மகளிர்மணி

மதுரையின் முதல் பெண் மருத்துவர்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

 சமீபத்தில், தனது 100-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் மதுரையின் முதல் பெண் மருத்துவரான பத்மாவதி.
 மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் 27.4.1921-ஆம் ஆண்டு பிறந்தவர்.
 இவரது தந்தை டாக்டர் சுந்தரராஜன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அப்போது மதுரையில் பெண் மருத்துவர் யாரும் இல்லை. இதனால் பல பெண் நோயாளிகள், தங்களது உபாதைகளை ஆண் மருத்துவர்களிடம் சொல்லத் தயங்கிக் கொண்டு, கஷ்டப்பட்டதுடன் சிகிச்சைக்கும் வரதயங்கினார்கள்.
 இதை உணர்ந்த சுந்தரராஜன், தனது மகளை மருத்துவராக்க முடிவு செய்தார். பெண்களை பள்ளிக்
 கூடத்துக்கு அனுப்பவே அனுமதிக்காத காலம் அது. இதனால், அவரது முடிவுக்கு உறவினர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 இருந்தாலும் பல சவால்களுக்கு மத்தியில் 1949-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் முடித்தார் பத்மாவதி. படித்து முடித்ததும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சில காலம் பணியாற்றிவிட்டு, பின்னர் மதுரை நகராட்சி மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.
 அன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வர பல கர்ப்பிணிகள் தயக்கம் காட்டியுள்ளனர். இதனால் தனது குழுவுடன் அவர்களது வீட்டிற்கே சென்று பிரசவம் பார்த்துள்ளார் பத்மாவதி.
 பின்னாளில் மதுரையின் அனைத்து அரசு மகப்பேறு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளராகவும் பொறுப்பேற்றார்.
 1969-இல் உலக சுகாதார நிறுவனம் மகப்பேறு தொடர்பாக நடத்திய சர்வதேச கருத்தரங்கில் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். அங்கு சென்று தன் கருத்துகளை தைரியமாக முன் வைத்த பெருமை இவருக்கு உண்டு.
 பணி ஓய்வுக்குப் பிறகு, "பத்மாலயா ஹெல்த் கிளினிக்' என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்தி பலருக்கு சிகிச்சையளித்தார். இவரது அயராத முயற்சியால் பல பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது.
 தற்போது மூத்த மகன் டாக்டர் ஆர்.குருசுந்தருடன் வசித்து வருகிறார். 100 வயதானாலும் ஆரோக்கியமாகவும், தெளிவான பார்வையுடனும் உள்ளார். தற்போது கூட சிக்கலான பிரசவங்களுக்கு மகப்பேறு மருத்துவரான மருமகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
 -விசாலாட்சி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT