மகளிர்மணி

ஓர் ஆய்வு...: மனிதர்கள் -வனவிலங்குகள் 

பூா்ணிமா

மனிதர்கள் - வனவிலங்குகள் மோதல்களால் மனித உயிர் இழப்பு மட்டுமின்றி வனப்பகுதியையொட்டி வாழும் மக்களின் வாழ்வாதார பாதிப்பும் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பதுபோல் வனவிலங்குகள் இனப் பெருக்கமும் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இரு சாராருக்கும் உணவு, தண்ணீர், வசிப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் அதிகரித்துள்ளது. இந்த மோதலை குறைக்கவும், மக்கள் வனவிலங்குகளுடன், ஒன்றி வாழவும் "சென்டர் ஃபார் வைல்ட் லைப் ஸ்டெடீஸ்' அமைப்பினர் தலைமை பராமரிப்பு விஞ்ஞானி க்ரீத்தி கரந்த் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

20 ஆண்டுகளாக வனவிலங்குகள், மனிதர்கள் பரிணாம வளர்ச்சி, தேவைகள் குறித்து இவர் செய்து வரும் ஆய்வுகளுக்காக, இயற்கை பராமரிப்பு குறித்து புதிய கண்டுபிடிப்புகள், வழிமுறைகள், தீர்வு போன்றவைகளை ஊக்குவிக்கும் பொருட்டு "வைல்ட் எலிமென்ட்ஸ் பவுண்டேஷன்' வழங்கும் "வைல்ட் இன்னோவேட்ர்ஸ்' விருது இவருக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த விருதினைப் பெற்ற முதல் ஆசியப் பெண்மணியும் இவர்தான். இந்த அமைப்பில் உலகநாடுகளில் உள்ள பிரபலமான அறிவியல் மற்றும் பராமரிப்பு வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தன்னுடைய ஆய்வுகள் குறித்து க்ரீத்தி கரந்த் விவரிக்கத் தொடங்கினார்:

""மனிதர்கள் - வனவிலங்குகள் மோதலை தடுக்க தற்போது அரசாங்கமும் வனத்துறையினரும் எடுத்துவரும் நடவடிக்கை போதாமல் மேலும் செய்முறை பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப மக்களுக்கான அடிப்படை வசதிகள், பாதைகள் அமைத்தல், நெடுஞ்சாலை விரிவாக்கம், புதிய குடியிருப்புப் பகுதிகள், சுரங்கப்பணிகள் என பெருகும்போது, வனவிலங்குகளின் வசிப்பிடங்கள் குறுகுவது தவிர்க்க முடியாததாகிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வசதிகளை அதிகரிக்கும்போது, நம்மிடம் இருப்பதை பயன்படுத்துவதில் இழப்பு ஏதுமில்லை. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் சுற்றுச் சூழலுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இழப்புகளை மீட்டெடுக்க புதிய சட்டங்கள், தன்னார்வலர்கள், மற்றும் அரசுகள் மூலம் வனங்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் அடுத்த 20 ஆண்டுகள் இதே வளர்ச்சித் திட்டங்கள் தொடருமானால் நாம் மீட்டெடுத்த இயற்கை வளங்களை பராமரிக்க முடியாமல் இழக்க நேரிடலாம். இதற்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டுமென்பதற்காக பல்வேறு திட்டங்களை "சென்டர் ஃபார் வைல்ட் ஸ்டடீஸ்' மூலம் ஆய்வுகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

வனப்பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்கலில் வசிப்பவர்களுக்கு மத்திய - மாநில அரசுகளும் அவர்கள் குடும்பங்களுக்கு மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு கல்வி, விவசாயம், பயிர் மற்றும் உயிர்சேதங்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று வசிப்பிடங்கள் போன்ற உதவிகளை செய்து வருகின்றன.

மேலும் இது தொடர்பாக நான் மூன்று திட்டங்களைத் துவக்கியுள்ளேன். முதலாவது "வனக்கல்வி' என்ற திட்டத்தின் கீழ் வனப்பகுதி மற்றும் அதன் அருகாமையில் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களில் உள்ள 10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்க்கு சுற்றுச்சூழல் மற்றும் பராமரிப்பு கல்வியின் மூலம் இந்திய வனவிலங்குகள் வாழ்க்கை முறை மற்றும் வனப்பகுதிகளின் அவசியம் போன்றவைகளை உணர வைக்கிறோம். இத்திட்டம் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 407 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்த தகவல் 20,350 பள்ளிக் குழந்தைகளிடம் சென்றடைந்துள்ளது.

அடுத்து வனபாதுகாப்பு என்ற திட்டத்தின் மூலம் மனிதர்கள். வனவிலங்குகள் மோதலை தவிர்க்க பொது விழிப்புணர்வு மற்றும் சமூக பயிற்சி அளிக்கிறோம்.
மூன்றாவதாக வனசேவை திட்டத்தின் கீழ் வனவிலங்குகள் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும், பாதுகாத்துக் கொள்வதற்கும் பல்வேறு வழிகளையும், நிவாரணத் தொகை பொறுவதற்கான வழிமுறைகளையும் கூறுகிறோம்.

இத்திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து அதிக அக்கறை காட்டுகின்றனர். ஒரு சிலருக்கு நாங்கள் கூறும் அறிவியல் வார்த்தைகள் புரிவதில்லை என்றாலும் அவர்கள் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளூர் மொழிவாயிலாகவே விளக்கம் அளிக்கிறோம்.

சிறுவயதில் என்னுடைய தந்தை உல்லாஸ் கரந்த், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து நிறையவே எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். வருங்கால சந்ததியினருக்கு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனக்குப் பிடித்துள்ளது. என்னுடைய குழந்தைகளையும் அடிக்கடி வனப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இயற்கை சூழ்நிலை மற்றும் வனவிலங்குகள் பற்றி விளக்கம் கூறி அழைத்து வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளேன்'' என்கிறார் க்ரித்தி கரந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT