மகளிர்மணி

அசர வைத்த அரசு ஆசிரியை

இரா. சுந்தரபாண்டியன்

நெருக்கடியான தருணங்களில் சிறப்பாகச் செயல்படுவர்களையும், தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றுபவர்களையும் மாமனிதர்கள் என உலகம் போற்றும். அவ்வாறானவர்களில் ஒருவர்தான் மாவட்ட மன நல ஆலோசகரும், விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிபவருமான ஹேமலதா. இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, கல்வியில் புதுமை ஆசிரியருக்கான விருதும் பெற்றுள்ளார். ஓவியர், நாணயம், ரூபாய் நோட்டு சேகரிப்பாளர், சூழலியல் ஆர்வலர், விளையாட்டு வீராங்கனை என் பன்முகத் திறமை கொண்டவர். வீடுகளுக்குள் முடங்கியிருந்த மாணவர்கள் கல்விச் சூழலை விட்டு வெளியேறிவிடாதபடிக்கு தொழில்நுட்ப வளர்ச்சியை ஆசிரியர் ஹேமலதா பயன்படுத்தினார்.

பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த 53 பாடங்களை அனிமேஷனாக (இயங்கு காட்சிகளாக) உருவாக்கினார். அவைகளை பென் டிரைவ்வில் காப்பி செய்து தனது பள்ளியின் பத்தாம் வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும் அளித்தார். மாணவர்களிடம் இருந்த தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மூலம், அனிமேஷன் காட்சியின் வழியே பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள இது வழிவகுத்தது. 

இந்தத் திட்டம் மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுல்லாது சக ஆசிரியர்கள், மாவட்டக் கல்வித் துறைக்கு மாபெரும் பெருமையைத் தேடித் தந்தது. அனிமேஷன் வடிவமைப்பு, பென் டிரைவ்களுக்கான மொத்த செலவுகளையும் தனது சொந்தப் பொறுப்பில் ஆசிரியை ஹேமலதா ஏற்றுக்கொண்டார்.

ஆசிரியை ஹேமலதாவின் தன்னலமற்ற சேவையைப் பிரதமர் நரேந்திரமோடி கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி நிகழ்த்திய தனது "மனதின் குரல்'  நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டினார். ஆசிரியை ஹேமலதாவிடம் பேசினோம்:

""பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சூழலைவிட்டு வெளியேறிவிடாமல் இருக்க என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே யோசித்துக் கொண்டிருந்தேன். தொழில்நுட்பம் பயின்ற எனது முன்னாள் மாணவர்களிடம் கலந்தாலோசித்து இதனைச் செயல்படுத்தினேன்.

ரூபாய் 70 ஆயிரம் வரை இதற்கு செலவளித்தேன். பொதுமுடக்கத்தால் நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் அரசாங்கம் எனக்கு ஊதியம் வழங்கத்தான் செய்தது. வாங்கும் சம்பளத்தின் ஒரு சிறு பகுதியையாவது மாணவர்களுக்காக செலவிட நினைத்தேன். அதனால் இதை முன்னெடுத்தேன்.

கல்வி என்பது வேறு. வாழ்க்கை அனுபவம் என்பது வேறு. எந்தவொரு நெருக்கடியான சூழலையும் கல்வி, தொழில்நுட்பங்கள் உதவியுடன் நம்மால் எதிர்கொள்ள முடியும், உலகமே முடங்கிக் கிடந்தாலும் நீங்கள் முடங்கியிருக்கலாகாது என எனது மாணவர்களுக்கு உணர்த்த நினைத்தேன். இதன் மூலம் எனது மாணவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளேன். இந்த முயற்சியை எனது மாணவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓர் சிறந்த உதாரணமாக பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்.

சக ஆசிரியர்கள் எனது எல்லா முயற்சிகளையும் எப்போதும் பாராட்டுவார்கள். விழுப்புரம் மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வித் துறை அதிகாரியும், தற்போது பள்ளி கல்வித் துறை இயக்குநராக இருக்கும் கண்ணப்பன், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாறுதலில் சென்றிருக்கும் முதன்மைக் கல்வி அதிகாரியுமான முனுசாமி ஆகியோர் தந்த ஊக்கத்தினால்தான்  திறம்படச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

பள்ளி திறந்த பிறகு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தின் திருப்புதல் தேர்வினை மாணவர்கள் சிறப்புடன் எதிர்கொண்டனர். அவர்களுடைய விடைத்தாளைத் திருத்தும்போது இதை நான் உணர்ந்தேன். "மனதின் குரல்' உரையில் பிரதமர் நரேந்திர மோடி  பாராட்டியபோது என் வாழ்க்கையின் பிரதிப்பலனை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்.  எனது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் என்னை நாள் முழுவதும் பாராட்டியது எனக்கு புத்துணர்ச்சியைத் தந்தது'' என்கிறார் ஹேமலதா.

படம்: என்.ராமமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT