மகளிர்மணி

தவிர்க்க வேண்டிய தாமதம் - காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

24th Nov 2021 06:00 AM | பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

கொட்டித் தீர்த்த பெருமழை கூடவே பெரு நஷ்டங்களைக் கொண்டுவரும். சென்னை வெள்ளத்தின் பிடியிலிருந்து சற்றே விடுபட்டாலும் தொடரும் மழை பயமுறுத்தத்தான் செய்கிறது. வெள்ளம் என்றால் உதவிக் கரங்கள் நீளும். அப்படி உதவியதால் ஊடகங்களில், மக்களிடையே பேசு பொருள் ஆனவர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் உதயகுமாருக்கு அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை. சென்ற வாரம், உதயகுமார் இரவு மழையில் நனைந்ததால் வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்து இரவு முழுவதும் அங்கேயே கிடந்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் உதயகுமாரைக் கண்டவர்கள் இறந்துவிட்டதாக நினைத்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க... காவலர்களுடன் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி வந்தார்.

ADVERTISEMENT

உதயகுமார் சாய்ந்து கிடந்த இடத்திற்குப் போய் சோதனை செய்து பார்த்த போது உடலில் உயிர் உள்ளது என்பது தெரிய வந்தது. உதயகுமாரை அப்படியே தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு "குடு குடு' என்று ஓடி, ஆட்டோ பிடித்து அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தகவலும் கொடுத்தார்.

உயிருக்குப் போராடிய அந்த இளைஞனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலில் இளைஞனைத் தோளில் போட்டுக் கொண்டு யந்திர கதியில் இயங்கிய ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பெண் காவலர் ஒருவர் ஓர் ஆணைத் தோளில் எளிதாகச் சுமந்து செல்லும் காட்சி யாரும் இதுவரை பார்க்காதது. அந்த ஒரு காரணத்திற்காகவே ஒட்டு மொத்த தமிழகமும், பல இந்திய மாநிலங்களின் ஊடகங்களும் அந்தக் காவலரைக் கொண்டாடின.

காக்கி உடையில் கருணை மனதுடன் இருக்கும் ராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டோம்:

""காவல் ஆய்வாளராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனக்கு வயது 53 ஆகிறது. பிறந்தது தேனிக்கு அருகில் பெரியகுளம். படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா காவல் உதவி ஆய்வாளராக ஓய்வு பெற்றவர். நான் பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியம் எடுத்து முதுகலையில் வரலாறு படித்தேன்.

காவல்துறையில் சேர்ந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. தொடக்கம் முதலே பொதுமக்களுக்கு உதவி வருகிறேன். எனது பணியைப் பாராட்டி 2012-இல் கேரளம் திருச்சூரில் நடந்த அகில இந்திய காவல் அதிகாரிகளின் சம்மேளனத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி அல்லாத எனக்கு விருது வழங்கி கெளரவித்தார்கள். செய்த பல உதவிகள் ஊடகங்களில் இடம் பிடிக்கவில்லை. இப்போது உதயகுமாருக்கு உதவியதை ஊடகங்கள் பெரிதாக வெளியிட்டதும் தமிழ்நாட்டை தாண்டியும் இந்த செய்தி சென்றடைந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று நான் போய் உதயகுமாரை பரிசோதித்தபோது அவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. பலமான மழை பெய்திருந்ததால் முழுக்க நனைந்திருந்த உதயகுமார் உடல் சேரும் சகதியுமாக இருந்தது. துர்நாற்றம் வேறு... நினைவும் உணர்வும் இல்லை. அந்த சூழ்நிலையில் இதர காவலர்களை உதயகுமாரைத் தூக்கச் சொன்னால், நிச்சயம் தூக்குவார்கள். ஆனால் அந்த தருணத்தில் உதயகுமாரின் உயிரை எப்படியாவது காப்பாற்றி ஆகவேண்டும் என்ற ஒரே உந்துதல்தான் இருந்தது. அதனால் எதையும் யோசிக்காமல், நானே சட்டென்று தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ஓடிப் போய் ஆட்டோ பிடித்து ஏற்றி அனுப்பினேன்.

கல்லூரியில் படிக்கும் போதே விளையாட்டில் சிறந்து விளங்கினேன். காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு காக்கி சீருடையுடன் உடற்பயிற்சியும் தேவை. நான் தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்கிறேன். கொஞ்சம்தான் சாப்பிடுகிறேன். காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வேன்.

உடல் வலிமையைவிட மன வலிமைதான் முக்கியம். நான் அப்பாவைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். தெரிந்தவர்களுக்கு நீ நேசிப்பவர்களுக்கு உதவுவதைவிட உன்னை வெறுப்பவர்களுக்கும் தொந்தரவு செய்பவர்களுக்கும் "உதவி செய்' என்று அப்பா சொல்வார். எனக்கு இரண்டு அண்ணன்கள். இரண்டு அக்காக்கள். நான் ஒருத்திதான் காவல்துறையில் சேர்ந்தேன்.

ஒருமுறை மகளை காணவில்லை என்று எங்களிடம் தந்தை ஒருவர் வந்தார். உடனே காவல்துறை எல்லா பேருந்து நிலையங்களிலும் உள்ள காமிரா பதிவுகளை ஆய்வு செய்தது. எதிலும் அந்தப் பெண் தென்படவில்லை.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது அந்தப் பெண் தில்லி செல்லும் ரயிலில் ஏறியது தெரியவந்தது. அப்போது அந்த வண்டி போபால் நகரை எட்டிக் கொண்டிருக்கும் என்று தெரிந்ததால் போபால் போலீஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னோம்.

போலீஸ் போபால் ரயில் நிலையம் சென்றிருந்த போது வண்டி கிளம்பிவிட்டது. உடனே தில்லி போலீஸைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணைக் கண்காணிக்கச் செய்தோம். தந்தையை விமானத்தில் போகச் செய்து தில்லியில் லாட்ஜில் தங்கியிருந்த மகளைக் கொண்டுவரச் செய்தோம்.

இன்னொரு சம்பவம். 16 வயதுப் பெண்ணை ஒருவன் கடத்திவிட்டான். பெற்றோர் பதறியபடி என்னிடம் வந்தார்கள். உடனே செயல்படவேண்டிய தருணம். தாமதம் ஏற்பட்டால், ஒன்று அந்தப் பெண்ணுக்கு எதுவும் சம்பவிக்கலாம். அல்லது பெண் விற்கப்படலாம்.

பெண்ணின் அலைபேசியை டிராக் செய்து பெண் திருச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும், திருச்சி போலீசுக்கு தகவல் கொடுத்து ரயில்நிலையத்தில் பிடிக்கச் செய்து, பெற்றோரிடம் பெண்ணை ஒப்படைத்தோம்.

என்னைப்போன்று பல காவலர்கள், முன்களப் பணியாளர்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். இது சமூகத்திற்கு ஒரு கூட்டு பங்களிப்பு'' என்கிறார் ராஜேஸ்வரி.

(தகவல்கள் உதவி: டி.வி. சோமு)

ADVERTISEMENT
ADVERTISEMENT