மகளிர்மணி

5 லட்சமான 70 ஆயிரம்

ஸ்ரீதேவி குமரேசன

காலையில் எழுந்ததும் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் தொடங்கி, நாம் உட்கொள்ளும் உணவு பொருள்கள், பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் என எல்லாம் ரசாயன மயமே என்ற நிலையில்தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்பது தான் நிதர்சனம். இந்த சூழலில் இருந்து முடிந்த வரை தன்னை விடுவித்துக் கொண்டு இயற்கை சார்ந்து வாழ்ந்து வருகிறார் கரூரைச் சேர்ந்த அர்ச்சனா கார்த்திகேயன். மேலும், ரசாயனங்கள் இல்லாத இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களையும் தயாரித்து தொழில் முனைவோராகவும் மாறியிருக்கும் இவர், 2021 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த 100 பெண் தொழில்முனை வோரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அர்ச்சனா தனது வெற்றி பயணத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

""கரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமத்தைச் சார்ந்தவள் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிசினஸூக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என் குடும்ப உறவுகளிலும் யாருக்கும் சொந்த தொழில் செய்த அனுபவமும் இல்லை. என்னை ஆடிட்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதற்காக எம்.காம் முடித்துவிட்டு சி.ஏ படித்து வந்தேன். ஆனால், முழுதாக முடிக்க இயலவில்லை.

இந்நிலையில், திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர், எல்லோரையும் போன்று வீடு, குடும்பம் என்று இருந்து வந்தேன். மகன் பிறந்தான். குழந்தை 8 மாதத்தில் பிறந்த ப்ரீ மச்சுர் பேபி. அதனால் அவனுடைய ஆரோக்கியத்துக்காக நிறைய கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதற்காக, ரசாயனக் கலப்பில்லாத பொருளையே அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இதற்கிடையில், நான் கல்லூரி படிக்கும்போது, 2017-இல் பெங்களூரில் இருக்கும் பெல்லந்தூர் ஏரியில் ரசாயனங்கள் கலந்ததால் தீப்பிடித்த சம்பவம் குறித்த செய்தியை படித்தேன். தண்ணீர் தீப்பிடித்து எரிந்த அந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது. அது எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற எண்ணம் தோன்ற, இணையத்தில் நிறைய ஆராய்ந்தேன். அப்போது ரசாயனங்கள் பற்றி நிறைய அறிந்தேன்.

அதன்தொடர்ச்சியாக, நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் தயாரிப்பில் என்னென்ன மூலப் பொருட்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன். அதில், நாம் அணிந்திருக்கும் ஆடைகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் கூட சில நேரம் நமது உடலில் தோல் புற்றுநோய் ஏற்படுத்திவிடக்கூடும் என்பதை அறிந்தேன். இதனால், எனது தேடல் இன்னும் அதிகரித்தது. நாம் அணியும் ஆடை முதல் சாப்பிட்ட தட்டை கழுவ பயன்படுத்துவது வரை நாம் முழுக்க முழுக்க ரசாயனங்களுடன்தான் வாழ்ந்து
வருகிறோம் என்று புரிந்தது. அதுமுதலே ஆர்கானிக் மீது என் கவனம் திரும்பியது.

எனது அன்றாட பயன்பாட்டில் முடிந்தவரை, என்னவெல்லாம் ரசாயன கலப்பில்லாமல் தயார் செய்ய முடியும் என்பதை ஆராய்ந்ததில், பயோஎன்சைம் முறை அறிந்து கொண்டேன். அதனை பயன்படுத்தி, கிச்சன் கழிவுகளை தூக்கி ஏறியாமல் பதப்படுத்தி தரை துடைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க பயன்படுத்தும் திரவம் என ஆர்கானிக் முறையில் எங்கள் வீட்டுக்கு தேவையானதை நானே தயார் செய்து பயன்படுத்தி வந்தேன்.

எனது கணவர் குடும்பம் முழுக்க முழுக்க விவசாய குடும்பம் என்பதால், எங்கள் நிலத்திலேயே பாரம்பரிய அரிசி, காய்கறிகள் போன்றவற்றை பூச்சி மருந்து கலப்பில்லாமல் ஆர்கானிக் முறையில் விளைவித்து பயன்படுத்தி வந்தோம்.

இதனால், என் குழந்தையை குளிக்க வைக்க பயன்படுத்தும் சோப்பிலிருந்து அவனுக்கு தேவைப்படும் மூலிகைகள் என அனைத்து பொருளையும் எங்கள் நிலத்திலேயே விளைவிக்கத் தொடங்கினோம். மஞ்சள், பன்னீர் ரோஜா என்று விளை வித்து நலங்கு மாவு தயார் செய்து அதில் தான் குழந்தையை குளிக்க வைத்து வந்தேன்.

இந்நிலையில், எனது குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் திடீர் என்று என் தந்தை இறந்துபோனார். எங்கம்மாவும், என்கூட பிறந்தவர்களும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்ன செய்வது என்று யோசித்தபோது, நான் ஏற்கெனவே எனக்காக தயாரித்து வைத்திருந்த தரை துடைப்பான் வகையறாக்கள் மற்றும் முடி கொட்டுவது நிற்பதற்காகவும், பொடுகுத் தொல்லை தீர்வதற்காகவும் எனது பாட்டி சொல்லிக் கொடுத்த முறையில் தயாரித்து வைத்திருந்த எண்ணெய்யும்தான் இருந்தன. அதை எனது தோழிகள், அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் என விற்க தொடங்கினேன். அதனுடன் எங்கள் நிலத்தில் விளைவித்த அக்ரி பிராடக்ஸþம் கையில் இருந்தது. அதை அப்படியே விற்பனை செய்தபோது பெரிசா லாபம் கிடைக்கவில்லை. அதனால், மதிப்பு கூட்டினால் லாபம் கிடைக்கும் என்று யோசித்தேன். அதில் உருவானதுதான் "தாய் ஹெர்பல்' நிறுவனம்.

இதற்காக, மத்திய அரசினால் இலவசமாக நடத்தப்படும் "ஸ்கில் இந்தியா' என்கிற திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின் மூலம் சருமப் பராமரிப்பு குறித்து முறையாகப் படித்து தெரிந்து கொண்டேன்.

இதன் மூலம் தலை முதல் பாதம் வரை சரும பராமரிப்புக்கு தேவையான அனைத்து பொருள்களையும் எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் தயாரித்து வருகிறேன். எனது தயாரிப்புகளுக்குத் தேவையான பெரும்பாலான மூலப்பொருட்களை எங்களது நிலத்திலேயே விளைய வைத்து கொள்கிறோம்.

குழந்தைகளுக்கான பராமரிப்புப் பொருட்கள், கைகளால் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, ஆர்கானிக் ஃபேஷியல் கிட் என குழந்தைகள், பெரியவர்கள், ஆண், பெண் என அனைவரும் பயன்படுத்தும் வகையில், தற்போது சுமார் 80-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் எங்களது நிறுவனம் மூலம் உருவாகிறது. வெவ்வேறு சருமத்திற்கு ஏற்றவாறு தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ற தயாரிப்புகளும் வழங்கப்படுகின்றன.

அதுபோன்று எனது தயாரிப்புகளை ஸ்டோர் மூலம் விற்பனை செய்யாமல், ரீசெல்லர்ஸ், ரீபிராண்டிங், டிஸ்ட்ரிபியூடர்ஸ் மூலம் விற்பனை செய்கிறேன். இதனால், நிறைய பெண்களுக்கு முதலீடு இல்லாத ரீசெல்லிங் முறையில் வருமானத்தையும் ஏற்படுத்தி தர முடிகிறது. தற்போது அமேசான் மூலமும் எனது பொருள்கள் கிடைக்கிறது.

வருங்காலத்தில், உடலுக்கு ஊறுவிளைவிக்காத காட்டன் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக தற்போது எங்கள் நிலத்தில் பருத்தியைப் பயிரிட்டிருக்கிறோம். வருங்காலம் நிச்சயம் இயற்கை சார்ந்ததாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

வெறும் 70 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி, தற்போது 5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருவாய் ஈட்டி வருகிறேன்.

பொதுவாக, ஒரு தயாரிப்பு சந்தைக்கு வந்ததும்தான் விளம்பரப்படுத்தப்படும். ஆனால், நான் முன்னேற்பாடாக எனது பிராண்டை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியா மூலம் அறிமுகப்படுத்திய பிறகே விற்க தொடங்கினேன்.

இதனால், முதல்நாள் அன்றே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அது எனக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது. என் குடும்பத்தில் உள்ள அனைவருமே எனக்கு பக்கபலமாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT