற்றோடைகள் கைக்கோர்த்து ஓடத் தொடங்கின.

மழை அடங்கியபொழுது மணி மாலை ஆறாகியிருந்தது. பருவநிலை காரணமாக அதற்குள் சுற்று வட்டாரத்தை இருள் சூழ்ந்துக் கொண்டது. பைக்கில் ஏறிய முகுந்தன் எப்படியும் குல்மார்க்கை அடைந்துவிட வேண்டும் என்ற வெறியோடு வேகமாக ஓட்டினான்.

வெகு தொலைவில், விளக்குகள் கண் சிமிட்டின. குல்மார்க் போகும் வழியில் வரும் ஒரு கிராமம் என்று முகுந்தன் எண்ணினான். ஏனெனில் குல்மார்க்கை அடைய இன்னும் 20 கி.மீ இருந்தது.

சடால், என்று வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்தினான். சாலையின் நடுவே ஒரு பெரிய மரத்துண்டு கிடந்தது. மழையினால் கிளை ஒன்று முறிந்து விழுந்து கிடக்கிறது என்று எண்ணினான். ஆனால், ஹிந்தியில், ""டேய் வண்டியை நிறுத்துடா'' என்று அதட்டலாக கத்திய ஒரு உருவம் கையில் உருட்டுக் கட்டையோடு வெளிப் பட்டது. ""கடவுளே, இது என்ன சோதனை?'' என்று முகுந்தன் மலைத்தான், அவன் யோசித்து முடிப்பதற்குள், ஐந்து, ஆறு ஆட்கள் அவனைச் சூழ்ந்துக் கொண்டனர். ""டேய், பணத்தை எடுடா'' என்றான் ஒருவன், ""வாட்சைக் கழட்டு'' என்றான் மற்றவன், முகுந்தனின் பைகளையும் ஆராய்ந்தனர்.

முகுந்தனுக்குக் கோபம் பொங்கி வந்தது. ஆனால் சூழ்நிலை அவனுடைய உள்ளுணர்வை உஷார் படுத்தியது.

முகுந்தனால், அவர்கள் எல்லோரையும் அடித்து வீழ்த்தமுடியும். ஆனால் இது அந்நிய நகரம், அவனுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை, இரவு வேளை, அடித்துப் போட்டாலும் காப்பாற்றுவார் இல்லை.

யானை பலம் கொண்ட முகுந்தன், கூட்டமாக இருக்கும் நரிகளிடம் தன் பலத்தைக் காட்டாமல், தன்னுடைய உடைமைகளை அவர்களுக்குத் தானமாகக் கொடுத்து, வெறும் கைகளோடு, பைக்கை உதைத்துக் கிளம்பிச் சென்று கொண்டிருக்கிறான்.

வள்ளுவர் காட்டிய வழியில் சென்றதால், உயிர் தப்பிப் பிழைத்தான்.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

( குறள் : 500)

பொருள் :

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை சேற்றில் சிக்கிவிட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

 (தொடரும்)

Tags : magaliarmani உயிரா - உடைமையா..?
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT