மகளிர்மணி

செங்கேணி, வேடம் ஒரு மைல்கல்! − லிஜோ மோள்

24th Nov 2021 06:00 AM | - கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

"ஜெய் பீம்' திரைப்படம் நடிப்புத் திறமையுள்ள நாயகியை அடையாளம் காட்டியிருக்கிறது. லிஜோமோள். 29 வயதில் நாயகியாக அறிமுகம் ஆகியிருப்பதே பெரிய விஷயம்தான். ஆனால் வயது 29 என்று சொல்லமுடியாதது லிஜோமோளின் பிளஸ் பாயிண்ட். யார் இந்த லிஜோ மோள்...? அவரே சொல்கிறார்:

"மகேஷிண்டே பிரதிகாரம்' மலையாள படம் மூலம் 2016 - இல் முதல் முதலாக நடிகையாக அறிமுகம் ஆனேன். ஐந்து மலையாளப் படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் படம் எனக்குப் புதிதில்லை. ஏற்கெனவே தமிழில் "சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்துள்ளேன். துறுதுறுப்பான வேடம். சகோதர பாசம் ஒருபுறம் காதல் மறுபுறம். பெயர் சொல்கிறமாதிரி நடித்திருந்தேன். ஆனா "அக்காவா நடிக்கிறீங்களா... தங்கையா நடிக்கறீங்களா...' என்று பலர் அணுகினார்கள். "வித்தியாசமான பாத்திரம் இருந்தா சொல்லுங்க..' என்று அவர்களுக்குப் பெரிய கும்பிடு போட்டு அனுப்பி வைத்தேன். நடுவில் "தீதும் நன்றும்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கொஞ்சம் தாமதம் ஆனாலும் சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தில் துடிப்பாக நடித்தது, "ஜெய் பீம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. எடுத்ததும் பட இயக்குநர் ஞானவேல் சார் என்னை ஒப்பந்தம் செய்யவில்லை. படத்தில் ஒரு காட்சியைச் சொல்லி அதை நடித்துக் காட்டச் சொன்னார். எனக்கு தமிழ் அவ்வளவாக அப்போது வராது. நடிக்கும் போது தடுமாறினேன். எனது தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டு "மலையாளத்தில் பேசி நடி' என்றார். நடித்தேன். இயக்குநருக்குப் பிடித்துப் போக லிஜோ "செங்கேணி' யாக மாறினேன்.

ADVERTISEMENT

திரைக்கதை வசனத்தை சொல்லித் தந்து சுமார் 40 நாட்கள் இருளர்களோடு தங்க வைத்தார். அவர்களின் நடை, உடை, பேசும் பாவனையை நான் உள்வாங்க வேண்டும் என்பதற்கு இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். கரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடுவில் நடக்கவில்லை. வீட்டில் இருக்கும் போது செங்கேணியை மறந்துவிடாதே திரைக்கதை.. பேசிய வசனங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மீதப் படப்பிடிப்பு நடக்கும் போது அதில் செங்கேணியாக வாழ முடியும்' என்று இயக்குநர் இடையிடையே அலைபேசியில் அழைத்து அறிவுறுத்துவார். அதனால் வீட்டிலிருந்தாலும் செங்கேணியை விட்டு வெளியே வர முடியவில்லை. தவிர, செங்கேணி பட்ட கஷ்டங்களைத் தெரிந்தால் எந்தப் பெண்ணும் செங்கேணியை நினைத்து பதறிப் போவார்கள்.

"படத்தில் நடிப்பதில் எனக்கு சிரமமாக அமைந்தது சேலை கட்டி நடித்ததுதான். எனக்கும் சேலைக்கும் ரொம்ப தூரம். சேலை கட்டவும் வராது. "சுடி'தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் இருளர் பெண்ணாக நடிக்கும் போது சேலை உடுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். இருளர் பெண்கள் சேலை கட்டுவதை பழகிக் கொண்டாலும், சேலையுடன் நடக்கும் போது அதுவும் செருப்பு போடாமல் நடக்கும் போது ரொம்பவும் சிரமப்பட்டேன். அதன் பிறகு இருளர் பெண்கள் நடப்பது போல நடக்கவும் பழகினேன். இரவில் வயலில் எலி பிடிக்கப் போவோம்... மொத்தத்தில் இருளர் பெண்ணாக வாழ்ந்தேன். எனது கணவராக நடித்த மணிகண்டனை இருளர்களுடன் வாழ்ந்த போது "மாமா' என்றுதான் அழைக்கச் சொன்னார்கள். மேக்கப்புடன் படம் எடுத்து அம்மாவுக்கு அனுப்பி வைத்தேன்.

"நன்றாகத்தான் இருக்கிறது..' என்று சொன்னார். செங்கேணியாக நடிக்க ஆரம்பித்தாலே சோகம் மனதில் முகத்தில் கவிழ்ந்து கொள்ளும். அழுகைக் காட்சியில் கிளிசரின் போடாமலே அழுதேன். இயக்குநர் "கட்' என்று சொன்ன பிறகும் அழுகை தொடரும். சுதாரிக்கப் பல நிமிடங்கள் தேவைப்படும்.

"லாக்கப்'பில் போலீஸ் அடிக்கிற காட்சிகளில் ரப்பர் பிரம்பைப் பயன்படுத்தினாலும் சில நேரங்களில் அடி பலமாகப் பட்டுவிடும். எனக்கு மட்டுமல்ல ... அடி வாங்கிய எல்லா நடிகர்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. அப்போது வலித்தாலும், படத்தில் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதால்... வலி மறந்து போனது.

"தொடக்கத்தில் சூர்யா சார் வக்கீலாக நடிக்கிறார் என்று தெரியாது. பிறகுதான் அவர் நடிப்பதுடன் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார் என்று. அதனால் நடிக்கும் போது தவறு வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக நடித்தேன். அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல ... படத்தயாரிப்பு சம்பந்தப்பட்ட அனைவரையும் கரிசனமாகக் கவனிக்கும் நல்ல தயாரிப்பாளரும் கூட என்பதைப் புரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பு நடக்கும் போது எனது திருமண நிச்சயதார்த்தம் நடந்தாலும், சென்ற மாதம்தான் எனக்குத் திருமணம் நடந்தது. காதல் திருமணம் தான். நான் தொடர்ந்து நடிக்க கணவர் அருண் ஆண்டனி சம்மதித்துள்ளார்.

"ஜெய் பீம்' படம் பார்த்து விட்டு "அருமையாக நடித்திருக்கிறாய்' என்று பாராட்டினார். "செங்கேணி' வேடம் எனக்கு ஒரு மைல்கல். அதில் சந்தேகமில்லை. "செங்கேணி' போன்ற பாத்திரங்களில் இனி நடிக்கமாட்டேன். வித்தியாசமான பாத்திரங்களை வரவேற்கிறேன்'' என்கிறார் லிஜோ மோள்.

Tags : magaliarmani milestone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT