மகளிர்மணி

மருத்துவராக விரும்பினேன்!

10th Nov 2021 12:00 AM | பூர்ணிமா

ADVERTISEMENT


ஒலிம்பிக் போட்டியில் இருமுறை பதக்கம் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சிறுவயதில் மருத்துவராக விரும்பி பின்னர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டியது எப்படி என்பது பற்றி இங்கு கூறுகிறார்.

""ஒன்பது வயதிலேயே நான் பேட்மிண்டன் ஆடத் தொடங்கியது ஒரு வேடிக்கையான அனுபவமாகும். என்னுடைய அப்பா வாலிபால் ஆடுவது வழக்கம். விளையாட்டுத் துறையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும். என்னுடைய பெற்றோர் அளித்த ஆதரவும், ஊக்கமும் பேட்மிண்டனில் எனக்கு ஆர்வத்தை அதிகரித்தது.

முறையாக பயிற்சி பெறும்போது நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். ஏற்ற இறக்கம் கொண்ட இந்த விளையாட்டு நம்முடைய மனதை வலிமையாக்கவும், பொறுமையை கடைபிடிக்கவும் உதவுகிறது. விளையாடும்போது சூழ்நிலைக்கேற்றவாறு கவனம் செலுத்துவது முக்கியமாகும். நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும், வெற்றிப் பெறுவதற்கான புள்ளிகளை இழக்கும்போது, அடுத்து வெற்றிப் பெறுவதற்கான புள்ளிகளை எப்படி பெறுவது என்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

விளையாட்டில் எப்படி கவனம் செலுத்துகிறீர்களோ அதுபோலவே நண்பர்கள் வட்டத்தையும் வலுப்படுத்திக் கொள்வது முக்கியம். பல்வேறு நாடுகளுக்குச் சென்று எதிர்த்து விளையாடும் வீராங்களையும், சந்திக்கும் நண்பர்களையும் எப்போதும் தொடர்பில் வைத்துக் கொள்வது நல்லது. விளையாடும்போது நமக்கு வெற்றி ஒன்றே நோக்கமாக இருக்கும். மைதானத்தை விட்டு வெளியே வந்தவுடன் நட்பு வட்டம் தான் நமக்கு தேவைப்படும்.

ADVERTISEMENT

உண்மையில் சிறுவயதில் நான் மருத்துவராகவே விரும்பினேன். பேட்மிண்டன் ஆடத் தொடங்கியவுடன் மருத்துவத்தை விட இதுவே நமக்கு ஏற்றது என்று கருதி மருத்துவராகும் கனவை விட்டுவிட்டேன். விளையாட்டுத் துறையை தவிர்த்து வேறு துறையை நினைக்கக் கூடாது என தீர்மானித்தேன். இன்று இதுவே என்னை புகழுச்சியில் நிறுத்தியுள்ளது.

விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு, பிட்னஸ் மிகவும் முக்கியமாகும். அரிசி உணவையே சாப்பிடுகிறேன். எடை கூடுவது தெரிந்தால் கடினமான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்துக் கொள்வேன். உடல் பிட்னஸ் என்பது பலவகைப்படும். ஓடுதல், நீந்துதல், யோகா என பல வகைப்படும். எப்போதும் எடை கூடாமல் இருக்க எல்லா பருவத்திற்கும் ஏற்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இது மனதை ஒருமை படுத்தவும், சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. என்பதால் பிட்னஸில் நான் அதிக கவனம் செலுத்துவதுண்டு.

விளையாட்டுக்கு அடுத்து நவீன உடைகள் அணிவதில் எனக்கு விருப்பம் அதிகம். வித்தியாசமான உடைகளை அணியும்போது வேறு பெண்ணாக மாறிவிடுவேன். எனக்குப் பிடித்தமான உடைகளை அணியும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி'' என்கிறார் பி.வி.சிந்து.

ADVERTISEMENT
ADVERTISEMENT