மகளிர்மணி

கோடைக்கு இதமளிக்கும் பழங்கள்!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

 கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கை கொடுக்கின்றன. அவை எந்தெந்த பழங்கள் என்று பார்ப்போமா:
 ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிறு உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. சூட்டினால் ஏற்படும் அடிவயிற்று வலியைக் குறைக்கும்.
 தர்பூசணி: தாகத்தைத் தணிக்கும். பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்த சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.
 சாத்துக்குடி: வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி தண்ணீரற்றுப் போகும் வறட்சி, ரத்தத்தில் கழிவுப் பொருள்கள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.
 முந்திரிப்பழம்: முந்திரிப் பழத்தில் உள்ள கரகரப்பு பலருக்கு பிடிக்காது என்பதால் இதை ஒதுக்குவது உண்டு. ஆனால் இந்தப் பழம் எலும்புகளுக்கு உறுதியையும், பற்களுக்கு பலத்தையும் தரும். கோடை காலத்தில் முந்திரிப் பழத்தை வாங்கி கொட்டையை நீக்கி விட்டு பழத்தை நறுக்கி சாறு பிழிந்து அதில் பாதியளவு சர்க்கரையை கலந்து வெயிலில் வைக்க வேண்டும். அதன் அடியில் சுண்ணாம்பு வண்டல் அப்படியே படியும் அதை நீக்கிவிட்டு தெளிந்த சாறை வடிகட்டி குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். கோடை தாகத்தை தணிக்கும்.
 இலந்தைப்பழம்: இதை சாப்பிட்டால் குமட்டல், வாந்தி நிற்கும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளும் சக்தி இலந்தைக்கு உண்டு.
 சப்போட்டா பழம்: சப்போட்டா பழக் கூழ் கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். தாகத்தையும் தணிக்கும் தன்மை உடையது. சப்போட்டா கூழுடன் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும்.
 - ஆர். ஜெயலட்சுமி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT