மகளிர்மணி

இறைவன் கொடுத்த வரம்!

10th Nov 2021 06:00 AM | - பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

 

சென்னை மாநகராட்சியில் முதல் ஹோமியோபதி மருத்துவ அதிகாரி (ஓய்வு). தமிழக அரசின் ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் முதல் பெண் பதிவாளர்.

"பவித்ரம்' தொண்டு நிறுவனத்தின் பொருளாளர். ஒன்பது மருத்துவ நூல்களை எழுதிய எழுத்தாளர். தன்னம்பிக்கை பேச்சாளர். பெண்களுக்கு தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துபவர் இவை அனைத்துக்கும் சொந்தக்காரர்
மருத்துவர்-ஜோ.ஜாய்ஸ் திலகம். தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

ஹோமியோபதி மருத்துவரானது எப்படி?

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் காட்பாடி என்ற இடத்தில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் முறையாக பயின்று முதல் மாணவியாக வந்தேன். தமிழ் நாட்டில் முதல் ஹோமியோபதி மருத்துவராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தது மட்டுமல்லாது, அரசு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின் முதல் பெண் பதிவாளராக பணியாற்றும் வரமும் அதிர்ஷ்டமும் எனக்கு கிடைத்தது. எனது அண்ணனும், எனது மகனும் ஹோமியோபதி மருத்துவர்கள்தான்.

எனது 43 ஆண்டு கால அனுபவத்தில் இம்மருத்துவம் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரவசம் பெற பல வழிகளில் உதவி செய்கிறது. காரணம் இந்த எளிய, சிறிய மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது வளரும் சிசுவுக்கும் ஏற்ற மென்மையான மருந்தாகும். அதனால் தான் ஹோமியோபதி மருத்துவத்தை பயன்படுத்துவோர் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தை இம்மருத்துவம் பிடித்துள்ளது.

பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்யும் சமூகப்பணி?

இந்த சமூகத்திற்கு எவ்வாறு தொண்டு செய்வதென்று உள் மனது ஏங்கிக் கொண்டிருக்கும் போது, இமயமலையிலிருந்து முன் பின் தெரியாத ஒருவரின் ஆசி கிடைக்கப் பெற்று பவித்ரம்- என்ற பெயரினை கொடுத்து அதன் மூலம் சமூகச் சேவைகளை செய்ய பணித்தார். இதையும் இறைவன் அருளிய வரமாகவே கருதி, கடந்த 17ஆண்டுகளாக பல சமூக நலப்பணிகளைச் செய்து வருகிறேன். கல்வி நிறுவனங்களில் மாணவிகளைச் சந்தித்து தாய்ப்பாலின் மகத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதுவரை 1லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை சந்தித்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர்களை சந்தித்து ஒழுக்க நெறி கல்வி பற்றி பேசி இருக்கிறேன். பவித்ரத்தின் மூலம் செய்யும் மற்றுமொரு பணி என்ன வென்றால் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாய பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதாகும். உழைத்து வயதாகி நலிவடையும்போது அவர்களுக்கு மனதளவில் பெற்ற பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்களா? என்ற கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்மணிகளுக்கு, பல்வேறு பேராசிரியர்கள் உதவியோடு ஆலோசனை, மருத்துவம், ஆறுதல் போன்றவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறேன். கடந்த 10ஆண்டு காலமாக, காவிரி டெல்டா பகுதியிலும் தாமிரபரணி பகுதிகளிலும் சுமார் 5,000 விவசாய குடும்பங்களை சந்தித்து வேண்டிய சுகாதாரம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு கொடுத்துள்ளேன்.

தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி?

தாய்ப்பால் என்பது இயற்கையான சத்தானது. எதிர்ப்பு சக்தி தர வல்லது. கரோனா காலத்தில் கூட பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று நான் பத்திரிகை கட்டுரையின் வாயிலாக சொன்னபோது, சிலர் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று தொற்று பாதித்த தாய், முகக்கவசம் அணிந்து கொண்டு பால் கொடுக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது எனக்கு கிடைத்த வெற்றியும் மகிழ்ச்சியும்.

வன்முறை இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டுமென்றால் தாய்ப்பால் மிக மிக அவசியம். காரணம் தாய் தன் குழந்தைக்கு பால் மட்டும் ஊட்டுவதில்லை. கூடவே அன்பு, அரவணைப்பு போன்றவற்றையும் சேர்த்து ஊட்டுகிறாள். தாய்ப்பால் கிடைக்காதவர்கள் தனிமையை விரும்புகின்றனர். உறவு, விட்டுக்கொடுத்தல். பெற்றோரை பேணுதல் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலே வாழ்கிறார்கள். தாய்ப்பால் குடிக்காததால்; டிஸ்லெட்டிக் என்ற பிரச்னையின் காரணமாக வயதாகும்போது ஞாபக மறதி தோன்றும். சில தாய்மார்களுக்கு மார்பக வளர்ச்சி இன்மை, மனநிலை காரணமாக பால் சுரக்காமல் போகலாம். தாய்ப்பால் சுரந்தாலும் தாய்ப்பால் கொடுத்தாலும் குழந்தை பால் குடிக்க மறுத்துவிடுமாயின் பாலின் சுவையில் குறை இருக்கலாம் அல்லது குழந்தையின் வாயில் குறை இருக்கலாம். பால் கொடுக்கும் முறையில் தவறு இருக்கலாம். பாலின் சுவை அதிக உப்பாகவோ அல்லது புளிப்பாகவோ இருந்தால் குழந்தை குடிக்க மறுக்கும் (மார்பக சீழ் கட்டிகள், நீர்மக் கட்டிகள், பால் கட்டிகள் காரணமாக கூட இருக்கலாம்) இவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.

மறக்க முடியாத நிகழ்வு?

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று ஒன்றிருக்கும். அதுபோன்று என் வாழ்க்கையில் நடந்த இன்ப நிகழ்வு என்றால் அது ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களைச் சந்தித்து நான் எழுதிய நூலை நேரிடையாக அவரிடம் கொடுத்தது. அதுகூட பெரிய விஷயமல்ல, மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கலாமை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா? இந்த ஆசையை நிறைவேற்ற கலாம் அவர்களைக் கேட்டபோது எங்களுடைய அழைப்பை ஏற்று, மாணவர்களை சந்திக்க ஒப்புக் கொண்டார். ஒரு மணிநேரம் மட்டுமே பேச இருந்த விழாவில், மூன்று மணிநேரம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி என்னையும் பாராட்டினார் ; அந்நாளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT