மகளிர்மணி

புத்திசாலித்தனம்!: சவால்களை வெற்றியாக்குவதே

31st Mar 2021 06:00 AM | - பொ. ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

 

பொதுவாக ஒரு ஊரில் இருந்து, வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ மணம் முடித்து செல்லும் பெண்களில் பலர் அங்குள்ள மொழி, கலாசாரம், பழக்க வழக்கம் போன்றவற்றை புரிந்து கொள்ள பல மாதங்கள், பல ஆண்டுகள் கூட கடக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் ஏராளம். அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்லும் பெண்கள் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து உளவியல் ரீதியான சிக்கல்களை தீர்த்து வைக்கிறார் வெளிநாடுவாழ் தமிழரான மதிவதனி. எழுத்தாளர், உளவியல் ஆலோசகர், சமூக சிந்தனையாளர் என பன்முக திறமைக் கொண்ட இவர், தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்கிறார்:

""என்னுடைய வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்க்கும் போது நான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்து சுமார் 20 வருடங்கள் ஓடி விட்டன. மிகவும் கரடு, முரடான பாதைகளை கடந்து வந்திருக்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

கிராமத்தில் பிறந்து, கிராமத்தில் வாழ்ந்து பட்டப்படிப்பை முடித்து, வெளிநாடு என்ற வார்த்தையை கூட விரும்பாமல், என் நாடு, என் மக்கள் என மகிழ்ச்சியில் வாழ்ந்துக் கொண்டிருந்த என்னை வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்தனர் என்னுடைய பெற்றோர்.

ADVERTISEMENT

அந்தப் பாதை எப்படி இருக்கிறது என்று இப்போது திரும்பிப் பார்த்தால், அழகாகவே தெரிகிறது. ஏனென்றால் இந்தப் பாதையை கடக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியவள் என்னுடைய மகள் தான்.

குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலி, ரோமானீஸ் உள்பட நான்கு மொழிகள் உள்ளன. சற்று கலங்கிப் போய்விட்டேன். இந்த மொழிகளில் எனக்கு எதுவுமே தெரியாது. நான் இந்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த கல்லூரி படிப்போ, பட்டயப் படிப்போ எதுவுமே இந்நாட்டில் உதவுவதற்கு வழிசெய்யவில்லை.

அப்போது நான் யார்? எனது அடையாளம் என்ன? என எனக்குள் ஒரு நெருடல் ஓடிக்கொண்டே இருந்தது.

"இது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழர்களுக்கும் சாபக்கேடு' என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.

ஆனால் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் இருந்து வந்ததால் எனக்குள் ஒரு கனவு இருந்தது. அதனால் இந்த ஆலோசனைகளுக்குள் எல்லாம் நான் அகப்படவில்லை. இருந்தாலும் திரும்ப, திரும்ப சிலர் சொல்வதைக் கேட்டு ஒன்று, இரண்டு அல்ல, கிட்டத்தட்ட 14ஆண்டுகள் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தேன்.

எனது வாழ்வில் இது மூன்றில் ஒரு பகுதி என்றே கூறலாம். ஆனால் என்னுடைய மகள் பிறந்து வளர்ந்து கேள்வி கேட்க தொடங்கிய போதுதான் எனக்குள் பல வினாக்களை அவள் எழுப்பினாள். அதாவது, "நீ யாரம்மா? உனது படிப்பின் அடையாளம் என்ன? இப்படியே உன்னுடைய வாழ்க்கையை கடக்கப் போகிறாயா?' என்று பல வினாக்களை என் மனதில் உண்டாக்கினாள்.

அதன்பிறகு, விடாமுயற்சியாக அந்த 4 மொழிகளையும் சரியாக பேச, எழுத கற்றுக் கொண்டேன். அதன்மூலம், பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் என்னிடம் கைக்கோர்த்துக் கொண்டனர். இப்போது இந்த நாட்டிற்கு வரும் அனைத்துப் பெண்களுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், உளவியல் சார்ந்த கருத்துகளை அவர்களிடம் கொண்டுப் போய் சேர்க்கும் பணியைச் செய்கிறேன். இழந்த காலங்களை எண்ணி கவலைப்படுவதை விட இருக்கும் காலங்களை வெற்றிகரமாகக் கடந்து செல்வதே புத்திசாலித்தனம் என்பதை புரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன்'' என்கிறார் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மதிவதனி.

( மகளிர் கருத்தரங்கில் பேசியதிலிருந்து)

Tags : புத்திசாலித்தனம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT