மகளிர்மணி

பலித்தது ஒலிம்பிக்ஸ் கனவு...!

பிஸ்மி பரிணாமன்

விதி என்பதா... அதிர்ஷ்டம் என்பதா... ரேவதி வீரமணியைப் பொறுத்தமட்டில் ஓட்டம்தான் அவருக்கு முகவரியைத் தந்துள்ளது. பெற்றோரைச் சின்ன வயதிலேயே இழந்து வறுமையான வாழ்க்கையில் அல்லல்பட்டாலும் பாட்டியால் அரவணைக்கப்பட்டவர். பாட்டிதான் ரேவதிக்கு எல்லாம். மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணியின் டோக்கியோவை நோக்கிய ஓட்டப் பயணம் ரேவதியைப் பொறுத்த மட்டில் கனவுப் பயணம்.
ரேவதியை வளர்த்த பாட்டி ஆரம்மாள், ரேவதி குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்:
""எங்களுக்கு சொந்த ஊர் மதுரை சக்கிமங்கலம். ரேவதிக்கு நான்கு வயதாகும் போது அவரது அப்பா வீரமணி இறக்க .. சில மாதங்களில் அம்மா ராணியின் மரணமும் நிகழ்ந்தது. ரேவதியையும் அவள் தங்கை ரேகாவையும் வளர்க்கும் பொறுப் பை நான் ஏற்றேன். நான் கூலி வேலைதான் பார்த்து வந்தேன்.
ரேவதி கொஞ்சம் வளர்ந்ததும் "நீ கூலி வேலை பார்த்து எப்படி இந்தக் குழந்தைகளை வளர்க்கப் போகிறாய்... மூத்த பேத்தியையும் ஏதாவது வேலைக்கு விடு" என்று பலரும் சொன்னார்கள். நானோ ரேவதியை அரசு விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்துவிட்டேன். 12- ஆம் வகுப்புவரை ரேவதி விடுதியில் தங்கிப் படித்தாள்.
பள்ளியில் படிக்கும் போதே ரேவதி ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டாள். 12- ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, காலில் ஷூ இல்லாமல் மாநில
அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓட... அதை மதுரை அரசு ஓட்ட பயிற்சியாளராக இருந்த கண்ணன் ஐயா பார்க்க, ரேவதியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.
ரேவதிக்கு தடகள ஓட்டப் பயிற்சி தர முன்வந்தார். என்னிடம் அனுமதி கேட்டார். படிப்பைவிட ஓட்டம் முக்கியமாக எனக்குத் தெரியவில்லை. "ஓட்டம் வேணாங்க.. ரேவதி படிக்கட்டும்' என்று சொல்லிவிட்டேன்.
தொடர்ந்து அவர் என்னிடம் பேசி சம்மதிக்க வைத்தார். ரேவதி ஓட ஷூ வாங்கிக் கொடுத்தார். வெறுங்காலில் ஓடிப் பழக்கப்பட்ட அவள், ஷூ அணிந்து ஓட மிகவும் சிரமப்பட்டாள். நாளடைவில் ஷூவுடன் ஓடுவதிலும் பழக்கப்பட்டுப் போனாள்.
பிளஸ் டூ தேர்வுக்குப் பின் கண்ணன் ஐயாவே ரேவதியை தமிழ் பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் சேர்த்தும்விட்டார்.
2016-இல் கோவையில் நிகழ்ந்த தேசிய ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர் தடகள போட்டியில் முதல் இடத்தை பிடித்த ரேவதி, 2019 -இல் நடைபெற்ற ஆசிய போட்டியிலும் வெற்றி பெற்றாள். தொடர்ந்து 2019-இல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் ரேவதி கலந்து கொண்டாள். ரேவதியின் ஓட்ட சாதனைகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே மதுரையில் பயணச் சீட்டு சேகரிப்பவர்' பதவிக்கு நியமனம் செய்தது. அதே காலகட்டத்தில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பாட்டியாலா பயிற்சி மையத்தில் பயிற்சி பெறவும் அழைப்பு வந்தது. ரயில்வே துறையும் அதற்கு அனுமதித்தது. மாதா மாதம் சம்பளத்தையும் வழங்கிவந்தது. அவ்வப்போது ரேவதியின் தடகள பயிற்சி குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து தெரிந்து கொள்ளுவார்கள்.
சென்ற இரண்டு ஆண்டுகளாக ரேவதி பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறாள். ரேவதி சமீபத்தில் நடந்த தகுதிச் சுற்றில் 400 மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் 53.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்த சாதனையின் அடிப்படையில் ஒலிம்பிக்ஸ் 400 மீட்டர் "கலப்பு தொடர்' ஓட்ட தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இந்தப் பிரிவில் 2 ஆண்களும் 2 பெண்களும் கலந்து கொள்வார்கள். மதுரையிலிருந்து இதுவரை யாரும் ஒலிம்பிக்ஸ்ஸில் கலந்து கொள்ளவில்லை. அந்தப் பெருமை ரேவதிக்கு கிடைத்துள்ளது.
ரேவதியின் புகழுக்கும் சாதனைக்கும் கண்ணன் ஐயாதான் காரணம். அதை நானும் ரேவதியும் மறக்க மாட்டோம். ரேவதிக்கு தற்போது 23 வயதாகிறது. ரேவதியின் தங்கை ரேகா சென்னையில் காவல்துறையில் வேலை பார்க்கிறாள்'' என்கிறார் ஆரம்மாள்.
"நான் ஒலிம்பிக்ஸ்ஸிற்கு தேர்வாகியுள்ளேன் என்ற செய்தி கேட்டதும் எனது தாய்வழிப் பாட்டி பூரித்துப் போனார். நான் பாட்டியாலாவில் இருப்பதால் ஊடகங்கள் பாட்டியைப் பார்த்துப் பேச சக்கிமங்கலம் போகிறார்கள். பாட்டி ரொம்பவும் பிஸியாகிவிட்டார். நான் அலைபேசியில் பேசினால் கூட "பல பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள். நான் அப்புறம் உன்னுடன் பேசுகிறேன் என்று இணைப்பைத் துண்டித்துவிடுவார். பாட்டிக்கு 76 வயதாகிறது.
எங்களுக்காக செங்கல் சூளைகளில் வியர்வை சிந்தியவர் எனது பாட்டி. பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது ஒலிம்பிக்ஸ்ஸில் ஓடணும் என்று சொல்வேன். அந்தக் கனவு இப்போது பலித்திருக்கிறது. பாட்டியாலாவில் ஹிந்தியும் கற்றுக் கொண்டேன். இப்போது என்னால் ஹிந்தியில் சரளமாகப் பேச முடியும்'' என்கிறார் ரேவதி வீரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT