மகளிர்மணி

அபாகஸ்: உலக சாதனை!

24th Nov 2021 06:00 AM | ச.பாலசுந்தரராஜ்

ADVERTISEMENT

 

மனக்கணக்குகள் நவீன வடிவம் எடுத்து அபாகஸ் கணிதமுறையாக தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த கணித முறை யில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை அடங்கும். இந்த கணித முறை பயிற்சி 5 வயது முதல் 14வயது உள்ள பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உயர் கல்வி படிக்கும்போது கணக்குகளை எளிதில் செய்து முடித்து விடலாம். மேலும் மாணவர்களின் திறமை , நினைவாற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 6 பேர் மற்றும் ஒரு மாணவன் அபாகஸ் கணிதமுறையில் உலக சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளித்த எஸ்.யமுனா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""மணிசட்டம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். எட்டு லெவல் பயிற்சி உண்டு. இரட்டை மற்றும் மூன்று இலக்க எண்கள்  மூலம் நினைவாற்றல் (கூட்டல்) பயிற்சி, தொடர்ந்து பெருக்கல் கணக்கு, பின்னர் வகுத்தல் கணக்கு, தொடர்ந்து புள்ளிகணக்குகள் பயிற்சி அளிக்கப்படும் . முதல்வகை ( லெவல்) பயிற்சி 4 மாதங்கள் அளிக்கப்படும். என்னிடம் 40 மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதில் 7 பேர் அபாகஸ் கணிதமுறையில் உலக சாதனை புரிந்துள்ளனர். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் தனித்தனியே ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, உலக சாதனை சான்றிதழ் பெற்றனர். முன்னதாக இந்த 7 மாணவர்களை அபாகஸ் கணிதமுறையை விரைவாக செய்யச் சொல்லி, அதன் விடியோவை எலைட் வேல்டு ரிக்கார்ட், இந்திய ரிக்கார்ட் ஆஃப் அகாதெமி ஆகியவற்றுக்கு  அனுப்பி வைத்தோம். 

அவர்கள் அதனை பார்த்துவிட்டு 7 மாணவர்களுக்கும் தனித்தனியே இணையம் மூலம் தேர்வு நடத்தினர். இதில் 8 - ஆம் வகுப்பு மாணவி சிங்கிள் டிஜிட்டல் பிரிவில் எஸ்.ஹன்சிகா, 150 கணக்குகளை 7.நிமிடம் 41 நொடியிலும், 8-ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.சிவதர்ஷினி 3 டிஜிட்டல் பிரிவில் 100 கணக்குகளை 10 நிமிடம் 21 நொடியிலும், 9 -ஆம் வகுப்பு மாணவி ஆர்.ரோஷிணி இரு டிஜிட்டல் பிரிவில் 100 கணக்குகள் 4 நிமிடம் 41 நொடியிலும், 9 -ஆம் வகுப்பு லஜிதா இரு டிஜிட்டல் பிரிவில் 100 கணக்குகள் 8 நிமிடம் 31 நொடியிலும், 8-ஆம் வகுப்பு ஜெய்விஷாந்த் இரு டிஜிட்டல் பிரிவில் 185 கணக்குகளை 7 நிமிடத்திலும், 3 -ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரித்திகா. 3 டிஜிட்டல் பிரிவில் 185 கணக்குகளை 10 நிமிடத்திலும், 6-ஆம் வகுப்பு ஆர்.ரோஷ்மா இரு டிஜிட்டல் பிரிவில் 100 கணக்குகளை 6 நிமிடம் 14 நொடிகளில் விடை அளித்து உலக சாதனை படைத்தனர்.

ADVERTISEMENT

இணையதளம்  மூலம் நடைபெற்ற இதனை எலைட் வேர்ல்ட் ரிக்கார்ட் அமைப்பு மற்றும் இந்தியா ரிக்கார்ட்  அகாதெமி ஆகிய நிறுவனமும் ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை அனுப்பி வைத்தனர். 

இந்த சாதனைக்கு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு நடுவர்கள் வருவார்கள். சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தேன். மாணவர்களுக்கு பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால் வெற்றி பெறலாம் என நான் கூறி வந்தேன். நானும் சிரத்தை எடுத்து பயிற்சி அளித்தேன். மாணவர்களிடம் உள்ள திறமையைக் கண்டு கொண்டு, பயிற்சி அளித்ததால் மாணவர்கள் உலக சாதனைப் படைத்துள்ளனர். 

இது போன்ற மாணவர்களை ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்''  என்றார். 

Tags : magaliarmani Abacus: World Record!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT