மகளிர்மணி

நாள்களில் புத்தகங்கள்! - 14

31st Mar 2021 06:00 AM | -வ.மு.முரளி

ADVERTISEMENT


சென்னையில் இயங்கும் "காம்கேர்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்,  தொழில்நுட்ப வல்லுநர், படைப்பூக்கம் மிக்க இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் காம்கேர் கே.புவனேஸ்வரி. 

இவர், அண்மையில் நிறைவடைந்த சென்னை புத்தகக் கண்காட்சியின்போது, தினசரி தான் எழுதிய ஒரு நூலை மின்னூல் (இ-புத்தகம்) வடிவில் இணையத்திலேயே (வெர்ச்சுவல்) வெளியிட்டு, எதிர்கால நூல் வெளியீட்டுத் துறைக்கு வழிகாட்டி இருக்கிறார். அதுகுறித்து அவருடன் உரையாடியதிலிருந்து...

மேடை நிகழ்ச்சிக்கும் வெர்ச்சுவல் நிகழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம்? 

பொதுவாக நிகழ்ச்சி என்றால் மேடை இருக்கும்; பேச்சாளர்கள் இருப்பார்கள்; பார்வையாளர்கள் இருப்பார்கள்; நிகழ்ச்சி நடைபெறும் நாளில், அந்தக் குறிப்பிட்ட  நேரத்தில் எத்தனை பார்வையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியைப் பார்வையிட முடியும். அதன் டிஜிட்டல் வெர்ஷனை யூ-டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

ADVERTISEMENT

நேரடியாகக் கலந்துகொள்வது, அனைவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நான் அறிமுகப்படுத்திய "தினம் ஒரு புத்தக வெளியீடு!' என்ற வெர்ச்சுல் நிகழ்ச்சியில், காம்கேர் டி.வி.யும், சமூக வலைதளங்களுமே நிகழ்ச்சியின் மேடை. ஆன்லைனில் தொடர்பிலுள்ள அனைவருமே பார்வையாளர்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்து களைப் பதிவு செய்யலாம்.  

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?  

இந்த வருடம் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு, தினம் ஒரு புத்தக வெளியீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.  இதன் நோக்கம் 2021 புத்தகக் காட்சி நடைபெற்ற 14 நாட்களும் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவது என்பதுதான்.  

நான் எழுதி, எங்கள் காம்கேர் நிறுவனம் வெளியிட்ட 14 நூல்கள் இந்த 14 நாள்களில் தொடர்ச்சியாக மின்னூலாக வெளியிடப்பட்டன. 14 நாள்களில் 14 நூல்கள் வெளியீடு என்பதே எங்கள் நோக்கம். 

இதுவரை 139 நூல்களை எழுதி, வெளியிட்டிருக்கிறேன்.

"வாழ்க்கையின் அப்பிடைசர்,  வாழ்க்கையின் ஓடிபி,  வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்,  குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட், எந்தப் பாதையில் உங்கள் பயணம், பெண், மாறிவரும் மனோபாவமும் மாற்றத்துக்கான பாஸ்வேர்டும், பாரதப் பெருமிதங்கள், பிக் டேட்டா -தகவல் சூழ் உலகில் பிக் பிரதர், கனவு மெய்ப்பட, இலக்கில் கரையுங்கள், மனிதனாய் வாழ்வதற்கான ஃபார்முலா, கொரோனா லாக்டவுனில் முதல் மூன்று மாதங்கள், வல்லமை தாராயோ?' ஆகிய 14 நூல்களும், இ-புத்தகங்கள்.  

உங்களால் எவ்வாறு தினமும் ஒரு புத்தகம் வெளியிட முடிந்தது?

எனது பத்து வயதில் "கோகுலம்' குழந்தைகள் மாத இதழில் எனது முதல் கதை வெளியானது. அப்போதே, "இதுதான் உன் திறமை' என்று எனக்கு திசை காட்டப்பட்டது. அதை உறுதியாகப் பற்றிக் கொண்டேன். அதனால்தான், சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக, நாள் தவறாமல் ஏதேனும் எழுதி வருகிறேன்.  

அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் எழுதுவது எனது பழக்கம். தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்நாளில், தினசரி எனது முகநூல், இணையதளம், வலைப்பூ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தோறும் எனது படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி குறைந்த விலையில் மின்னூலாக எனது புத்தகங்களை வெளியிட முடிகிறது.

இந்த மின்னூல்களை எங்கு வாங்குவது? எப்படி வாசிப்பது, எப்படி சேகரிப்பது? 

நாங்கள் வெளியிடும் மின்னூல்கள் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும். ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மொபைல் போனில் கிண்டில் ஆப் என்ற செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு மின்னூல்களை வாசிக்கலாம். 

உங்கள் மொபைல் போன், ஐபேட், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்  என எதில் வேண்டுமானாலும் மின்னூல்களைப் படிக்க முடியும். கிண்டில் ஆப் செயலி மட்டுமே தேவை. மேலும் கிண்டில் சாதனத்திலும் இதனைப் படிக்க முடியும் என்கிறார் புவனேஸ்வரி.

Tags : நாள்களில் புத்தகங்கள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT