மகளிர்மணி

பெண் சிற்பக் கலைஞர்களின் முன்னோடி!

பூா்ணிமா

இந்தியாவில் உள்ள பெண் சிற்பக் கலைஞர்களுக்கு முன்னோடியோக விளங்கியவர் கர்நாடகாவைச் சேர்ந்த கனகா மூர்த்தி.

சிற்பக் கலைத் துறையில் ஆண்களே இடம் பெற்றிருந்த நிலையில் கனகா மூர்த்தி சிற்பங்களை வடிவமைக்க ஆர்வம் காட்டியது, ஆச்சரியம்தான். "கல்லு கனகா' என அழைக்கப்பட்ட இவர், மைசூர் மாவட்டம் டி. நரசிபுராவில் 1942- ஆம் ஆண்டு டிசம்பர் 2 -ஆம் தேதி பிறந்தார். மேற்படிப்புக்காக பெங்களூரு வந்த கனகா, பி.எஸ்ஸி படித்து முடித்தவுடன், பெங்களூரில் துவங்கப்பட்ட முதல் கலைக்கல்லூரியான கலாமந்திராவில் சேர்ந்து ஓவியம் கற்கத் தொடங்கினார். ஆனால் இவருக்கு சிற்பக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டபோது, இது பெண்களுக்கு ஏற்ற கலையல்ல என்று சிலர் அறிவுறுத்தினர். பிராமண குடும்பத்தில் பிறந்த கனகா மரபுகளை உடைத்து சிற்பி தேவலகுண்டாவாதிராஜ் என்பவரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார். அவரும் கனகாவுக்கு சிலை வடிவமைக்க பயிற்சி அளிக்க முன்வந்தார்.

கோயில்களில் பூஜைக்காக வைக்கப்படும் கடவுள் சிலைகள் ஆக மவிதிப்படி சிற்ப சாஸ்திரங்கள் அடிப்படையில் வடிவமைக்கப்படும். ஆனால் சிற்பி வாதிராஜ் மரபுகளை மீறாமல் தன் கற்பனையையும் சேர்த்து சிலை வடிப்பார். அதே பாணியை கனகாவும் கடைபிடித்தார். சாஸ்திரமுறைப்படி இல்லையென்றாலும் நவீன பாணிக்கும் மாறாமல், பண்டைய சாளுக்கியர், ஹொய்சலா மன்னர்கள் காலத்திய சிற்பக்கலை அடிப்படையில் சிலைகளை வடித்தார்.

சிற்பங்களை வடிவமைப்பதற்கு முன் பேப்பரில் ஸ்கெட்ச் செய்து கொள்வதுண்டு. தொடக்கத்தில் கடினமான கல்லில் சிலை வடிப்பது கடினமாக இருந்ததால், களிமண்ணில் வடிவமைப்பாராம். பின்னர் ரெட் சாண்ட் ஸ்டோன், ஒயிட் சாண்ட் ஸ்டோன். சோப் ஸ்டோன் போன்றவைகளில் சிலைகளை செதுக்கப் பழகிக் கொண்டார். இதற்காக இவர் வரைந்த மாதிரி ஓவியங்களை தொகுத்து "சில்ப ரேகா' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.


இவரது கைவண்ணத்தை விளக்கும் வகையில் உருவான 9 அடி உயரமுள்ள விநாயகர், 7 அடி உயரமுள்ள விஸ்வாமித்ரர் மற்றும் தபோவனத்தில் உள்ள சப்தரிஷிகள் போன்ற சிலைகள் பெங்களூர் புறநகர் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. லால்பாக் தோட்டத்தில் கன்னட இலக்கியவாதி குவெம்பூ சிலையும், விஸ்வேஸ்வரய்யா தொழில் அருங்காட்சியகத்தில் உள்ள ரைட் சகோதரர்கள் சிலையும், பிரபல இசைக் கலைஞர்கள் கங்குபாய் ஹங்கல், பண்டிட் மல்லிகார்ஜூன் மன்சூர், பண்டிட் பீம்சேன் ஜோஷி போன்றவர்களின் மார்பளவு சிலைகளும் இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக பொது இடங்களில் இடம் பெற்றுள்ளன.

இவரது சிற்பக்கலை ஆர்வத்துக்கு கணவர் நாராயணமூர்த்தி உறுதுணையாக இருந்தார். சிற்பக் கலைத் துறையில் பெண்களுக்கும் ஆர்வம் ஏற்பட கனகா மூர்த்தி முன்னோடியாக விளங்கினார்.

இசைத்துறையிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது குடும்பம் நல்ல வசதியானது என்பதோடு சங்கீதத்திலும் பயிற்சிப் பெற்றிருந்தனர். சங்கீதத்தில் பயிற்சிப் பெற்ற கனகாவும் சுயமாக சில கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவரது மகள் ரூமி ஹரிஷ் மற்றும் சுமதி ஆகிய இருவரும் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களாக விளங்குகிறார்கள். இதே போன்று கனகாவுக்கு கன்னட இலக்கியத்திலும் ஆர்வம் அதிகமிருந்தது. பல கன்னட இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர், தன் குரு வாதிராஜ் பற்றியும், தன்னுடைய சுயசரிதை உள்பட நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஒருமுறை சிலை வடிக்கும் போது எதிர்பாராதவிதமாக அந்தக் கல் இவர் மீது சாய்ந்துவிட்டது. காயமேற்படவில்லை என்றாலும் பொறுக்க முடியாத வலியால் துடித்தார். பூரணகுணமாக ஆறுமாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியபோது, வலியைப் பொறுத்துக் கொண்டு சிலை வடிக்கப் புறப்பட்டுவிட்டாராம். ஆறுமாதம் வேலையின்றி உட்கார்ந்துவிட்டால் இத்துடன் என்னுடைய சிற்பப்பணி முடிந்துவிட்ட உணர்வு தோன்றக் கூடும். கல்லை நேசிப்பதுதான் முக்கியம் என்று கூறி சிலை செதுக்க கிளம்பிவிட்டாராம். எந்த அளவுக்கு அவர் சிற்பக் கலையை நேசித்தார் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

பாரம்பரிய சிற்பியாக, நவீன சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கனகாமூர்த்திக்கு ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் இருந்தது. ஆனால் பூஜை, சம்பிரதாயங்களை அவர் விரும்பியதில்லை. கர்நாடகா "ஜக்கண்ணாச்சாரி விருது', "ஸ்வர்ண கர்நாடகா விருது' உள்பட பல விருதுகளைப் பெற்ற கனகாவுக்கு, இறந்த பின்னர் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஆனால் கரோனா பாதிப்பால் இறந்ததால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. அவரது இழப்பு சிற்பக் கலைத்துறைக்கு பேரிழப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT