மகளிர்மணி

தாய்மையைப் போற்றுவோம்!

28th Jul 2021 06:00 AM | - வி.பி. கலைராஜன்

ADVERTISEMENT

 

தாய் என்பது புனிதமான சொல். எந்த நாட்டில் பிறந்தாலும் என்ன மொழி பேசினாலும் பிறக்கும் குழந்தை உச்சரிக்கும் முதல் சொல் "அம்மா' என்று அழும் சொல்தான். இதனால் கூட முன்தோன்றி மூத்த மொழி தமிழ் மொழி என்று கூறப்பட்டு இருக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை பத்திரிகைகளில் படித்தபோது நெஞ்சம் நொறுங்கிப் போனது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 95 வயதான மூதாட்டியை அவரது மகன் கழிப்பறையில் பூட்டி தண்ணீர் கூட கொடுக்காமல் 10 நாட்களுக்கு மேல் அடைத்து வைத்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூதாட்டியின் முனகல் சத்தம் கேட்டு காவல்துறைக்கு தகவல் தந்திட காவலர்கள் மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்தில்சேர்த்துள்ளனர்.

பசியோடு இருந்த மூதாட்டி மயக்க நிலையில் இருந்துள்ளார். காவல்துறையினர் மகனை கைது செய்து, மூதாட்டியிடம் வாக்குமூலம் வாங்கச் சென்றபோது சற்று நினைவு திரும்பி இருந்த மூதாட்டி, "என் மகன் ஏதோ தெரியாமல் தவறு செய்து விட்டான். அவன் மீது வழக்குப் போட்டு அவனை ஜெயிலில் தள்ளாதீர்கள்' என்று காவல்துறையினரிடம் மன்றாடி உள்ளார். என்னே தாயின் பாசம்! இதனால்தான் நம் முன்னோர் "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்று கூறினார்களோ?

ADVERTISEMENT

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்ற சம்பவங்களால் மனம் ஆடிப் போனாலும், பெற்ற தாயை மட்டுமல்ல வளர்த்த தாயைக்கூட தெய்வமாய் வணங்குவோரும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில், கல்வி கற்போர் அதிகரிக்க அதிகரிக்க முதியோர் இல்லங்களும் ஆங்காங்கே உருவாகிக் கொண்டுதான் உள்ளன.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு அயல்நாட்டுக்கு செல்லும் பிள்ளைகள், பெற்றோர் மறைந்தால் அடக்கம் செய்திடக் கூட வர மறுத்து "நான் பணம் அனுப்புகிறேன். நீங்களே அடக்கம் செய்து விடுங்கள்' என்று உறவினர்களிடம் கூறுகிறார்கள்.
ஒரு நீதிபதி தனது அலுவல் நேரம் முடிந்த உடனே வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாள் வேறு ஒரு வேலை இருந்ததன் காரணமாக சற்று தாமதமாக வந்துள்ளார். அப்போது மகன் இன்னும் வரவில்லையே, ஏன் என்று தெரியவில்லையே, பிள்ளைக்கு என்னவோ ஏதோ என்று நீதிபதியின் தாய் தவியாய் தவித்து உள்ளார். காலதாமதமாக மகன் வர அவரது தாய் தனது மகனை கன்னத்தில் அறைந்துள்ளார்.
அடியை வாங்கிய மகனோ கண்ணீர் விட்டு அழுதிட, மகனை கட்டித்தழுவி "அன்பு மகனே! அம்மா அடித்தது வலித்து விட்டதா' என்று கேட்க, மகனோ "வலிக்கவில்லை அம்மா, நீங்கள் அடித்த அடியின் வேகம் மிகவும் குறைந்து இருந்தது, எனவே அம்மா வலுவிழந்து வருகிறார் அம்மாவிற்கு வயதாகி விட்டதே என்று எனக்கு கவலையாக இருக்கிறது' என்றாராம். இந்த காட்சியை நீதிபதியின் மனைவியும் குழந்தைகளும் பார்த்து நெகிழ்ந்து போனார்களாம்.
நம் நாட்டில்தான் இப்படி தாய்ப்பாசம் இருக்கிறது என்றில்லை. நான் சில மாதங்களுக்கு முன்பு படித்த செய்தி. யுத்தம் நடந்து வரும் சிரியாவில் தீவிரவாதிகள் சிலர் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 13 வயது சிறுமியை தங்கள் கோர உடற்பசிக்கு இரையாக்கிட முயல, அதனை கண்ட அவளின் தாய் தீவிரவாதிகளிடம் "என் பிஞ்சு மகளை விட்டு விடுங்கள், உங்கள் பசிக்கு வேண்டுமானால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கும்பிட்டு கதற, பாவிகள் அழகான அந்த தாயை சீரழித்து
சின்னாபின்னமாக்கி தங்கள் பசியைத் தீர்த்து கொண்டு விட்டு சென்றனர்.
பிறகு அடிக்கடி வந்து அந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். அந்த தாய்க்கு தன் செல்ல மகளை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. சில நாட்கள் கழித்து அந்தப் பெண்மணிக்கு குழந்தை உருவாக, எவன் பிள்ளையோ என்று விடாமல் தன்பிள்ளை ஆயிற்றேயென அந்தக்கருவை கலைத்து விட முயலாமல் அந்தப் பிள்ளையையும் அன்போடு பெற்று தன்மகனைப் போல் பாசத்தை பொழிந்து வளர்த்தாளாம்.
இந்த தாயின் பாசத்தை என்னவென்று சொல்வது? தன் மகளை காக்க போய் எவன் பிள்ளையையோ சுமக்க நேரிட்டதையும், அதை சுமையாக எண்ணி கலைத்திட முயலாது பெற்று வளர்ந்திடும் அந்தத் தாயின் அன்பையும் தியாகத்தையும் மறக்கத்தான் முடியுமா?
அயோத்தியா மண்டபம் சென்னை வாழ் பிராமணர்கள் அதிகம் ஒன்று கூடும் இடமாகும். சில நாட்களுக்கு முன்பு விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் மண்டபத்திற்கு வந்திருந்தார்.
நானும் அடிக்கடி அயோத்தியா மண்டபம் சென்று வருவதுண்டு. அப்படி அங்கு சென்றபோது இளைய சங்கராச்சாரியார் வந்து தங்கியிருப்பதைக் கூறி அவரிடத்தில் என்னை சிலர் அழைத்துச் சென்றனர். அவரும் என்னிடத்தில் நன்றாகவே பேசினார்.
அருகிலிருந்து பார்த்தபோது அவரது முகத்தில் ஒரு வாட்டம் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
என்னவென்று நண்பர்களிடம் கேட்க இன்று அவரது தாய் இறந்து விட்டதாகவும் அதற்கு அவர் செல்லவில்லை என்றும் கூறினார்கள். அதற்கு நான், ஆதிசங்கரரே தன் தாயின் மரணத்திற்கு வந்துவிட்டாரே இவர் செல்லலாமே ஏன் தன்னை வருத்திக் கொள்கிறார்' என்று கேட்க, துறவறம் பூண்டவர்கள் எந்த பாசத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என்றனர். அவர்களிடம் பட்டினத்தாரின் தாய் பாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

தன் தாயின் மரணச் செய்தி அறிந்து ஓடி வந்த பட்டினத்தார் தன் அன்னையின் உடலைப் பார்த்து

முந்தி தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து
அந்திப்பகலாய் சிவனை ஆதரித்து - தொந்தி
சரிய சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

என்று இதைப்போல் பல வெண்பாக்களை தன் தாயார் இறந்தபோது பாடிவிட்டு இறுதியில் தாயின் உடலை வாழைத்தண்டுகளின் மேல் வைத்து அதன் மேலும் வாழைத்தண்டுகளை வைத்து மூடி

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

என்று பாடியதும் தீ பற்றி எரிந்து தாயின் உடல் தகனம் செய்யப்பட்டது என்பதை பட்டினத்தார் வரலாற்றில் அறிகிறோம் .

பாரனைத்தும் பொய்யெனவே
பட்டினத்துப்பிள்ளையை போல்
ஆரும் துறத்தல் அரிதரிது

என்று பட்டினத்தார் எனும் துறவியின் சிறப்பை ஒரு புலவர் பாடியுள்ளார். அப்படி உலகப்பற்றை முற்றும் துறந்த முனிவர்களால் கூட தாயின் பற்றை துறக்க முடியவில்லையென்றால் தாய்ப் பாசத்தை யாரால் துறக்க முடியும்?

சமீபத்தில் மறைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வம் ஒரு மொழிப்போர் தியாகி. மாணவராக இருந்தபோது பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இவரோடு ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் போன்றவர்களும் கலந்து கொண்டனர். அதனால் அன்றைய தமிழக அரசு இவர்களுக்கு பி.ஆர்.ஓ பணி வழங்கியது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிறந்து இங்கிலாந்து மன்னரைப் பார்க்க சென்றபோது ஓமன் நாட்டு கடல் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் ஏ.டி. பன்னீர்செல்வம் உயிரிழந்தார். அவர் ஒரத்த நாட்டில் தங்கிப் படித்தவர். அதனால் அந்தப் பகுதியில் பல குழந்தைகளுக்கு பன்னீர்செல்வம் என்ற பெயர் வைக்கப்பட்டது.

அப்படி பெயர் சூட்டப்பட்ட பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த வருடம் மறைந்தார். அவருக்கு தீ மூட்டியவர் அந்த சாம்பலைத் தனியாக அள்ளிஎடுத்தார்.

பொதுவாக ராமேஸ்வரம் அல்லது திருவையாறு சென்றுதான் தண்ணீரில் சாம்பலைக் கரைப்பார்கள். அப்படித்தான் இவரும் செய்வார் என்று எதிர்பார்க்க, சொந்தங்களும் வற்புறுத்த அவரோ தன் தாய் எந்த நிலத்தில் உழைத்து நேசித்து தன்னைப் படிக்க வைத்தாரோ அதே நிலத்தில் தனது தாயின் சாம்பலைத் தூவினாராம். இதை கேட்ட எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது.

அதே ஒரத்தநாடு பகுதியில் பழனியம்மாள் என்கிற தாய் மரணத் தருவாயில் இருக்க அவரது மகன் தனது தாயின் கால் நகத்தை வெட்டி எடுத்து வைத்துள்ளார். தினமும் அந்த நகத்தை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்றும் அவரது கொள்ளுப் பேரன்களும் பேத்திகளும் அந்த நகத்தை பூஜித்து வருகிறார்கள். இலங்கையில் புத்தரின் பல் என்று வைத்து புத்த மதத்தினர் வணங்குவதை போல் நான்கு தலைமுறை தாண்டியும் அந்த தாயின் நகத்தை இன்றும் அவரது வம்சத்தினர் வணங்கி வருகின்றனர்.

இப்படி எத்தனையோ சம்பவங்களை தாய்ப்பாசத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால்தான் "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்று எழுதி தாய்பாசத்தின் அருமையை வெளிப்படுத்தி உள்ளனர். எனவே தாயை நேசிப்போம்! தாய் நாட்டை நேசிப்போம் ! தாய் மொழியை நேசிப்போம்!

Tags : magaliarmani Let respect motherhood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT