மகளிர்மணி

அலைகளுக்கு நடுவே...!

31st Mar 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT

 

மங்களூரைச் சேர்ந்த தன்வி ஜெகதீஷ் ஸ்டாண்ட் அப் பெடல் போர்டிங் (எஸ்.யூ,பி) எனப்படும் பெண்கள் சர்ஃபிங் (நீர்ச்சறுக்கு) விளையாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பொதுவாக சர்ஃபிங் விளையாட்டுப் பெண்களுக்கு ஏற்றதல்ல. ஆபத்தான விளையாட்டு மட்டுமல்ல, இதில் ஈடுபடுபவர்களுக்கு உப்பு நிரால் முடி உதிர்ந்து, சரும பாதிப்பால் உடல் அழகும் கெட்டுவிடும் என்று எச்சரிப்பதுண்டு. ஏனெனில் இந்த விளையாட்டு கடலில் உயரே எழும்பும் அலைகள் மீது ஸ்கேட்டிங் பலகையில் நின்றபடி சறுக்கி விளையாடுவதாகும்.

பன்னிரண்டு வயது முதலே நீச்சல் பழகி வந்த தன்வி ஜெகதீஷ் கூடவே சர்ஃபிங், ஸ்டாண்ட் அப் பெடல் போர்டிங் விளையாட்டிலும் பயிற்சி பெறத் தொடங்கினார்.

நான்காண்டுகள் கழித்து, அமெரிக்காவில் நடந்த உலகிலேயே அதிகமான பெடல் போர்டிங் போட்டியாளர்கள் பங்கேற்கும் "வெஸ்ட் மரீன் கரோலினா கப்' பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதோடு, முதல் இடத்தை பிடித்த மூன்று பெண்களில் ஒருவராக தன்வி ஜெகதீஷ் இடம் பெற்றார். இளம் வயதிலேயே ஆபத்தான நீர்ச் சறுக்கு விளையாட்டை தன்வி ஜெகதீஷ் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ADVERTISEMENT

""என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் பலவித சவால்களை நான் சந்திக்க வேண்டியிருந்தது. கடல் மீது எனக்குள்ள மகிழ்ச்சி, ஆர்வம் காரணமாகவே இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்தேன். ஆனால் என் பெற்றோர்களுக்கு இதில் விருப்பமில்லை. ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தினேன். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கடலுக்குச் சென்று பயிற்சி செய்வேன். இந்த நீர்ச்சறுக்கு விளையாட்டில் எனக்கு ஆர்வமேற்படுவதற்கு என்னுடைய சகோதரன் நிஹில்தான் காரணம். கூடவே நேரத்திற்கு சாப்பிடுவது, படிப்பது போன்றவைகளிலும் பொறுப்பாக இருந்தேன்.

என்னுடைய 16-ஆவது வயதில் "ஸ்டாண்ட் அப் பெடல் போர்டிங்கில்' தேசிய சாம்பியன் ஷிப் போட்டிகளில் ஆறுமுறை வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளில் பங்கேற்க என்னிடம் பணமில்லை. ஓராண்டு காத்திருந்து போட்டியில் கலந்து கொள்ளலாமே என்று சிலர் என்னிடம் அறிவுறுத்தினர். ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளை இழக்க நான் விரும்பவில்லை. நீர் ச்சறுக்கு விளையாட்டில் எனக்குள்ள திறமையை பொது மக்களிடம் வெளிப்படுத்தி பணம் திரட்ட தீர்மானித்தேன். எதிர்பார்த்த பணம் மக்களிடமிருந்தே நன்கொடையாக கிடைத்தது. அதன்மூலம் 2017-ஆம் ஆண்டு பிஜியில் நடந்த சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் முல்கி நகரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிதான் நீர்ச்சறுக்கு விளையாட்டுகளில் பயிற்சிப் பெற பிரபலமான கடற்கரையாகும். கடந்த ஆண்டு உடுப்பியில் என்னுடைய சிநேகிதி சுவர்ணாவுடன் சேர்ந்து சர்ஃபிங் மற்றும் யோகா பயிற்சியளிக்கும் கடல் சென்டர் என்ற பயிற்சி கூடத்தை நான் தொடங்கியபோது, நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஆண் பயிற்சியாளர்களிடம் பயிற்சிப் பெற தயங்கிய பல பெண்கள் எங்களிடம் பயிற்சிப் பெற ஆர்வத்துடன் முன்வந்தனர்.

ஏற்கெனவே எனக்கு அப்பகுதியில் சிறந்த முதல் பெண் பயிற்சியாளர் என்ற சான்றிதழ் வழங்கியிருந்தார்கள். மகளிர் தினத்தன்று சுமார் 40 பெண்கள் எங்கள் பயிற்சிக் கூடத்தில் வந்து சேர்ந்ததை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.
கடலில் எழும் ஒவ்வொரு அலையும் வித்தியாசமானது மட்டுமல்ல, சவாலானதும் கூட, எனக்கென்னவோ இந்த கடலுடன் எனக்கு ஆழ்ந்த தொடர்பு இருப்பது போல் தோன்றுவதால் இந்த விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறேன். இப்போது இந்தியாவிலும் நீர்ச்சறுக்கு விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இந்த விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது. எங்களைத் தொடர்ந்து மேலும் பல பெண் பயிற்சியாளர்கள் பயிற்சிக் கூடங்களைத் தொடங்கியுள்ளனர். இதனால் மேலும் பல நீர்ச்சறுக்கு வீராங்கனைகள் உருவாகி, சர்வதேச சர்ஃபிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகரித்துள்ளது'' என்கிறார் தன்வி ஜெகதீஷ்.

Tags : அலைகளுக்கு நடுவே...!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT