மகளிர்மணி

எப்போதுமே புதுமுகம்! - ராஷ்மிகா

பூா்ணிமா

"சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நான் எந்தவிதமான நடிப்புப் பயிற்சியும் பெற்றதில்லை. ஏதோ ஒரு விருப்பத்தின் பேரில் நடிக்க வந்தேனே தவிர, மற்றபடி சொல்லிக் கொடுப்பது போன்று நடித்து வரும் நடிகைதான் நான்' என்று கூறும் ராஷ்மிகா மந்தனா, கடந்த ஆண்டுகளில் நடித்து முடித்த தன்னுடைய படங்கள், இந்த ஆண்டு தொடர்ந்தாற்போல் வெளிவருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு என மும்மொழி படமான "போகரு', தமிழில் கார்த்தியுடன் நடித்துள்ள "சுல்தான்', தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்துள்ள "புஷ்பா' என இவரது படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது தவிர, "ஆடல்லு மீக்கு ஜோஹர்லு' ( தெலுங்கு) மற்றும் "மிஷன் மஞ்சு' ( இந்தி) என இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து தன் எண்ணங்களை ராஷ்மிகா மந்தனா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

""2014-ஆம் ஆண்டு நான் புதுமுகமாக அறிமுகமானேன். ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது என்னை ஒரு புதுமுகமாகவே நினைத்துக் கொள்கிறேன். இது எனக்குள் ஒரு நம்பிக்கையையும், சுயமரியாதையையும் பெற்று தருகிறது.

நடிப்பைப் பொருத்தவரை எனக்கு மொழி ஒரு பிரச்னையாகவோ, தடையாகவே இருப்பதாக நினைத்ததில்லை. பல மொழிகளில் நடிப்பதால் இந்தத் துறையில் என்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியுமென்று கருதுகிறேன்.

அதுமட்டுமின்றி வெவ்வேறு மொழி கலைஞர்களுடன் பணிபுரிவதால் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நான் இது வரை நடித்த முதல் மூன்று படங்களிலும் கதாநாயகியின் பெயர் கீதா என்ற பெயரே அமைந்து விட்டாலும், ஒவ்வொன்றும் வித்தியாசமான பாத்திரங்களாகும். நல்ல இளமையான கதாபாத்திரங்கள் உள்ள கதைகள் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பல திறமைசாலியான கதாசிரியர்கள் நல்ல கதைகளை உருவாக்குகின்றனர்.

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே பாணியை பின்பற்றாமல் வித்தியாசமான கதைகளை உருவாக்குவதால், நானும் ஒரே மாதிரி கதைகளில் நடிக்காமல் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது. நான் அதிகமாக படிப்பதில்லை. ஆனால் மனிதர்களை நேசிக்கிறேன். வாழ்க்கையில் என் அம்மாவும், என் மீது அக்கறை கொண்டவர்களும் எனக்கு பாதுகாப்பாக உள்ளனர். இதனால் எந்த பிரச்னையானாலும் அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறேன்.

என் மனதில் பட்ட ஒரு கருத்தை இங்கு கூற விரும்புகிறேன். ஒரு நடிகருக்கும் ஒரு நடிகைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஒரு நடிகர் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தால் மட்டுமே போதும். பேரும் புகழும் கிடைத்துவிடும். நடிகை களுக்கு அப்படி அல்ல. ஆண்டுக்கு நான்கு படங்களில் நடித்தால் மட்டுமே புகழ் பெற முடியும். அதனால்தான் நான் வேற்று மொழி படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ரசிகர்களும் இப்போது மொழியை பார்ப்பதில்லை. நல்ல கதைகளாக இருந்தால் எந்தமொழியானாலும் நான் நடிக்க தயார். என்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதை தகர்த்து முன்னேறவும் நான் தயங்கமாட்டேன்.

ஏற்கெனவே நான் நடித்து வெளியான "கிர்க்பார்ட்டி', "டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றிப் பெற்றிருந்தாலும் தொடர்ந்து அது போன்ற கதைகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். என்னிடம் கதையை சொல்லும்போதே அந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமானவளாக தோன்றினால் மட்டுமே நடிக்க சம்மதிப்பேன். சௌந்தர்யா, ஸ்ரீதேவி போன்றவர்களின் வரலாற்று படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. இது தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. வரலாறு படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. என்னைப் பொருத்தவரை கன்னட சினிமா என் தாய்வீடு. தெலுங்கு சினிமா என்னுடைய பள்ளிக் கூடம். அங்கு நிறையவே பாடங்கள் கற்றுக் கொண்டேன். தமிழ் சினிமா எனக்கொரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துள்ளது'' என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT