மகளிர்மணி

கதை சொல்லும் குறள் : நீங்காத ஓவியமாக பதிந்தது! 26

5th May 2021 08:00 AM | சாந்தகுமாரி சிவகடாட்சம்

ADVERTISEMENT

ஜாம்பஜார் மார்க்கெட்டில் அன்று வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதிலும் ஆட்டு இறைச்சியை விற்கும் கடையில் பெருசுகள் முதல் சிறுசுகள் வரைக் கைகளில் பைகளுடன், வரிசைகட்டி நின்று கொண்டிருந்தனர்.
 சலீம்பாய் மாரியப்பனைப் பார்த்துவிட்டால் போதும் குஷியாகி விடுவார். அவர் கடையின் ரெகுலர் கஸ்டமரான மாரியப்பன் கைராசிக்காரன் என்பது அவரின் கணக்கு. மாரியப்பன் வந்து கறி வாங்கிச் சென்றால், அன்று அனைத்தும் விற்றுவிடும். எனவே, மாரியப்பனுக்கு அவன் கைராசிக்காக சலீம்பாய் சில சலுகைகளைக் கொடுத்திருக்கிறார்.
 மாரியப்பன் ஒரு அசைவப் பிரியன். கடல்வாழ் உயிரினங்கள் தொடங்கி கோழி, ஆட்டு இறைச்சி என்று அவன் சாப்பிடும் பட்டியல் நீளும்.
 மாரியப்பனை போலவே, எழுபத்து ஐந்து வயதாகும் அவனது தந்தை செல்வம், பல் ஆட்டம் கண்டாலும் அசைவம் சாப்பிடுவதில் வல்லவர். அவர் சாப்பிடுவதை, மருமகள் கனகம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பாள்.
 "அப்பாடா, மொத்தக் குடும்பமே அரக்க வம்சம்'' என்று தனிமையில் மாரியப்பனைக் கலாட்டா செய்வாள். இதில் அதிசயம் என்னவென்றால் கனகம், முட்டையைக்கூடச் சாப்பிடாதவள். அவள் குடும்பம் சைவ முதலியார்கள், இப்படிப்பட்ட அசைவக் குடும்பத்தில் எப்படிப் பெண் கொடுத்தார்கள்? சொந்த வீடுகள் இரண்டு, வங்கியில் கிளார்க்காக கைநிறையச் சம்பளம், பெற்றோருக்கு ஒரே பையன், கூடப் பிறந்ததும் ஒரே பெண் என்றால் பெண்ணைக் கொடுப்பவர்கள் இந்தக் காலத்தில் மற்றதை ஒதுக்கி விடுகிறார்கள்தானே!
 கல்யாணம் முடிந்ததும் கனகத்தின் அப்பா, ஒரு பெரிய ஹோட்டலில் மாப்பிள்ளை, பெண்ணிற்கு மூன்று நாள்களுக்கு ஓர் அறையை புக் செய்துக் கொடுத்துவிட்டார். அந்த ஹோட்டல் அசைவ உணவில் பெயர் பெற்றது என்பது சொல்லவும் வேண்டுமா!
 பாவம் கணவனுக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் கனகம் அசைவ உணவுகளை நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டாள். இதோ இன்றைக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என்று மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். இதில் என்ன வேடிக்கை என்றால் தன் பேரப்பிள்ளைகளுக்கும் அசைவ உணவை உண்ணக் கனகத்தின் மாமியார் பழக்கி விட்டிருந்தாள்.
 மறுநாள் தீபாவளி, அதனால் மாரியப்பன் இரவு பத்து மணிக்கே கறிக்கடையில் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிய உடன் சாமி படத்தின் முன்பு புதுத் துணிகளை வைத்து, வாழை இலையில் சுடச்சுடக் கல் தோசையும், கறிக் குருமாவும் படைக்கப்படும். தீப ஆராதனைக் காட்டிய பிறகு எல்லோரும் தோசையும் கறிக் குருமாவையும் ஒரு வெட்டு வெட்டுவார்கள்; கனகாவுக்கு மட்டும் எப்பொழுதும் போல தேங்காய்ச் சட்டினிதான்.
 "என்ன மாரியப்பா, வழக்கம்போல, இரண்டு கிலோ கறிதானே'' என்றார் சலீம்பாய்.
 "இல்லை பாய், மூன்று கிலோவாகக் கொடுத்து விடுங்கள். நாளைக்கு என் நண்பர்கள் சிலரை வீட்டுக்குச் சாப்பிட அழைத்திருக்கிறேன்'' என்றான் மாரியப்பன்.
 தன்னுடைய எழுபத்து ஏழாவது வயதில் ஒரு நாள் திடீர் என்று மாரியப்பனின் தந்தை செல்வம் மாரடைப்பால், விண்ணுலகத்திற்குப் பயணப்பட்டு விட்டார்.
 வயதாகி இறந்தாலும் தந்தை ஆயிற்றே மாரியப்பன் சோகத்தில் மூழ்கிப்போனான். பதினாறாவது நாள் காரியங்கள் எல்லாம் முடிந்தவுடன், கரிநாள் வந்தது. எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிச் சொந்தப் பந்தங்களுடன்
 அசைவம் சமைத்து சாப்பிடும் நாள் அது.
 தன் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஆட்டுக்கறி பிரியாணியையும், ஆட்டுக்கறி சுக்காவையும் மெயின் அயிட்டமாகச் செய்ய மாரியப்பன் முடிவு செய்தான்.
 "சலீம்பாய்',
 "என்ன மாரியப்பா, செய்தி கேட்டேன் அல்லா அவருக்கு நற்கதியை அளிப்பார்'' என்றார்.
 "சலீம்பாய், கரிநாளைக்கு பிரியாணியும், சுக்காவும் பெரிய அளவில் செய்யணும்; அதுக்கு இரண்டு ஆடு முழுசா சப்ளை பண்ணிடுங்க''.
 "அப்படியே ஆகட்டும். நீ நாளைக் காலை அஞ்சு மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு வந்துடு.
 காலையில் நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து சலீம்பாய் வீட்டுக்குச் சென்றான் மாரியப்பன். ஊரை விட்டு விலகி ஒதுக்குப்புறத்தில் அந்த வீடு இருந்தது. அங்கே வீட்டின் பின்புறத்தில் வரிசையாக ஐந்து ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. சலீம்பாயின் மனைவி சுடச்சுட டீயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
 கூடத்தில் மாரியப்பன் அமர்ந்து இருந்தான். சிறிது நேரத்தில் ஓர் ஆட்டின் தீனக் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து கொல்லைப்புறம் நோக்கி மாரியப்பன் விரைந்தான். அங்கே...
 வெள்ளை நிற ஆடு ஒன்று கழுத்து அறுபட்ட நிலையில் துடித்துக் கொண்டு இருந்தது.
 மாரியப்பன் வாழ்க்கையில் முதல்முறையாக ஆடு கழுத்து வெட்டப்பட்டு துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
 மாரியப்பனின் கைகளும், கால்களும் சில்லிட்டன, தலை சுற்றியது. கீழே விழாமல் இருக்கப் பக்கத்தில் இருந்த முருங்கை மரத்தைப் பிடித்துக் கொண்டான்.
 ஆட்டின் உடல் துடிப்புகள் மெதுவாக அடங்கத் தொடங்கின, கடைசியாக அது தன் உயிரை விட்டது. அந்தக் கண்களில் தெரிந்த பய உணர்ச்சி, கடைசியாக வழிந்த கண்ணீர், நீங்காத ஓவியமாக மாரியப்பனின் இதயத்தில் பதிந்தது.
 புலால் என்பது இன்னோர் உடம்பின் புண் என்பது அவனுக்குப் புரிந்துபோனது.
 கரிநாளில் மாரியப்பனின் சொந்தபந்தங்கள் பிரியாணியை ஒரு பிடிபிடிக்க மாரியப்பனின் நாக்கு அதை ருசிக்கவே இல்லை. அன்று மட்டுமா? பின்பு என்றுமே அவன் கறிக்கடையின் முன் சென்று நிற்கவில்லை.
 மாரியப்பனுக்குத் தன் தந்தையின் மீது அதிகப் பாசம், அதனால் அவருக்கு விருப்பமான அசைவ உணவை மாரியப்பன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான் என்று உலகம் பேசிக்கொண்டது.
 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
 புண்ண துணர்வார்ப் பெறின்.
 (குறள் எண்: 257)
 பொருள் :
 புலால் என்பது இன்னோர் உடம்பின் புண், அறிந்தவர் அதை உண்ணமாட்டார்.
 (தொடரும்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT