மகளிர்மணி

இந்தியாவின் முதல் பெண்  வேந்தர்

கண்ணம்மா பாரதி

கி.பி.1236 முதல் 1240 வரை தில்லியை, அதாவது வடஇந்தியாவை ஆண்டவர் ரஸியா சுல்தானா. இவர்தான் இந்தியாவின் முதல் அரசி ஆவார். ரஸியாவுக்குப் பிறகு தில்லியை எந்த அரசியும் ஆட்சி செய்யவில்லை.

அதன்பிறகு, மத்திய பிரதேசத்தின் தலைநகராக இருக்கும் போபாலில் தொடர்ந்து நான்கு தலைமுறையாக அரசிகள் அடுத்தடுத்து ஆட்சி செய்தது மிகவும் அதிசயமான ஆச்சரியமான செய்தியாகும். இந்த நான்கு அரசிகளும் தங்களது ஆட்சி காலத்தில் தங்களது தனித்தன்மையான ஆட்சியில் முத்திரை பதித்தனர்.

குத்ஸியா பேகம்

நவாப் நாசர் முஹம்மது கான் போபாலை ஆட்சி செய்தார். அவரது மரணத்திற்கு பிறகு நாசரின் மனைவி குத்ஸியா பேகம். தனது பதினெட்டாம் வயதில் ஆட்சி பொறுப்பை நேரடியாக கி.பி 1819 -இல் ஏற்றார். அந்த ஆண்டிலிருந்து 107 ஆண்டுகள் அதாவது 1926 வரை போபால் சமஸ்தானத்தை நான்கு தலைமுறையாக இஸ்லாமிய பெண்மணிகள் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்சி செய்கிறார்கள்.

இந்திய வரலாற்றிலேயே தொடர்ந்து நான்கு தலைமுறையாக 107 ஆண்டுகள் ஒரு சமஸ்தானம் பெண்களின் ஆட்சியின் கீழ் இருந்தது கிடையாது. ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள், வேலு நாச்சியாருக்குப் பிறகு அவர்களது வாரிசுப் பெண்கள் ஆட்சி நடத்தவில்லை.

குத்ஸியா பேகம் 17 ஆண்டுகள் (1819-37) ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். கணவரின் மரணத்திற்குப் பிறகு நடந்த சடங்கு ஒன்றில், வயதில் அனுபவத்தில் மூத்தவர்கள், ஆட்சி பொறுப்பை ஏற்க போட்டி போடும் நவாப் குடும்பத்தினர், சமஸ்தானத்தின் ஆட்சியில் உதவும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இருபது வயது நிரம்பாத குத்ஸியா பேகம் "போபால் சமஸ்தானத்தின் பெருமைகளை பாரம்பரியத்தைக் காப்போம்' என்று உறுதியெடுத்ததுடன், தனது பதினைந்து மாத மகளான சிக்கந்தரை அடுத்த வாரிசாக அறிவித்து ஆட்சி பொறுப்பை "காப்பாளர்' என்ற பெயரில் ஏற்கிறார்.

இந்த துணிச்சலான அறிவிப்பைக் கேட்டவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக, "இஸ்லாமியப் பெண்கள் ஆட்சி செய்ய மதத்தில் அனுமதி இல்லை' என்ற நம்பிக்கையை மாற்ற, மதத் தலைவர்களிடம் கலந்து பேசி அவர்களின் அனுமதியைப் பெற்றார்.
அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயரிடமும் பேசி அவர்களையும் தனது முடிவிற்கு உடன்பட வைத்தார். அன்றைய கால கட்டத்தில் தெற்கு ஆசிய கண்டத்தில் கணவரின் மரணத்திற்குப் பிறகு அனைவரின் ஒப்புதலுடன், வாரிசு உரிமையுடன் நவாபின் மனைவி என்ற ஸ்தானத்தின் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பை வெற்றிகரமாக ஏற்றவர் குத்ஸியா பேகம் மட்டும்தான். சமஸ்தானத்திற்காக நடந்த போர்களில் முன்னணி வீரர்கள் அடங்கிய படையை தலைமை ஏற்று நடத்தவும் செய்தார்.

சிக்கந்தர் பேகம்

குத்ஸியா பேகத்திற்கு அடுத்தபடியாக ஆட்சி அரியணையில் அமர்ந்தவர் அவரது மகள் சிக்கந்தர் பேகம். சிக்கந்தர் பேகம் 1847 முதல் 1868 வரை ஆட்சி செய்தார். நடுவில் சிக்கந்தரின் கணவரான நவாப் ஜஹாங்கீர் முஹம்மது போபாலில் நவாப்பாக இருந்தாலும் அவரது மரணத்திற்குப் பிறகு ஆட்சி சிக்கந்தர் வசம் வந்தது. சிக்கந்தருக்கு தொடக்கத்திலிருந்தே ஆண்களுக்கு இடையில் அவர்களை சமாளித்து ஆட்சியை நிர்வகிக்க பயிற்சி தரப்பட்டது. போர்ப் பயிற்சியிலும் சிக்கந்தர் சிறந்து விளங்கினார். சிக்கந்தருக்கு ஷாஜஹான் என்ற மகள்தான் வாரிசு. சிக்கந்தர் பர்தா அணியவில்லை. புத்திசாலியாகவும் அதே சமயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காத மனஉறுதி உள்ளவராகவும் விளங்கினார். பொது வாழ்க்கையில் குடிமக்களை நேரடியாகச் சந்தித்து வந்தார்.

"போலோ' விளையாடுவதும், வேட்டைக்குச் செல்வதும், வில் - வாள் பயிற்சி, சிக்கந்தரின் பொழுதுபோக்குகள். உழவர்களை சந்திக்க அவர்களைத் தேடி அவர்களின் கிராமத்திற்கே சென்று வருவார். ராணுவத்தை நிர்வகித்ததும் சிக்கந்தர்தான். அரசு அலுவலகங்கள், கருவூலகத்திற்கும் அவ்வப்போது சென்று வேலைகள் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வார். பெண்கள் தொழில்நுட்ப பயிற்சி பெற போபாலில் விக்டோரியா தொழில்நுட்பப் பள்ளியைத் தொடங்கினார்.

ஷாஜஹான் பேகம்

சிக்கந்தர் பேகத்தின் மரணம் நிகழ்ந்து 17 நாள்களுக்குப் பிறகு அவரது மகள் ஷாஜஹான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். 1868 - 1901 வரை இவர் ஆட்சி செய்தார். ஆனால், ஷாஜஹான், தனது பாட்டி, அம்மாவைப் போல தைரியசாலி அல்ல. அடிப்படையில் மென்மையான பெண்ணாகவே இருந்தார். போர்ப் பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கவிஞராக அவதாரம் எடுத்தார். தனது ஆட்சிக் காலத்தில் கலை, இலக்கியம் வளர முக்கியத்துவம் அளித்தார். பெண் கவிஞர்களை ஆதரித்தார்.

போர்ப் பயிற்சியில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தனது ஆட்சியில் வரிக் கொள்கையை சீர்திருத்தம் செய்துள்ளார். மக்களுக்கு வீடுகள், சுகாதார வசதிகள், பெண்களின் முன்னேற்றம் குறித்த பல திட்டங்களை அறிமுகம் செய்தார். "பெண்களின் மறுமலர்ச்சி' குறித்த தனது சிந்தனைகளை தொகுப்பாக வெளியிட்டார். இது இந்தியாவில் பெண்கள் குறித்த முதல் கலைக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது.

சுல்தான் கைகுஸ்ரா

ஷாஜஹானுக்கு பிறகு அவரது மகள் சுல்தான் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சிக்கு வந்தார். 1901 முதல் 1926 வரை சுல்தான் கைகுஸ்ரா ஜஹான் பேகம் ஆட்சி செய்தார்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். உத்திர பிரதேசத்தின் புகழ் பெற்ற அலிகார் பல்கலைக்கழகம் தொடங்க நிதி உதவி அளித்தவர். அலிகார் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் வேந்தர் இவர்தான்.

அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பையும் 1914 -இல் ஏற்றிருந்தார். 1918 - இல் தொடக்க கல்வியை கட்டாயமாக்கியவர். எல்லா மதங்களை சேர்ந்தவர்களையும் எந்த வித்தியாசமும் பாராமல் சமமாக நடத்தியதால் "சர்க்கார் அம்மன்' என்று அழைக்கப்பட்டார்.

போபால் சமஸ்தானத்தின் பேகம்களின் ஆட்சி, சுல்தான் கைகுஸ்ரா ஜஹானுக்கு மகன் பிறந்ததால், அத்துடன் நிறைவானது. மகன் அப்துல் ஹமீத் நவாப் ஆக வேண்டும் என்பதற்காக சுல்தான் கைகுஸ்ரா ஜஹான் 1926 -இல் ஆட்சிப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து ஓய்வு பெற்றார்.

போபால் பேகம்கள் வாழ்ந்து வந்த 120 அறைகள் கொண்ட அரண்மனையான "தாஜ் மஹால்' இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானிலிருந்து வந்த சிந்தி அகதிகள் வசிக்க அன்றைய நவாப் அனுமதித்தார் . நான்கு ஆண்டுகள் சிந்தி அகதிகள் அதில் வாழ்ந்தனர். அந்த அரண்மனை இன்று பொலிவு இழந்து, இடிபாடுகளுடன்காட்சி அளிக்கிறது.

உலகிலேயே தொடர்ந்து நாலு தலைமுறையாக பெண்கள் ஆட்சி செய்ததற்கு மெளன சாட்சியாக "தாஜ் மஹால்' அரண்மனை போபாலில் நிற்கிறது..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT