மகளிர்மணி

அன்னையான தருணம் - நெகிழும் ஆசிரியை

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

 திருக்குறளை மாணவர்கள் சிறுவயதிலேயே படித்து வளர்ந்தால் நல்லொழுக்கத்துடன் அவர்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்து கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு நான் பணியாற்றும் க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 130 குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகத்தை வாங்கி தந்துள்ளேன்.
 இதற்கு பின்னால் உள்ள விஷயங்களை விவரிக்கிறார் ஆசிரியை ஜெயமேரி.
 "எனது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வாங்கி கொடுத்ததுடன் அவர்களை எப்படி குறள்களை படிக்க வைப்பது என்று யோசித்த போது உருவானது தான் "குறள் உண்டியல்' திட்டம். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகத்துடன் உண்டியலை வாங்கி கொடுத்துவிடுவேன். ஒரு குறள் சொல்லும் மாணவர்களுக்கு ஒரு ரூபாயும், குறளோடு பொருளும் சொல்லும் மாணவருக்கு 2 ரூபாயும் அவர்களுடைய உண்டியலில் நான் செலுத்திவிடுவேன். உண்டியலில் காசு அதிகமாக வேண்டும் என்பதற்காக ஆர்வத்துடன் அனைவரும் திருக்குறளை படிக்க ஆரம்பித்தனர்.
 ஆடு மேய்க்கும் தொழிலாளி மகள் காவ்யா. இந்த கரோனா காலத்தில் தொடர்ந்து சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த எனது வீடு தேடி அப்பாவுடன் வந்தாள். "எனக்கும் திருக்குறள் சொல்லித் தர முடியுமா? டீச்சர்' என்று கேட்டாள். காரணம் கடந்த ஆண்டு மாணவி ஹரிணி பரிசு வாங்கியது தான். அவள் தோழி ஹரிணி 200 குறள்களை 5.30 நிமிடங்களில் சொல்லி 1 லட்சம் பரிசுத் தொகை வாங்கி உலக சாதனை படைத்திருந்தாள். தானும் பரிசு வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தனக்கு குறள் சொல்லி தரும்படி கேட்டாள்காவ்யா.
 குழந்தை என்பதால் குறள்கள் வார்த்தைகள் கடினமானதாக இருந்தது. ஆனால் ஆர்வம் மட்டும் அவளுள் நெருப்பாய் இருந்ததை உணர்ந்தேன்.என்ன செய்யலாம் என்று யோசித்து கற்பித்தல் முறையை மாற்றினேன்.சைகைகள் மூலமாக புரிய வைத்தேன். அடுத்து அந்த வார்த்தைகள் மீண்டும் வரும் போது சைகை காட்டும் போதே புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். குறள்களை பேச்சுமொழியில் எளிமையாக்கி, பொருளும் கற்றுத்தரஆரம்பித்தேன்.
 ஒவ்வொரு நிலையிலும் குட்டி, குட்டி பரிசுகள் தந்து ஊக்கப்படுத்த ஆரம்பித்தேன்.காலையில் ஆடு மேய்க்கச் செல்லும் வரும் அப்பா திரும்ப வந்து அழைக்கும் போது இரவு 8 மணி ஆகிவிடும். 3 மாதங்கள் போனது. மெல்ல இப்போது குறள்கள் வசமானது. வரிசையாக படிக்க ஆரம்பித்தாள்.தொடர்ந்து முயற்சி எடுத்தாள். எந்த நிலையிலும் கற்றல் வற்புறுத்தப்படவில்லை. ஆனாலும் அவளோடு இணைந்து இருந்தாலே பண்ண முடியும் என்பது புரிந்தது.
 கரம் பற்றிக் கொண்டே குறள் சொல்வாள். குரல் ஒத்துழைக்க மறுத்தது. அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். மருத்துவரிடம் கேட்ட போது "சரியாகும்' என்றார். நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்தோம். வாய்ப்பிற்கான மேடையை சிவகாசி தொழில் நகர அரிமா சங்கம் வழங்கியது. நல்ல உடைகள் வேணுமே என்று அதையும் எடுத்துக்கொடுத்தோம். இறுதியாக அழைப்பிதழ் எடுத்துக் கொண்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவ்யாவை மடியில் கிடத்தியபடிகாரில்சென்றோம்.
 முதன்மை கல்வி அலுவலர் நம்பிக்கை அளித்தார். இதோ இன்று 500 குறள்களை 26 நிமிடங்களில் சொல்லி, அதன் பொருளையும் சொல்லி உலக சாதனை படைத்து 1லட்சம் பரிசுத் தொகை வாங்கியிருக்கிறாள் "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்' அன்னையாக மனம் நிறைந்த தருணம் அது. சாதிப்பதற்கு வயதோ, வறுமையோ தடையில்லை என்பதற்கு அரசுப் பள்ளி மாணவியான காவ்யா ஒரு உதாரணம்.
 காவ்யா பரிசு பெற்ற பின் ஜெயமேரியை "திருக்குறள் ஆசிரியை' என்று பொது மக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.
 -ப்ரியா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT