மகளிர்மணி

குழந்தை வளர்ப்பு: பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை! நளினா ராமலட்சுமி

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

ராம்கோ இன்டஸ்டீரிஸ் குழுமத்தின் நிறுவனர் ராமசுப்ரமணிய ராஜாவின் மகள் நளினா ராமலட்சுமி. திருமணத்துக்கு பின்னர், அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தவர். ஒரு கட்டத்துக்கு பிறகு தாயகத்திற்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வர, மீண்டும் இந்தியா வந்து சேர்ந்தார். தற்போது, ராம்கோ குழுமத்தின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தனது தாய்நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தன்னால் ஆனதை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் "பேரண்ட் சர்க்கிள்' (parent circle) என்ற குழந்தைகளுக்கான மாத இதழை தொடங்கி வெளியிட்டு வருகிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நான் அமெரிக்காவில் இருந்தபோது, அங்கே குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு பெரிய அளவில் சப்போர்ட் இருந்தது. அவ்வப்போது, குழந்தை வளர்ப்பு குறித்து அங்கே நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும், கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது எல்லாம் நான் நினைத்துக் கொள்வது உண்டு.. நம் நாட்டு குழந்தைகளுக்கும் இது போன்ற அறிவுசார்ந்த கல்விமுறை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. 
அந்த தாக்கம்தான் சென்னை திரும்பியதும், குழந்தைகள் அறிவு வளர்ச்சியை மேம்படுத்த உதவும் கல்விமுறை குறித்து நிறைய ஆராய்ந்தேன். ஆனால், நான் எதிர்ப்பார்த்த தரவுகள் ஏதும் இங்கு அவ்வளவாக இல்லை.
மற்றொருபுறம் பெரும்பாலான பெற்றோருக்கு குழந்தையை நல்லவிதமாக வளர்க்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வும் குறைவாகவே இருக்கிறது.
மேலும், நமது குழந்தைகள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இவர்களிடம் இருந்துதான் பெரும்பாலும் கற்றுக் கொள்கிறார்கள். இதிலிருந்து, நான் உணர்ந்தது, ஒரு குழந்தை நல்ல முறையில் வளர, முதலில் பெற்றோருக்குதான் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. 
எனவேதான் இந்த "பேரண்ட் சர்க்கிள்' பத்திரிகையை தொடங்கினேன். இது குழந்தை வளர்ப்புக்கான மாத இதழ். மேலும், உலகெங்கும் வாழும் தமிழ் பெற்றோரின் நலனுக்காக "செல்லமே' என்ற இதழையும் தொடங்கி நடத்தி வருகிறோம். இவை அச்சு மற்றும் டிஜிட்டல் மீடியாவாக இயங்கி வருகிறது. ஒரு குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை அவர்களை எப்படி நல்லவிதமாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
உதாரணமாக, "செல்லமே' பத்திரிகையை பொருத்தவரை, பெரியவர்களின் உதவியில்லாமல் குழந்தையை வளர்க்கும் சூழலில் இருக்கும் இளம் தாய்மார்களுக்கு, குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்துக் கொண்டே இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் உடனே பயந்துவிடுவார்கள். எனவே, இளம் தாய்மார்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்தப் பத்திரிகை இருக்கும். இதில், ஒரு குழந்தை பிறந்தது முதல் என்னென்ன செய்ய வேண்டும், எந்தெந்த மாதங்களில் தடுப்பூசி போட வேண்டும். எந்த மாதத்தில் என்ன உணவு கொடுக்க வேண்டும் போன்ற முழுமையான தகவல்கள் அடங்கியிருக்கும். 
அதுபோன்று சமீபத்தில் எங்கள் இதழுக்காக பீஸ் (PEACE) ப்ரொசஸ் என்ற கான்சப்ட்டும் உருவாக்கியிருக்கிறோம். இதில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் அர்த்தம் உண்டு. இதன் மையகருத்து என்னவென்றால், பெற்றோர் தனக்கிருக்கும் மன அழுத்தத்தையும், கோபத்தையும் குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்கள் ஏதாவது தப்பு செய்தாலும், அதற்கு கடுமையாக தண்டிக்காமல், அமைதி வழியில் எப்படி அவர்களை வழிக்குக் கொண்டு வருவது என்பது உள்ளடக்கியது. 
லிட்டில் லேனர்ஸ் அட் ஹோம்: இது 3-5 வயது குழந்தைகளுக்கானது. இது கணக்குப்பாடத்தை எப்படி ஈசியாக புரிய வைப்பது, ஆங்கிலம் எப்படி கற்றுக் கொடுப்பது, "ஸ்கில் டெவலப்மெண்ட்' போன்றவை அடங்கிய ஒர்க் புக். ஒரு குழந்தை பள்ளி சென்று திரும்பியதும், உபயோகமற்ற விளையாட்டுகளில் பொழுதை கழிக்காமல், பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட இது உதவியாக இருக்கும். உதாரணமாக, ஒரு நூல் எடுத்துக் கொண்டால், அதன் மூலம் என்னவெல்லாம் செய்யலாம், கழிந்தவற்றை இணைக்கலாம். பூ தொடுக்கலாம் போன்றவற்றை விளக்கும். அதுபோன்று, பள்ளியில் ஒரு குழந்தை கத்தரிக்காய் ஊதா நிறத்தில் இருக்கும் என்று ஏட்டில் உள்ள புகைப்படத்தை பார்த்து படித்துவிட்டு வரும். அதுவே, வீட்டில் சொல்லிக் கொடுக்கும்போது, கத்தரிக்காயை நேரிலேயே காண்பித்து கத்தரிக்காய் இப்படித்தான் இருக்கும். இந்த நிறத்தில்தான் இருக்கும் என்பதை விளக்கமுடியும். இது போன்று வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படியெல்லாம் கற்றுக் கொடுக்கலாம் என்பதை விளக்கும். 
"பேரண்ட் சர்க்கிள்' பொருத்தவரை 0-18 வயது வரை உள்ள குழந்தைகளைச் சார்ந்தது. உதாரணமாக, டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு என்னனென்ன தேவை, என்னென்ன பிரச்னை இருக்கும் என்பதை உணர்ந்து, அதிலிருந்து அவர்களை எப்படி வெளிக் கொண்டுவந்து நல்வழி படுத்துவது என்பதை விளக்குகிறது. அதுபோன்று டீன் ஏஜ்ஜில் உள்ள பெண் குழந்தைகள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது, ஒரு பிரச்னை வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது போன்றவை இதில் இருக்கும். 
இதற்கான பாடத்திட்டங்கள் அனைத்தையும் உருவாக்க ஒரு குழுவை நியமித்திருக்கிறோம். இவர்களில், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், பேமிலி கவுன்சிலர், சைல்ட் சைக்காலஜிஸ்ட், பெங்களுரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் பிரபல மருத்துவரான டாக்டர் நித்யா பூர்ணிமா, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த குழந்தைகள் சைக்கியார்டிஸ்ட் என குழந்தை வளர்ப்பு குறித்து நிறைய கற்றிந்த அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். 
எங்களது ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் இவர்கள் ஒன்றிணைந்து அலசி ஆராய்ந்து , விமர்சித்து பின்னர், எதை கொடுக்க வேண்டும். எதை கொடுக்கக் கூடாது போன்றவற்றையெல்லாம் மூன்று, நான்கு முறை ஆலோசித்து தீர்மானித்த பின்னர்தான் ஒவ்வொரு கட்டுரையும் வெளிவருகிறது . ஏனென்றால், எந்த ஒரு பெற்றோருக்கும் தவறான கருத்து போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். 
இதற்காகவே, முன்பெல்லாம் அவ்வப்போது பெற்றோருடன் நேரடி சந்திப்பு வைப்போம். தற்போது கரோனா அச்சத்தால், ஆன்லைனில் பெற்றோர்களை சந்திக்கிறோம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். பிரச்னைகளில் இருந்து எவ்வாறு வெளிவருவது போன்றவற்றிற்கு ஒரு பிளாட்பார்மாக அமைத்து கொடுக்கிறோம்.
இதைத்தவிர, "ஸ்பெஷல் சைல்ட்' என்று சொல்லப்படும் சிறப்பு குழந்தைகள், "ஆட்டிஸம்' பாதித்த குழந்தைகள் வளர்ப்புக்கான வழிகாட்டுதலும் தருகிறோம். மொத்தத்தில் லேர்னிங், வெல்நெஸ், லைப் ஸ்டைல், பேரன்டிங் இதுதான் எங்களுடைய தாரக மந்திரம். இவை நான்கையும், ஒரு பெற்றோர் நல்ல முறையில் கையாண்டால்தான் அந்த குடும்பம் நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்'' என்றார்.
- ஸ்ரீதேவி குமரேசன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT