மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 38:  வகுத்த வழி!

சாந்தகுமாரி சிவகடாட்சம்

""ஏலேய் ஆறுமுகம், காதில் விழாதபடி உட்கார்ந்து இருக்கு பாரு'' என்று கூவியபடிக் கையில் பிடித்திருந்த ஸ்பேனரை ஆறுமுகத்தை நோக்கி வீசினான் சம்பத்.

பத்தே வயசான ஆறுமுகம் சம்பத்தின் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கிறான். காத்து இறங்கிய டயர்களுக்குக் காத்து அடிப்பது, பஞ்சர் ஒட்டுவது, பிரித்துப் போட்ட வாகனங்களின் பாகங்களைக் கழுவிச் சுத்தம் செய்வது, டீக்கடைக்கு அடிக்கடிச் சென்று டீ வாங்கி வருவது என்று பல வேலைகளைப் பார்க்கும் ஒரே சிறுவன்.

மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்காக இங்கே மாடாய் உழைக்கிறான்.

காலை ஒன்பது மணிக்கு ஆறுமுகம் முதலாளியின் கடையின் முன்பு ஆஜராகிவிட வேண்டும். பிறகு வேலை முடிந்து வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிடும். கடையைச் சுற்றிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து சுத்தமாக வைக்க வேண்டும். சம்பத்தின் வீடு கடையின் பின்புறத்தில் இருந்தது. இரவு குடித்தக் களைப்புத் தீரத் தூங்கி எழுந்து, பத்து மணிக்கு சம்பத் வந்து கடையைத் திறந்து விடுவான்.

சில நாட்களில் தாமதமாக எழுந்தால், அவளின் சம்சாரம் கலா, ஆறுமுகத்தை அழைத்து, கடை சாவியைக் கொடுத்துக் கடையைத் திறக்கச் சொல்லுவாள். கனமான ஷட்டரை முக்கி முனங்கித் தூக்கி திறப்பதற்குள்,ஆறுமுகத்துக்கு மூச்சு வாங்கிவிடும்.

சம்பத்துக்குப் பதினைந்து வயதிலும், ஆறுமுகத்தின் வயதிலும் இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். பெரியவன் ஆனந்தன் சென்னையின் சிறந்த கான்வென்ட்களில் ஒன்றாக விளங்கும் மேரி ஹையர் செகண்டரி பள்ளியில் பிளஸ் ஒன்னிலும், சிறியவன் ஆதித்தியன் ஆறாம் வகுப்பிலும் படிக்கிறார்கள்.
ஆறுமுகம் டயர்களுக்குப் பஞ்சர் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது சம்பத்தின் இரண்டு பிள்ளைகளும், டிப்டாப்பாக நன்றாக அயர்ன் செய்த மடிப்புக் கலையாதப் பள்ளிச் சீருடைகளை அணிந்து கொண்டு அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிப் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை, ஆறுமுகம் ஏக்கத்தோடு பார்ப்பான்.

""அப்பா! அவர்களுடைய கால் ஷுக்கள், பாலீஷ் ஏறி எப்படிப் பளபளக்கின்றன? என்று, அன்று ஆறுமுகம் சிறிது கவனம் சிதறி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான், "ணங்'கென்று சம்பத் வீசி எறிந்த ஸ்பேனர் அவன் கணுக்காலைப் பதம் பார்க்க, வலி தாங்க முடியாமல் "ஓ' வென்று அலறினான்.

""மூதேவி, தொழிலைக் கத்துக்கும் பொழுது பிராக்கு என்னடா வேண்டியிருக்கு? வேலையை ஒழுங்காப் பாரு'' என்று சம்பத் அடித் தொண்டையில் உறுமினான்.

கண்களில் ஆறாகப் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் அழுதால் மேலும் அடிவிழும் என்று தன் அழுகையை நிறுத்த முயன்றான். ஆனால் அதன்பின் தொடர்ந்த விசும்பலை அவனால் நிறுத்த முடியவில்லை.
மணி பதினொன்று இருக்கும்; ""டேய், ஓடிப்போய் டீக்கடையிலே மசால்வடை ஆறும், டீ இரண்டும் வாங்கி வா'' என்றான் சம்பத்.
எழுந்த ஆறுமுகத்தின் கணுக்காலில் உண்டான வலி, அவனை வாய் விட்டு அலற வைக்க முயல, அதைக் கஷ்டப்பட்டு அடக்கி நொண்டியபடி டீக் குவளையை எடுத்துக் கொண்டு நடந்தான்.
ஆறுமுகத்தின் அம்மா கோலம்மாள் இரண்டு வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கிறாள். அதில் கிடைக்கும் வருமானம், மகன் கொண்டு வரும் இரண்டாயிரம் ரூபாய், நாலு ஜீவன்கள் உயிர் வாழ வேண்டும். ஆறுமுகத்திற்கு இரண்டு தங்கைகள், அதில் ஒன்றுக்கு வயசு நான்கு. அது சரி, அவனின் அப்பா எங்கே என்கின்ற கேள்வி எழுகிறதுதானே!
அவன் டி.பி நோய்த் தாக்குதலில் சிவலோகம் சென்று மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. அப்பொழுது ஆறுமுகத்திற்கு ஏழு வயதுதான். பக்கத்திலிருந்த கார்ப்பரேஷன் பள்ளியில் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தான்.
அன்றோடு அவன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சம்பத்தின் கடைக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் குடிசைக் குடியிருப்புப் பகுதியில்தான் கோலம்மமாள் வசித்து வந்தாள். அவள் தன் கைக்குழந்தை சற்று வளரும் வரை ஆறுமுகத்திற்கு அரை வயிறு கஞ்சி ஊற்றி வீட்டில் வைத்திருந்தாள். பிறகு தன்னுடைய பெரிய மகளை, அவளுடைய தங்கையைப் பார்த்துக் கொள்ளச் செய்துவிட்டு, ஆறுமுகத்தைச் சம்பத்திடம் வேலைக்குச் சேர்த்து வைத்து விட்டாள்.
ஒரு வேளை பகல் சாப்பாடு, சொற்ப சம்பளம், சம்பத்திடம் அடிமைப்பட்டவன் போல் உழல்கிறான் ஆறுமுகம். கோலம்மாள் தன் மகன் ஆறுமுகத்திடம் வேலை கற்றுப் பிற்காலத்தில் அவனைப் போல் மெக்கானிக்காகத் தொழில் செய்வான் என்ற கனவில் வாழ்கிறாள்.
இப்படியெல்லாம் இளவயதில் அடிப்பட்டு, உதைப்பட்டு, சக்கையாகப் பிழியப்பட்டு, அரை வயிறு சாப்பாட்டிற்காக நாயாய், பேயாய் அலைந்த ஆறுமுகத்திற்கும் கடவுள் ஒரு விடிவு காலத்தை நிர்ணயம் செய்திருந்தார்.
சம்பத் தன்னுடைய கடைக்குத் தேவையான ஸ்குரூக்கள், போல்ட் நட்டுகளை மொத்த விலைக்கு வாங்க ஆறுமுகத்தை அனுப்புவான். அப்படிப் போகும்பொழுது அது எங்கே செய்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிந்து தன்னுடைய பதினைந்தாவது வயதில் அந்தத் தொழில் பேட்டைக்குச் சென்றான் ஆறுமுகம். பிறகு சம்பத்திடம் வேலைக்குச் செல்வதை விடுத்து, அங்கே உள்ள ஒரு முதலாளியிடம் வேலைக்கு அமர்ந்தான். தொழிலைக் கற்றான். பிறகு வங்கியில் கடன் வாங்கித் தானே ஸ்குரூக்களையும், போல்ட் நட்டுகளையும் தயாரிக்கத் தொடங்கினான்.
ஆரம்பத்தில் சம்பத், ""கோலம்மாளிடம் உன் புள்ள என்கிட்ட வேலையை விட்டுவிட்டுப் போயிட்டான், என்ன கிழிக்கிறான்னு பார்க்கிறேன்'' என்று சவால் விட்டிருந்தான். இப்ப அவனே மூக்கின் மீது விரலை வைக்கறாப்போல மூன்றாம் கிளாஸ் வரை படித்த ஆறுமுகம் முதலாளி ஆகிவிட்டான். இந்தச் சாதனையை அவன் நிகழ்த்திய பொழுது அவனுக்கு வயசு இருபத்து மூன்றாகி இருந்தது.
வங்கியில் வாங்கிய கடன்களை அடைத்து, மேலும் லோன் வாங்கி வாகனங்களுக்கு அப்ஹோல்ஸ்டிரி செய்யும் கடையை ஆரம்பித்தான். புதிதாக வாங்கிய கார்களின் இருக்கைகளுக்கு மேல் உறை தைத்துத் தருவது, கிழிந்து போன இருக்கைகளை அகற்றிவிட்டுப் புதிதாக உருவாக்கித் தருவது என்று தொடங்கி, கார் வாஷ், கார் மெயின்டனன்ஸ் என்று இன்று சென்னையில் பல கிளைகள், இவைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல "ஆறுமுகம் கார் பாடி பில்டர்ஸ்' என்று காரின் பழுதுபட்ட பாகங்களை நீக்கிவிட்டுப் புதுப் பாகங்களை உருவாக்கிப் பொருத்தும் தொழிலையும் ஆறுமுகம் தன் வசப்படுத்தியிருக்கிறான்.
இளம் தொழிலதிபர் ஆறுமுகத்தின் கீழ் இன்று ஐநூறு தொழிலாளிகள் வேலை செய்கின்றார்கள். கோலம்மாள் ஒரு வேளைச் சோற்றுக்கு வழி தெரியாமல் தவித்தவள், இன்று வைரமும், பட்டுமாக உலா வருகிறாள். அவளுக்குப் பணிவிடை செய்ய, "ஏய்' என்ற குரலுக்கு ஓடிவர
பத்துப் பணியாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆறுமுகத்தின் இரண்டு தங்கைகளும் வசதியாக வாழ்கிறார்கள்.
ஆறுமுகத்திற்கு, பெண் கொடுக்க, நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தவர்களில் கோலம்மாள் தேர்ந்தெடுத்த, சென்னையின் பெரிய நகைக்கடை முதலாளியின் பெண் அபிநயாவே மனைவியாக வாய்த்தாள்.
பெரிய பட்டப்படிப்பு படித்து, நுனி நாக்கு ஆங்கிலம் பேசித் திரிபவள், ஆரம்பபள்ளிப் படிப்பு கூட படிக்காதவனோடு கைக்கோர்த்து வலம் வருகிறாள். படிப்பில் என்ன இருக்கிறது? பணம்தான் மலைப்போல கொட்டிக் குவிந்து இருக்கிறதே.
அன்று ஸ்பேனரில், அடிவாங்கிய ஆறுமுகத்தின் கணுக்கால்களை இன்று பிராண்டட் ஷுக்கள் மூடிக் கொண்டுள்ளன. அதைத் தாங்கிய கால்கள், பென்ஸ் எஸ் கிளாஸ் காரை ஓட்டிச் செல்கின்றன.
வகுத்தான், ஆறுமுகத்திற்கு என்று வகுத்த வழி இதுவாக இருக்கும்பொழுது அதை எவரால் தடுக்க முடியும்.

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

(குறள் எண் : 377)

பொருள் :

கோடிப் பொருள் சேர்ந்திருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படித்தான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT