மகளிர்மணி

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெண்கள்!

28th Jul 2021 06:00 AM | -தி.நந்தகுமார்

ADVERTISEMENT

 

மத்திய அமைச்சரவையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மொத்தம் 11 பெண்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப் பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ஆட்சியில்,  9  பெண் அமைச்சர்கள் இருந்தனர். இதில்  6 பேர் கேபினட் அமைச்சர்கள். தற்போதைய ஆட்சியில், 11 பேர் அமைச்சர்கள். இந்த புதிய 7  பெண் அமைச்சர்களைப் பற்றி அறிவோம்..

ஷோபா கரந்தலேஜே

ADVERTISEMENT

ஷோபா கரந்தலேஜே (54) கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி சிக்மகலூர் தொகுதி மக்களவை உறுப்பினர். முதல்வர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவர். சிக்மகளூர் தொகுதியில் பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். தற்போது இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராகப் பதவி வகிக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் எம்.எல்.ஏ, எம்.எல்.சி பதவிகளையும் வகித்துள்ளார். அந்த மாநில உணவு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் இருந்துள்ளார். 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் உடையவர். புதிய அமைச்சரவையில் வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணை அமைச்சராகி உள்ளார்.

மீனாக்ஷி லேகி

மீனாக்ஷி (54) புதுதில்லி மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாகவும் தேர்வாகியவர். இவர் பாஜக செய்தித்தொடர்பாளராக பணியாற்றியவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். சமூக சேவகராகவும் செயல்பட்டவர்.

புதிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சராக மீனாக்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்

குஜராத்தைச் சேர்ந்தவர் 60 வயதான தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்,  பாஜகவில் மூத்த முன்னோடி.  40 ஆண்டுகாலமாக பொது வாழ்க்கையில் உள்ளார். அவருக்கு ஜவுளித்துறை மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அன்னபூர்ணா தேவி

ஜார்கண்டைச் சேர்ந்தவர் அன்னபூர்ண தேவி. மாநில பெண்கள்- குழந்தைகள் அமைச்சராக பதவி வகித்தவர். ஜார்கண்ட்,  பீகாரில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக  இருந்தவர். தனது 30 வயதிலேயே பீஹார் அரசின் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர். முதன்முறையாக மக்களவைக்குத் தேர்வாகி உள்ள இவர், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் கல்வித்துறை இணை அமைச்சராகி இருக்கிறார்.

பாரதி பிரவின் பவார்

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாரதி,  மருத்துவப் பயிற்சியாளர். நாசிக் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பாடுபட்டவர். தேசியவாத காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தவர். நாசிக் மாவட்டத்தில் உள்ள தனித் தொகுதியான, டின்டோரியில் போட்டியிட்டு முதல்முறையாக வென்றவர். சுகாதாரம்- குடும்பநல இணை அமைச்சராக இருக்கிறார்.

பிரதிமா பவுமிக்

வட கிழக்கு மாநிலமான மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் இருந்து, முதல் முறையாக எம்.பி,யாகியுள்ளார். அந்த மாநில பொதுச் செயலாளர்.

தனது முதல் மாத சம்பளத்தை அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்து பாராட்டுகளைப் பெற்றவர். திரிபுராவில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் நபர். புதிய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் மேம்பாடு துறையின் இணை அமைச்சராகி இருக்கிறார்.

அனுப்ரியா சிங் படேல்

40 வயதாகும் இவர், உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்,  இரண்டாவது முறையாக  எம்.பி யாகியுள்ளார். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாகியுள்ளார். மோடியின் முதலாவது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராகப்  பதவி வகித்தவர். இம்முறை  வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Tags : Magaliarmani Union Cabinet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT