மகளிர்மணி

கதை சொல்லும் குறள்: பிறர் பொருள் நலம் தராது!  - 18

கணேஷ் சுந்தரமூர்த்தி



""சியாமளா, குடிக்க சூடா ஒரு கப் டீ கிடைக்குமா?'' என்றான் சபாபதி.

""உக்கும், டீ குடிக்க ஆசைப்பட்டால் போதுமா, அதற்கான பொருள்கள் வீட்டில் இருக்க வேண்டாமா? பால்காரன், மளிகைக்கடைக்காரன், வீட்டு வாடகை என்று எல்லாத்துக்குமே சாக்கு போக்குச் சொல்லி எனக்கு அலுத்துப் போச்சு. உங்களைக் கட்டிக்கிட்டு வருஷம் பத்து ஓடிடுச்சு. அப்பவே எங்க அப்பா, அம்மா சொன்னாங்க, எழுத்தாளனைக் கட்டிக்கிட்டா, ஏழ்மைப்பட்ட வாழ்க்கைதான்னு, நான் எங்க கேட்டேன் காதல் பெரிசுன்னு, ஒத்தக் கால்லே நின்னு உங்களைக் கட்டிக்கிட்டேன்.''

""சியாமளா, எனக்கும் ஒரு நல்ல காலம் வரும்.''

""நல்லா வந்துருச்சி நல்ல காலம், இரண்டு புள்ளைங்க, அதுலேயும் இரண்டும் பொண்ணுங்க, எப்படிக் கரைசேர்க்கப் போறோமோ?''

""பத்திரிகை ஆபீஸ்களுக்கு நடையா நடந்து, நீங்க கொண்டாற ஆயிரத்துக்கும், இரண்டாயிரத்துக்கும் குடும்பம் ஓடுமா? ஏதோ, தையல் வேலை தெரிஞ்சதாலே அக்கம்பக்கத்துப் பொண்ணுங்களுக்கு, தைத்துக் கொடுத்துக் கிடைக்கிற  பணத்துலே அரைவயிறு கஞ்சியாவுது கிடைக்குது.''

சபாபதிக்கு ஏண்டா  டீ கேட்டோம் என்று ஆகிப்போனது. ""சியாமளா, சினிமாவுக்காகக் கதை எழுதிப் பார்ப்போம்னு எழுதினேன், ரொம்ப நல்லா வந்திருக்கு. போன ரெண்டு வாரமா, இயக்குநர் கே.ஜி. மணி அலுவலகத்துக்கு நடையா நடந்தேன். ஒருவழியா என் கதையை நாளைக்குக்  கேக்கிறேன்னு நேரத்தை ஒதுக்கித் தந்திருக்கிறார்.''

""என்னது கே.ஜி. மணியா! உண்மையாகவா சொல்லறீங்க.  அவரு எவ்வளவு புகழ்வாய்ந்த இயக்குநர், அவர் உங்க கதையைக் கேட்கிறேன் என்றாரா?''

""ஆமாம். சியாமளா.''

""ரெண்டு மாசமா, உட்கார்ந்து இரவு பகல் பார்க்காமல், காகிதம் காகிதமா எழுதிக் குவிச்சீங்களே, அதுவா சினிமாவுக்கான கதை!''

""உண்மையான சில சரித்திர நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு அதோடு என் கற்பனையையும் சேர்த்துப் புனையப்பட்ட சரித்திர நாவல், இதை மட்டும் சரியான முறையில படமாக்கினா, வெற்றி நிச்சயம்.''

""எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல. ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் மேலே நீங்க ஒரு கதைக்காக சம்பாதிச்சது இல்லை. இப்ப இந்த சரித்திர நாவலாலே, அதிர்ஷ்டம் கூரையைப் பிச்சிக்கிட்டுக் கொட்டுமாக்கும்.''

சபாபதியின் மனதைச் சோர்வு அப்பிக் கொண்டது. காதலித்துக் கட்டிக்கொண்டவளே ஏளனம் செய்யும் அளவிற்குத் தான் தாழ்ந்துபோனது மனதைச் சுட்டது. சியாமளாவைச் சொல்லியும் குற்றம் இல்லை. இவளைக் கட்டிக் கொள்ளும்பொழுது, அவள் மனதில் காதல் மட்டுமே இருந்தது, இப்ப குடும்பம் நடத்தக் காசு தேவைப்படுகிறது.

வெறும் ரசம், சுட்ட அப்பளத்தோடு அன்றைய பகல் உணவு முடிந்தது.

""சியாமளா, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன். திரும்பி வர இரவு ஒன்பது மணி ஆகிடும்.''

""ஏன் அவ்வளவு நேரம்?''

""என் பால்ய நண்பன் திருச்சியிலே பெரிய வக்கீலா இருக்கிறான். அவன் பல்லாவரத்திலே இருக்கிற அவன் பெற்றோரைப் பார்க்க வந்திருக்கிறான். அங்கே என்னை வரச் சொல்லியிருக்கிறான். இரவு அவனோடு சாப்பிட வேண்டுமாம். எவ்வளவோ சொல்லியும் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்கிறான்.''

""சரி, போயிட்டு ஒன்பது மணிக்குள் வந்துடுங்க. என்னைக் கவலைப்பட வெச்சுடாதீங்க.''

சபாபதி மனதுக்குள் குயில்கள் இன்னிசை இசைத்தன. தன் காதல் மனைவி தன்மேல் வைத்திருக்கும் அன்பு அவனுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. நாளைய பொழுது தனக்கு நன்றாக அமையும் என்ற நம்பிக்கை வித்து அவனுள் விழுந்தது.

சபாபதி என்ன கதை எழுதி இருக்கிறார்? அது இயக்குநருக்குப் பிடிக்க வேண்டுமே. கடவுளே, எங்களுக்கு நல்ல வழி காட்டு. சபாபதியின் குலதெய்வமான முண்டக்கண்ணி அம்மனை சியாமளா மனம் உருகி வேண்டிக் கொண்டாள்.  மேஜையின் மீது மூன்று கட்டுகளாக கட்டி வைக்கப்பட்டிருந்த "புவனசுந்தரன்' என்ற தலைப்பைச் சுமந்திருந்த அந்த நாவலை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தாள். மகிழ்ச்சியின் எல்லைகளைக் கடந்தாள். என் கணவன் இத்தகைய அரிய படைப்பாளியா! விக்கித்துப் போனாள்.

விடியற்காலை நான்கு மணி இருக்கும், குளித்துவிட்டு சமையலை வேகமாக முடித்தாள். கடிகாரம் காலை மணி ஆறு என்று காட்டியது. தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பினாள்.

""சியாமளா, எங்கே இவ்வளவு காலையிலே கிளம்பிட்ட?''

""நமக்கு நல்ல காலம் பொறக்கப் போகுதுங்க. என்ன அருமையான கதையை எழுதியிருக்கீங்க.'' கணவனைக் கட்டிக் கொண்டாள். 

""கே.ஜி. மணி சாருக்கு இந்தக் கதை நிச்சயம் பிடிக்கும்.''

குறிப்பிட்ட நேரத்தில் சபாபதி, கே.ஜி. மணியை சந்தித்தான். பலமுறை அவர் வரச்சொன்ன நேரத்திற்கு எல்லாம் சென்று கதையை விவரித்தான். கதையின் நகலையும் எடுத்துக் கொடுத்தான். ஒரு மாத அலைச்சலுக்குப் பின் கே.ஜி. மணி சொன்னார்:

""உன் கதை நன்றாகத்தான் இருக்கு. ஆனால் இது சரித்திரக் கதை, இதைப் படமாக எடுக்க அதிகப் பணம் தேவைப்படும். இதற்கு எனக்கு சரியான ஃபைனான்சியர் தேவைப்படும். அப்படிப்பட்டவர் கிடைக்கும்பொழுது உனக்குச் சொல்லி அனுப்புகிறேன் '' என்றார். 

கே.ஜி. மணி அழைப்பார் என்ற நம்பிக்கையில் வருடங்கள் இரண்டு ஓடி மறைந்தும், காத்திருந்தான் சபாபதி. ஆனால், ஒரு ஏழை எழுத்தாளனுக்குச் சில லட்சங்களைக் கொடுக்க வேண்டுமே என்பதற்காக, அவன் வயிற்றில் அடித்து, புவனசுந்தரன் கதையில் சில மாற்றங்களைச் செய்து, படமாக எடுத்துக் கொண்டிருந்தான் அந்த கேடுகெட்ட கே.ஜி. மணி. 

""ஏங்க, போய்த் திரும்பவும் ஒரு முறை கே.ஜி. மணி சாரைப் பார்த்துட்டு வாங்களேன்'' என்று ஒருவார காலமாகவே சியாமளா, சபாபதியை நச்சரித்துக் கொண்டு இருந்தாள்.

சபாபதி, கே.ஜி. மணியின் அலுவலகத்தில் கால்கடுக்க நின்று கொண்டிருந்தான். அவனை ஏனென்று கேட்க யாரும் இல்லை. வரவேற்பு அறையிலிருந்த சோபாக்களில் எல்லாம் விநியோகஸ்தர்கள், பைகளில் கொண்டு வந்திருந்த பெரும் தொகைகளோடு காத்திருந்தனர்.

இந்த சரித்திரப் படம் அருமையாக வந்திருக்கிறதாம், கே.ஜி மணி சாரின் சொந்தத் தயாரிப்பு, எப்படியாவது ஒரு ஏரியாவில் விநியோகத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

எதேச்சையாக, அந்தப் பக்கம் வந்த கே.ஜி. மணியின் உதவியாளர் சபாபதியைப் பார்த்து விட்டான். அவன் மனதில் சிறு ஈரப்பசை  எப்பொழுதுமே உண்டு. இப்பொழுது எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கதை, சபாபதியின் கதை என்பது அவனுக்குத் தெரியும்.

இப்படி வாங்க என்று சபாபதியை அழைத்தான். ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, யாரும் பார்க்கவில்லையா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவனிடம், உண்மையைப் போட்டு உடைத்தான். 

கே.ஜி. மணியின் மீது கேஸ் போட்டு, சபாபதிக்குச் சேரவேண்டிய பணத்தை வசூலித்துக் கொள்ளும்படி கூறினான்.

இதை கேட்டதும் சியாமளா கொதித்துப் போனாள். ""என்ன ஒரு நம்பிக்கைத் துரோகம். இப்படியும் ஒரு பெரிய மனிதன் ஏமாற்றுவானா. அவன் நல்லா இருப்பானா, அவன் குடும்பம் விளங்குமா?'' என்று சபித்தாள்.

""சியாமளா, சபிக்காதே. நான் கே.ஜி. மணியின் மீது கேஸ் எதுவும் போட போவது இல்லை. பெரிய இயக்குநரான அவர் பெயரை நான் கெடுக்க விரும்பவில்லை. நான் ஒரு சிறிய எழுத்தாளன், என்னை யாருக்கும் தெரியாது. என் கடின உழைப்புக்கு இறைவன் என்றாவது ஒருநாள் உயர்வைத் தருவான்'' என்றான் சபாபதி.

உதவி இயக்குநர், ""சபாபதி வந்து போனான், யாரோ அவனிடம் நீங்க அவன் கதையைத் திருடி விட்டீங்கன்னு சொல்லிட்டாங்க சார்'' என்று கே.ஜி. மணியிடம் கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவன், அவர் மீது கேஸ் போடுவதாக சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறிவிட, அவசரம் அவசரமாக ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு சபாபதியின் வீடு  தேடி சென்றான். அப்போது சபாபதி தன்னுடைய மனைவியிடம் பேசிக்கொண்டிருந்ததை, மறைந்திருந்து கேட்டதும் அடுத்த நிமிடமே, கம்பி நீட்டிவிட்டான். ஐம்பதாயிரம் ரூபாய் மிச்சம் என்று அவன் மனது எக்காளமிட்டது.

பொழுது விடிந்தது. அன்று, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு விநியோகஸ்தர்கள் வருவதாக இருந்தது. கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதிலும் பரவிவந்து, பல ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட "கரோனா வைரஸ்', இந்தியாவின் பல மாகாணங்களில் பரவி வந்ததால், தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கையாக, மால்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், பொழுதுபோக்கு மையங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டன.

கே.ஜி. மணியின் புதிய படத்துக்கு, பெரும் பணத்தைக் கொடுத்து விநியோகத்தை வாங்க வர இருந்தவர்கள் ஓடி மறைந்தனர். பெரும் கடன் வாங்கிச் சொந்தப்படம் எடுத்த கே.ஜி. மணி பெரும் நஷ்டத்துக்கு உள்ளானார். வட்டி மளமளவென்று ஏறியது. இரண்டு மாதங்கள் கழித்து வெளியிட்ட படத்தைப் பார்க்கும் மனநிலையில் மக்கள் இல்லை. படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

ஆண்டுகள் மூன்று மின்னலென மறைந்தன. வேறு வழியில்லாமல் கே.ஜி. மணி சொந்த ஊரில்,  டீக்கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். கடனால் சொத்தும் போச்சு, கதையைத் திருடியது உலகம் அறிந்ததால் பெயரும் போச்சு.
சபாபதி எழுதிக் கொடுத்த பல திரைப்படக் கதைகள் வெற்றி பெற அவன் சொந்தக் காரில் பவனி வருகிறான்.

கதையைத் திருடிய கே.ஜி மணி செல்லாக் காசானான்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

(குறள் எண்: 177)

பொருள் :

பிறர் பொருளைக் கவர்ந்து, ஒருவன் வளம்பெற விரும்பினால், அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT