மகளிர்மணி

13 வயது சிறுமி அசத்தல்! ஆன்லைனில் ஆன்மிகக் கதைகள்

சி.வ.சு.ஜெக​ஜோதி​


கோயில் நகரம் என்ற பெருமைக்குரியது காஞ்சிபுரம். இங்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருக்கோயில்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலயங்களும் அதிகமாக உள்ளன. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-ஆவது கோயிலாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கப் பெருமாள் கோயில்.  இக்கோயிலில் பட்டாச்சாரியாக இருந்து வருகிறார்  ரெங்கராஜன்.

அவரது, 13 வயது மகள்  அனுக்கிரக ஸ்ரீ,  தான் வசித்து வரும் குடியிருப்பு பகுதிகளிலும், சுற்றுப்புறங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கும் ஆன்லைன் மூலமாக இலவசமாக ஆன்மிக வகுப்புகளை நடத்தி வருகிறார்.   மேலும், அழகிய சிங்கப் பெருமாள் கோயில்  அமைந்துள்ள சந்நிதி தெருவில் வசிக்கும் சிறுவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து திருப்பாவை பாடல்களை மடைதிறந்த வெள்ளம் போல பாடுவதற்கும் இச்சிறுமியே வழிகாட்டியாக இருந்து வருகிறார். அனுக்கிரக ஸ்ரீயை சந்தித்து பேசினோம்..

""பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் இந்நேரத்தில் விடுமுறையை வீண்ணடிக்காமல், பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள சிறுவர்கள் மனதில் ஆன்மிக கதைகளை சொல்லி நல்வழிப் படுத்தலாமே என்று எனது தந்தை சொன்னார். அவரது அறிவுரையின்படி ஆன்லைனில் தினசரி காலை, மாலை இரு வேளையும் ஒரு மணி நேரம் இலவசமாக ஆன்மிக வகுப்பு நடத்தி வருகிறேன். தற்போது  எனது ஆன்லைன் வகுப்பில் 63 பேர் படித்து வருகின்றனர்.

ஆழ்வார்களால் அருளப்பட்ட  நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள முக்கியமான குறிப்புகள், பெருமாளைப் பற்றி வேதாந்த தேசிகர் சொல்லி வைத்திருக்கும் ஸ்தோத்திரங்கள், பன்னிரு ஆழ்வார்களின் சுவைமிகுந்த கதைகள், ராமபிரானின் 16 வகையான நற்குணங்கள், அனுமனின் கதை என வைணவம் தொடர்பானவற்றை ஆன்லைன் மூலம் கற்றுத் தருகிறேன். இதற்கென கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. கதைகள் போல சொல்லுவதால் பலரும் ஆர்வமுடன் விரும்பிக் கற்றுக் கொள்கிறார்கள்.

எனது தந்தை ஏராளமான புராணக் கதைகளையும், தெய்வீக கதைகளையும் அவ்வப்போது சொல்லிக் கொடுத்தார். அது மட்டுமின்றி வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் அறக்கட்டளை மூலமாக ஆண்டு தோறும் 17 பக்கங்கள் உடைய ஆன்மிக நாள்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த நாள்காட்டியில் வைணவக்கதைகளை விரிவாக தெரிந்து கொள்ளும் வகையில் வைணவக்கதைகளும், கருத்துகளும் குவிந்து கிடக்கின்றன. இதைப்படித்து தெரிந்து கொண்டும் அதிலுள்ள கருத்துகளையும் ஆன்லைன் வகுப்பில் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

மார்கழி மாதமாக இருந்தால் மட்டும் கோயிலில் உள்ள ஆண்டாள் சந்நிதி மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும், சிறுமியர்களுக்கும் நேரடியாக ஆன்மிக வகுப்பு அதிகாலையில் நடத்துகிறேன். வரக்கூடிய சிறார்கள் அனைவருமே அதிகாலையில் குளித்து, சுவாமி தரிசனம் செய்து விட்டு எனது வகுப்புக்கு வந்து விடுவார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் வைணவம் தொடர்பான விநாடி வினாப் போட்டி, திருப்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் நடத்தப்படும். கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் யாரேனும் ஒருவரை ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் பரிசுகளை கொடுக்கச் சொல்லி சிறுவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.

ஒருமுறை ராமநாதபுரத்தை சேர்ந்த இதய நோய் மருத்துவர் பரணிக்குமார் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் பரிசு வழங்கி பாராட்டி பேசியது மறக்க முடியாத நிகழ்வு. தெரியாத பல விஷயங்களை பலரும் தெரிந்து கொண்டதாக சொல்லும் போது அதில் கிடைக்கிற ஆனந்தத்துக்கு அளவே இல்லை'' என்றார் அனுக்கிரகஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT