மகளிர்மணி

கார் ரேஸில் சாதிக்கும் பெண் டாக்டர்!

28th Jul 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT


அண்மையில் கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள எஸ்.டி.எம் காலேஜ் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஷிவானி பிருத்வி, அடுத்து ஓராண்டு கிராமப் பகுதியில் மருத்துவராக பணியாற்றுவதற்கான அரசாணையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் சிறுவயதிலிருந்தே தன் ரத்தத்தில் ஊறியிருந்த கார் ரேஸ்
ஆர்வம் தலைதூக்கவே, ஏற்கெனவே விடுமுறை நாள்களில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கார் பயிற்சிப் பெற்று வந்தவர் முழுவீச்சில் கார் ரேஸில் பயிற்சிப் பெறுவதென முடிவு செய்தார்.

ஷிவானி வீட்டில் அவரது தந்தை பிருத்வியின் ரேஸ் கார் ஒன்று இருந்தது. பெங்களுரு ரேஸ் வட்டாரத்தில் பிரபலமான அவர், 1992 - ஆம் ஆண்டு உள்ளூரில் நடைப்பெற்ற 60 கி.மீ. கார் பந்தயத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். தொழிலதிபரான அவர் இளம் கார் ரேஸ் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

ஷிவானி அவரிடம் தனக்கு ரேஸ் கார் பயிற்சியளிக்கும்படி கேட்டபோது, அவர் மறுப்பேதும் கூறவில்லை. ஏற்கெனவே ஷிவானியை கார்ரேஸில் ஈடுபடுத்த வேண்டுமென விரும்பிய பிருத்வி, 2018 - ஆம் ஆண்டிலிருந்தே ஷிவானி கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
இதன்பின்னர் தான் பயிற்சிப் பெற்றதையும், முதன்முதலாக கார் ரேஸில் கலந்து கொண்ட அனுபவங்களைப் பற்றியும் ஷிவானியே நம்மிடம் கூறத் தொடங்கினார்:

ADVERTISEMENT

""முதல்நாள் என்னுடைய அப்பாவின் ரேஸ் காரை வெளியில் எடுத்தபோது, முதலில் ரேஸ்கார் எப்படி இயங்குகிறது என்பது பற்றி கற்றுக் கொடுத்தார். அவருடன் எங்கள் தொழிற்சாலை காம்பவுண்டிற்குள்ளேவே சில ரவுண்டுகள் ஓட்டிப் பார்த்தேன். பின்னர், தினந்தோறும் ஓட்டப்பழகிக் கொண்டேன். கார் ரேஸில் கலந்து கொள்ளலாமென்ற நம்பிக்கை பிறந்தது. இதற்கு காரணமே என் அப்பாவின் பயிற்சியும், அவர் கொடுத்த தைரியமும்தான்.

2018- ஆம் ஆண்டு சென்னையில் நடந்த "பெஸ்டிவல் ஆஃப் ஸ்பீட்' போட்டியில் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தேன். இதுதான் நான் கலந்து கொண்ட முதல் போட்டியாகும்.

வீடு திரும்பியபோது "பெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா' 2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வோல்ஸ்வேகன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் அமியோ கப் போட்டியில் பங்கேற்க அழைப்பு அனுப்பியிருந்தனர். போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணையதளம் வழியாகவே விண்ணப்பித்தேன். என் தந்தைக்கு இது ஆச்சரியத்தை அளித்தது.

கார் ரேஸில் கலந்து கொள்ளும்போது எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்படி முடிக்க வேண்டும் என்பது பற்றி என்னுடைய தந்தை தெளிவாக கற்றுக் கொடுத்தார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் எனக்கு சிறிதளவும் அனுபவம் இல்லை என்பதால், அவர் என்னை பெங்களூரில் உள்ள "கோ கார்டிஸ்' என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். கார் ரேஸில் பங்கேற்பதற்கு முன் முழுமையான பயிற்சிப் பெற்ற தீபக் பால்சின்னப்பா என்பவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். கூடவே இந்தியன் நேஷனல் டிராக் ரேஸில் சாம்பியன்ஷிப் ஜோயல் ஜோசப் என்பவரையும் அறிமுகப்படுத்தினார். அவர் என்னை சாம்பியன் ஆக்க தேவையான பயிற்சியளிப்பதாக உறுதியளித்தார். நாங்களனைவரும் சென்னை இருங்காட்டு கோட்டையில் கார்ரேஸ் நடைபெறும் ஓடுதளத்தில் பயிற்சிப் பெற கிளம்பினோம்.

கடினமான பயிற்சிக்குப் பிறகு என் பெற்றோருடன் நான் அமியோ கப் பந்தயத் தேர்வுக்காக புணே சென்றேன். இந்தப் போட்டியில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்திருந்தனர். அங்கு சர்வதேச தரத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரேஸ் கார்களில் தகுதி தேர்வு பெற பயிற்சியளித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

இங்கு எனக்கு உடன் வழிகாட்ட என்னுடைய அம்மா தீப்தி பிருத்வி முன்வந்தார். இவர் தாவணகரே எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டரில் மருத்துவராகவும், விரிவுரையாளராகவும் உள்ளார். அப்பாவின் மூலம் அவரும் ரேஸ்கார் ஓட்ட பழகியிருந்ததால், அவர் எனக்கு உதவி செய்ய வந்தது நல்லதாயிற்று. ஏற்கெனவே அவர், இந்தியன் நேஷனல் ராவி சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பங்கேற்றபோது அமெச்சூராக இருந்த எனக்கு வழிகாட்டியாக இருக்க என்னுடைய தந்தை அவரை துணைக்கு அனுப்பியிருந்தார். தூரத்தையும், வேகத்தையும் கணக்கிட்டு அவர் என்னை ஓட்டச் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கடைசியில் நாங்கள் இரு பெண்கள் உள்பட 25 பேர் போட்டியில் கலந்து கொண்டது மேலும் அனுபவத்தைக் கொடுத்தது. இதன் பின்னர், இந்தியன் நேஷனல் ராவி சாம்பியன் ஷிப் நடத்திய தென்னந்திய போட்டியில் மகளிர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று கோப்பையை வென்றோம்.

கார் ரேஸில் பங்கேற்பது திரில்லிங்காக இருந்தாலும் பயிற்சி பெறும்போது ஏற்படும் விபத்து மற்றும் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 2019- ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் கலந்து கொண்ட ரேஸில் உடனிருந்த அம்மா கொடுத்த எச்சரிக்கையையும் மீறிநான் ஓட்டிச் சென்ற கார் இரண்டு முறை உருண்டு தலைகீழாக கவிழ்ந்தது. அதில் அம்மாவின் கைவிரல் கதவிடுக்கில் சிக்கிக் கொண்டது. சீட் பெல்ட்டை விடுவித்து கொண்டு எழுந்து சாதுர்யமாக கார் கதவைத் திறந்து விரலை எடுத்ததோடு, என்னையும் எதுவுமே நடக்காதது போல் வெளியே கொண்டு வந்தது எனக்கே வியப்பாக இருந்தது.

இந்த இரண்டாண்டுக்குள் பல கார்ரேஸ்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்தோனேஷியாவில் நடந்த இன்டர்நேஷனல் ஆசியா ஆட்டோ ஜிம்கானா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றதோடு, டீம் இந்தியா ரேஸில் நான்காவது இடத்தைப் பிடித்தேன். 2021- ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் காரி மோட்டார் ஸ்பீட்வே சார்பில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மூன்றாவது வந்தபோது, அந்த ரேஸ் உண்மையிலேயே எனக்கு சவாலான போட்டியாக அமைந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து ஸ்பிரிண்ட் ரேஸில் இரண்டாவதாக வெற்றிப்
பெற்றேன்.

கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான தகவல்களையும், அனுபவத்தையும் பெற முடிகிறது. குறிப்பாக ரேஸ்கார்களைப் பற்றியும், ஓட்டுவதற்கான உடல் தகுதி பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். என்னுடைய பெற்றோர் கொடுத்த அறிவுரைகள் எனக்கு பேருதவியாக இருந்தது. பொருளாதார ரீதியிலும் அவர்கள் பக்கபலமாக இருக்கின்றனர்.

இந்த ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச கார்ரேஸ் வீரர்கள் பங்கேற்கும் ஆசியா பசிபிக் ராலி சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் நேஷனல் ராலி சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கேற்க ஆவலாக உள்ளேன். இது தவிர ஜூனியர் ஐ.என்.ஆர்.சி சாம்பியன் ஷிப் போட்டியிலும் கலந்து கொண்டு என் திறமையை வெளிப்படுத்த உள்ளேன். இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக மனதளவிலும், உடலளவிலும் என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். கூடவே மருத்துவத்திலும் கவனம் செலுத்தி வருகிறேன்' என்கிறார் ஷிவானி பிருத்வி.

Tags : magaliarmani Predict the distance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT