மகளிர்மணி

'விடாமுயற்சி வெற்றி தரும்' - ஆடை வடிவமைப்பாளர் விமலாவதி

கோதை ஜோதிலட்சுமி


"பெண் மனித சமூகத்தின் சிறப்பான பாதி' என்று மஹாத்மா காந்தி கூறினார். என்றாலும் ஒவ்வொரு பெண்ணும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் வெற்றி கொள்ளவும் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. கோவையில் வறுமையான சூழலில் பிறந்து பெற்றோரை இழந்த நிலையில் சுய முயற்சியில் வளர்ந்து இன்றைக்குத் தன்னாலான உதவிகளை சமூகத்திற்குத் தன் பங்குக்குச் செய்து சக பெண்களும் முன்னேறுவதற்கு வழிகாட்டுகிறார் விமலாவதி. விடாமுயற்சி, புன்னகை மாறாத முகம், எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையான உள்ளம், உழைப்பதில் நாட்டம் இவை தான் விமலாவதியின் அடையாளங்கள். தான் கடந்து வந்த பாதையை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்:

""நடுத்தரக் குடும்பத்தில் மூன்று சகோதரிகளோடு பிறந்தேன். எட்டு வயதில் தாயை இழந்தேன். தகப்பனார் மறுமணம் செய்து கொண்டு போய்விட்டார். கல்லூரிக்குப் போக விருப்பம். ஆனால், படிக்க வைக்க யாருமில்லை. ஒரு கொரியர் நிறுவனத்தில் மாலை நேரத்தில் வேலை செய்து அந்தப் பணத்தில் கல்லூரியில் படித்தேன். என் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உழைத்தேன். படிப்பு முடித்து ஒரு நிறுவனத்தில் கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. அதிலே ஜீவனம் நடந்தது. என் சகோதரிகள் முயன்று  எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இன்றைக்கு இரண்டு குழந்தைகள் கணவர், மாமனார் மாமியாருடன் நிறைவாக இருக்கிறேன்.

சிறு வயதிலிருந்து கடந்து வந்த வறுமை எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை மனதில் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.  அந்த சமயத்தில்தான், தையல் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அது எனக்கான கலை என்ற பிடிப்பு ஏற்பட, குடும்பப் பொறுப்புகள் தாண்டி முயன்று கற்றுக் கொண்டேன். பின் தையல் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நல்ல அனுபவம் கிடைத்தது. நாமே சுயமாக செய்தால் என்ன என்று என் மகள் பிருந்தா பெயரில் தையலகம் தொடங்கினேன்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உடைகளை பிரத்யேகமாக வடிவமைக்கிறேன். சீருடைகள் தைப்பதில் கவனம் செலுத்துகிறேன். பெரும் வரவேற்பைப் பெற்றவை மணப்பெண்ணுக்கான ஆடை வடிவமைப்பு தான். ஆரி வேலைப் பாடுகள், நூல் வேலைப்பாடுகள், எம்பிராய்டரி வேலைகள், முகூர்த்தப்பட்டுப் புடவைக்குப் பொருத்தமான வேலைப்பாடுகளை பல விதங்களில் செய்து கொடுக்கிறேன். 

இந்நிலையில், ஒரு தொண்டு நிறுவனம் பெண்களுக்கென ஏற்பாடு செய்திருந்த கைத்தொழில்  பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும்  வாய்ப்பு கிடைத்தது.  அங்கு, குளியல் சோப்பு தயாரிக்க கற்றுக் கொண்டேன். பலவித மூலிகைகளைக் கொண்டு குளியல் சோப்பு செய்வதால்  அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மேலும், நான் கல்லூரியில் படிக்கும்போது   என் சிரமங்களைப் பார்த்து என்னுடைய பேராசிரியர் மைதிலி, தெரிந்தவர்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து தரை துடைக்கும் திரவம், பாத்திரம் கழுவுவதற்கான சோப்பு செய்வதற்கு பயிற்சி அளித்தார்கள். அன்று முதல் இன்று வரை அந்தத் தொழிலும் கைகொடுக்கிறது. ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கிறேன்.  தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். 

தற்போது எனது ஜீவனம் ஓரளவு நல்லமுறையில் நடக்கிறது.  எனவே, வறுமையில் இருப்போருக்கு என்னால் முடிந்த  உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக,  மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோருக்கு உடைகள் தைத்துக் கொடுப்பதில் சலுகைகள் வழங்குவதோடு, அவர்களில் விரும்புபவர்களுக்கு தையல்கலையை இலவசமாக கற்றும் தருகிறேன். அதுபோன்று வறுமையில் இருக்கும் பெண்களில், கைத்தொழில் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு குளியல் சோப் உள்ளிட்டவற்றையும் இலவசமாக சொல்லிக் கொடுக்கிறேன். அதைக் கொண்டு முன்னேறுவது அவர்கள் பொறுப்பு.

நான் படித்த நிர்மலா கல்லூரி நிர்வாகம், நான் செய்து வரும் சமூக சேவைகளை பற்றி கேள்விப்பட்டு, என்னை அழைத்து சிறப்புச் செய்து பாராட்டியதோடு "தனித்துவமானவள்' என்ற  விருதையும் வழங்கி கௌரவித்து என் வாழ்நாளில் மறக்க முடியாதது. 

பெண் என்றாலே சவால்கள் நிறைந்ததாகவே வாழ்க்கை இருக்கிறது. அடித்தட்டு பெண்களின் பெரும் பிரச்னை பொருளாதாரம், இன்னொன்று சமூகம் பற்றிய பயம். அதிலிருந்து விடுபடுவதற்கு வாழ்நாள் முழுவதும் பல பெண்கள் உழைத்தாக வேண்டியிருக்கிறது. தாயில்லாமல் தகப்பனின் ஆதரவும் இல்லாமல் வளர்வதென்பது சுலபமல்ல. என்றாலும் முன்னேற வேண்டும், நமக்கு சவாலாக நிற்கும் சமூகத்தின் முன் ஜெயித்து காட்ட வேண்டும் இந்த எண்ணம் தவிர என் இளமைப் பருவத்தில் வேறு சிந்தனைகளே இருக்கவில்லை. கிடைத்த வேலைகளையெல்லாம் செய்திருக்கிறேன். தையலில் கை வேலை கற்றுக் கொள்ள வெறும் ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்திருக்கிறேன். இன்றைக்கும் இந்த ஊரடங்கு நாளிலும் விடாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். நம் விடாமுயற்சி வெற்றியை ஈட்டித் தரும். வெற்றி மரியாதையைப் பெற்றுத் தரும்.  நமக்குள் துடிப்பு இருந்தால் எல்லாத் தடைகளையும் தாண்டி விட முடியும். ஊக்கமும் உதவியும் வழிகாட்டலும் இறையருளால் வந்து சேரும்.   அதற்கு நானே சிறந்த உதாரணம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT