மகளிர்மணி

எண்ணெய் குளியல்

10th Mar 2021 06:00 AM

ADVERTISEMENT

 

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய எண்ணெய் குளியலை நாம் அடியோடு மறந்து விட்டோம்.

இந்த தலைமுறையினர் அப்படி என்றால் என்ன என்று கேட்கிறார்கள்.
சரி, எண்ணெய் குளியல் என்றால் என்ன?

நம் முன்னோர்கள் காலங்காலமாக தலைக்கும் உடலுக்கும் எண்ணெய் தேய்த்து வாரத்திற்கு இரு முறையோ அல்லது ஒரு முறையோ குளித்து வந்தார்கள், இதனால் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள். ஆனால் நம்மில் பலர் இந்த பழக்கத்தை பின்பற்றுவதில்லை.

ADVERTISEMENT

எண்ணெய் குளியல் என்றால் வருடத்திற்கு ஒரு முறை தீபாவளி அன்று உச்சந்தலையில் லேசாக எண்ணெய் வைத்து தேய்த்து குளிப்பது என்றாகிவிட்டது.

அது அப்படியல்ல, நல்லெண்ணெய்யை காய்ச்ச துவங்கி சிறிது சூடானவுடன், சிறிதளவு சின்னவெங்காயம், சீரகம் மற்றும் மிளகு இவைகளை இடித்து எண்ணெய்யில் சேர்த்து வெங்காயம் நன்றாக முறுவலான நிலைக்கு வரும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின்பு ஒரு அரைகையளவு எண்ணெய்யை எடுத்து உச்சந்தலையில் வைத்து சூடு பறக்க தேய்த்தும் உடல்முழுவதும் இந்த எண்ணெய்யை மசாஜ் செய்தும் வாரம் ஒருமுறை மற்றும் வெயில் காலங்களில் வாரம் இருமுறை குளிக்க வேண்டும்.

எண்ணெய் குளியளினால் என்ன பலன்?

1. உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
2. சருமம் வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும்.
3. தொடர்ந்து குளித்து வரும் போது உடல் சோர்வு நீங்கும்.
4. நல்ல உறக்கத்தை தூண்டும்.
5. கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுவதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
6. உடல் வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை தடுக்கும்.
7. உடல் வலி நீங்கும்.

பின்பற்றும் முறை:

1. எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் குளித்து விட வேண்டும்.
2. மிதமான வெந்நீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
3. ஷாம்பு தவிர்த்து சீயக்காயை பயன்படுத்தலாம்.
4. குளித்த பின் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

எண்ணெய் குளியல் என்றாலே நல்லெண்ணெய் தான்... அதிலும் சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது.

இவ்வளவு நன்மைகளை தரும் எண்ணெய் குளியலை மறக்காதீர்கள். இதோ கோடைகாலம் வந்துவிட்டது. எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணித்து, ஆரோக்கியமாக வாழ்வோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT