மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 27:  சுடச்சுட ஒளிரும் தங்கம்!

கணேஷ் சுந்தரமூர்த்தி


பூமியின் ஒரு பகுதி விடியலை வரவேற்றுக் கொண்டிருந்தது. இளஞ்சூரியனின் பொன்கிரணங்கள் வானத்தில் பல அழகிய வண்ணங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தன. அந்த அழகிய காட்சி, பறவைகளை ஈர்த்திருக்குமோ என்னவோ, "கீச் கீச்' என்று கத்திச் சிறகுகளை அடித்து, கிளை விட்டுக் கிளை தாவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
இந்த அழகு எல்லாம் அலமேலுவின் மனதைச் சிறிதும் ஈர்க்கவில்லை. இனிய குளுமையான தென்றல் காற்று அவளுடைய முன் நெற்றி முடிகளை வருடி, அவள் உடம்பில் கிளுகிளுப்பை மூட்டினாலும், அதை அவள் உள்ளம் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
மலைபோலத் தன் முன் குவிந்து கிடக்கும் பாத்திரங்களும், பெரிய மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் அழுக்குத் துணிகளும் அவள் உற்சாகத்தைக் குறைத்துவிட்டன. இது அவளுடைய அன்றாட வேலைகளுள் ஒன்று என்றாலும், இன்று அவளுக்குச் சுரம் வருவதைப் போல உடல் முழுவதும் வலித்தது. தலை கனமாக இருந்தது. இதைச் சொன்னால் சித்தி, வேலை செய்யச் சோம்பேறித்தனம் பட்டு, அலமேலு சாக்குப்போக்குச் சொல்வதாகத் தகாத வார்த்தைகள் கொண்டு கத்துவாள். கிடைக்கின்ற அரை வயிற்றுச் சாப்பாட்டிலும் துண்டு விழுந்துவிடும்.

கடலூர் மாவட்டத்தில் தேனம்பாக்கமும் ஒரு கிராமம்.  அங்கே வாழும் வேலப்பன் மூன்று காணி நிலத்திற்குச் சொந்தக்காரன். கொல்லையில் இரண்டு கறவை மாடுகள், வேப்பமரத்துக்கு அடியில் நான்கு வெள்ளாடுகள், இதுதான் அவன் சொத்து. மனைவி சொக்கி மீது உயிராகத்தான் இருந்தான். ஆனால்  அவள் அடுத்தடுத்த நான்கு பெண் குழந்தைகளைப் பெற்தெடுத்தபொழுது, வேலப்பனுக்குச் சொக்கி வேண்டாதவளாகத் தெரிந்தாள். தனக்கு  ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்கத் துப்பில்லாதவள் என்று அவளை ஏசத் தொடங்கினான்.

ஐந்தாவது முறை சொக்கி கருவுற்றபொழுது அது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டும் என்று சொக்கி வேண்டாத தெய்வங்கள் இல்லை, ஆனால் இந்த விஷயத்தில் அந்தத் தெய்வங்களின் காதுகள் அடைந்துக் கொண்டன போலும், ஐந்தாவது பெண் பிள்ளையாக அலமேலு இந்தப் பூமியில் முகம் காட்டியதும், அவள் அப்பன், வீட்டு வாசற்படியை மிதிக்க மறுத்துவிட்டான். அந்தக் குழந்தை வீட்டில் இருக்கும்வரை, வீடு திரும்புவதில்லை என்று சூள் உரைக்க, பிரசவத்திற்கு உதவ வந்த சொக்கியின் அம்மா பொன்னம்மா, அலமேலுவை வளர்க்க முடிவு செய்து, அவளை எடுத்துக்கொண்டு தன்            கிராமத்திற்குச் சென்ற பிறகே வேலப்பன் வீடு திரும்பினான்.

பாட்டி பொன்னம்மாவிடம், ஏழு வருடங்கள் அலமேலு வளர்ந்தாள். அந்தக் காலக்கட்டம்தான் அவள் வாழ்விலேயே, பொன்னானத் தருணங்களாக அமைந்தது. அந்த ஏழு வருடங்கள் அவளுடைய பெற்றோர் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

திடீர் என்று ஒரு நாள், பொன்னம்மா வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பொழுது தலைசுற்றி விழுந்தவள் பிறகு எழுந்திருக்கவே இல்லை. ஒப்புக்குத் துக்கம் விசாரிக்க வந்த வேலப்பன், அலமேலுவைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடவே, சொக்கியின் தங்கை சிவகாமி அலமேலுவைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்ப்பதாகச் சொன்னாள்.

சிவகாமி, பாசத்தினால் அப்படிச் செய்யவில்லை என்பது போகப்போக அலமேலுவுக்கும் புரிந்துபோனது. சொக்கிக்குக் கொடுக்காத வரத்தை ஆண்டவன் சிவகாமிக்கு அள்ளிக் கொடுத்திருந்தான். அவளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். இதுதவிர அவளுடைய கணவனுக்குச் சொந்தமான முந்திரிக்காடு இருந்தது. நல்ல வசதியான பெரிய வீடு. தன் பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தாள். ஆனால் அலமேலுவைப் படிக்க அனுப்பவில்லை. தனக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்கினாள்.
அலமேலு பன்னிரண்டு வயதைத் தாண்டியதும், முழு வேலைகளையும் அவள் தலையில் கட்டினாள். எப்பொழுதாவது விழித்துக் கொள்ளும் மனசாட்சியை அடக்கவும் சிவகாமிக்குத் தெரிந்திருந்தது. சும்மாவா வேலை பார்க்கிறாள், மூன்று வேளை கொட்டிக் கொள்கிறாளே என்று நினைத்துக் கொள்வாள்.

இடுப்பு உடையும் வேலைகளுக்கு மத்தியிலும், யெளவனம் அவளை வெகுவாக அழகுபடுத்திக் கொண்டிருந்தது. ஒரு நல்ல நாளில் அலமேலு தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் பூப்பெய்தினாள்.

""அலமேலு,'' அன்பொழுகக் கூப்பிட்டான் சிவகாமியின் கணவன் மாரி.

""என்ன சித்தப்பா?''

""குடிக்கக் கொஞ்சம் சுக்குக் காபி போட்டு எடுத்திட்டு வா''.
மனைவி இல்லாத சமயங்களில் இப்படி ஏவி, அலமேலு காபியைக் கொடுக்கும்பொழுது அவளுடைய கையைத் தவறுதலாகப் பிடிப்பதுபோலத் தடவிப் பார்ப்பான்.
பதினாறு வயதாகும் அலமேலுவுக்கு அவனின் ஈன புத்தி புரியாமலா போகும். தன்னுடைய தலையெழுத்தை எண்ணி நொந்து போனாள். எங்கே போவது? யாரை நோவது? என்று அலமேலுவுக்கும் புரியவில்லை.
பெண்களுக்கு, ஆண்களுடைய சபல புத்தியை மோப்பம் பிடிக்கும் ஆற்றலை ஆண்டவன் அளித்திருக்கிறான். மாரியின் ஜாடை மாடை செயல்களைக் கண்டு சிவகாமிக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. கணவனாயிற்றே, அவனை விட்டுக் கொடுக்க முடியுமா? ஒரு முடிவுக்குச் சிவகாமி வந்தாள்.
""அலமேலுவுக்குக் கல்யாணம்'' என்றாள் சிவகாமி.
""ஏன் என்ன அவசரம்?'' என்றான் மாரி.
""ஏன் உன்னுடைய சபலத்திற்கு அவளை மடக்கிப் போடலாம் என்று பார்க்கிறாயா?''
மனைவி சுற்றி வளைக்காமல் நேரடியாக மோத வாயடைத்துப் போனான் மாரி.
மளமளவென காரியங்கள் நடந்தேறின. ஒரு அம்மன் கோயிலில் முனுசாமிக்கு இரண்டாவது மனைவியாக அலமேலு ஆனாள்.
வயது வித்தியாசம் எல்லாம் அலமேலுவைப் பாதிக்கவில்லை. அப்பாடி மாரி, சிவகாமியிடம் இருந்து விடுதலை கிடைத்ததே  என்று மனம் மகிழ்ந்தாள். இந்த இளம் வயதிலேயே அவள் பட்ட கஷ்டங்கள், நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி கூடுவதுபோல அவள் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி அங்கே ஞான விளக்கை ஏற்றி வைத்திருந்தது. 
""அலமேலு'' என்று குரல் தழுதழுக்கக் கூப்பிட்டான் முனுசாமி.
""சொல்லுங்க''.
""என்னுடைய இரண்டு புள்ளைங்களிலே மூத்தவனுக்கே பன்னிரெண்டு வயசாகுது. இளைய பொண்ணுக்குப் பத்து வயசு. என்னுடைய பொண்ணு போல இருக்கிற உன்னை, மனசாட்சியை அடகு வெக்சுட்டு கட்டிக்கிட்டேன். என்னை மன்னிச்சுடு''.
""அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் பொறந்தது முதலே, கஷ்டத்தைத்தானே பார்த்து வளர்ந்தேன், உங்கக் கிட்ட அன்பைத் தவிர நான் எதையும் எதிர்பார்க்கலே, உங்க புள்ளைங்க இனி என் பிள்ளைங்க'' என்றாள்.
ஆண்டுகள் நான்கு ஓடி மறைந்தன.
பள்ளிப்பட்டி கிராமத்திலிருந்து சேலத்துக்கு இட்டுச் செல்லும் நெடுஞ்சாலையில் முனியன் ஒரு டீக்கடை வைத்திருந்தான். அலமேலுதான் உழைப்பாளி ஆயிற்றே. தனக்குத் தெரிந்த சமையல் கலையை முதலீடாக்கினாள். சுடச்சுட இட்லி, தோசை, பூரி என்று காலை டிபன் வகைகளில் தொடங்கி, பிறகு மதியச் சாப்பாடு, மாலை சூடான டீ, காப்பி, மசால்வடை, பஜ்ஜி என்று வழங்கியதில், அந்தச் சிறிய டீக்கடை, சாப்பாட்டுக் கடையானது, கையில் சிறிது பணம் சேர ஆரம்பித்தது.
தன்னுடைய இருபத்தோராவது வயதில் ஒரு அழகான பெண் குழந்தைக்கு அலமேலு தாயானாள். தன்னை அன்புடன் ஏழு வருடங்கள் வளர்த்த பாட்டி பொன்னம்மாவின் நினைவாகத் தன் மகளுக்குப் "பொன்னி' என்று பெயர் வைத்தாள். 
தன் மூத்தாள் குழந்தைகளையும் அன்பு காட்டி வளர்த்தாள்.

மாலை ஆறு மணிக்கு மேல் சாப்பாட்டுக் கடை கிடையாது என்பதனால், இரவு பள்ளிக்குச் சென்று எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டாள். இன்று அலமேலு செய்தித்தாள்களைப்  படிக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

பள்ளிப்பட்டி கிராமத்துப் பெண்களுக்கு எல்லாம் அலமேலு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினாள். அங்கே வீட்டில் அடைபட்டுக் கிடந்தப் பெண்கள், வயலில் கூலி வேலைக்குச் செல்பவர்கள், குடும்பத்தில் கணவனாலோ அல்லது மற்ற உறவுகளாலோ கொடுமை அனுபவிப்பவர்கள், அலமேலுவிடம் ஆலோசனை கேட்க வந்தனர்.

அவர்களுக்கு எல்லாம் தகுந்த ஆலோசனை தந்ததுடன் அல்லாமல், அந்தப் பெண்களுக்கு எல்லாம் சுயதொழில் செய்ய அலமேலு ஊக்கம் கொடுத்தாள்.
சுயஉதவிக் குழுவுக்கு முன் நின்றாள். பெண்கள் தாங்களாகச் சம்பாதித்ததில் ஒரு பகுதியைச் சேர்த்து வைத்து, பிறகு வங்கியின் துணைகொண்டு பல தொழில்களைத் தொடங்க வகை செய்தாள்.

இன்று, முனியனின் சிறிய டீக்கடை, "முனியாண்டி அலமேலு விலாஸ்' என்ற பெயரில் பெரிய ஹோட்டலாக பரிமளிக்கின்றது. அதுமட்டுமா இன்று பள்ளிப்பட்டியின் பஞ்சாயத்துத் தலைவர் யார் தெரியுமா? அலமேலு பி.ஏ., என்றால் சும்மா அதிருது இல்ல. எப்பொழுது அலமேலு பட்டதாரி ஆனாள்? மனம் இருந்தால் மார்க்கமா இல்லை.

வள்ளுவர் வாக்கு, தெய்வ வாக்கு அல்லவா!

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் 
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

( குறள் எண் : 267) 

பொருள்:  தன்னைத் தானே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காகத் தவவாழ்க்கையை வாழ்பவர்க்கு, நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவதுபோல அந்தத் துன்பம் வருத்த வருத்த அவர்களுக்கு ஞானம் பெருகும், புகழும் ஓங்கும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT