மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 37:  ஆசையை துறப்போம்!

21st Jul 2021 06:00 AM | - சாந்தகுமாரி சிவகடாட்சம்

ADVERTISEMENT

 

""பவானி, பவானி'' பெரியதாகக் குரல் கொடுத்துக் கூப்பிட்டான் கதிரவன்.
""அம்மாடி, ஏன் இப்படி என் காது ஜவ்வு கிழிஞ்சுப் போறாப்போலக் கத்தறீங்க?'' என்று கோபமாகக் கேட்டபடியே வந்தாள் பவானி.
""இங்கே பிரிஜ்ஜிலே நாலு இமாம் பசந்து மாம்பழம் வாங்கி வெச்சிருந்தேனே, எங்கே காணோம்?''
""அதுவா?''
""அதாம்மா, காய்கறிக் கடை தங்கராசுக்கிட்டச் சொல்லி வச்சி வாங்கியாந்தேன். ஒரு பழம் நூறு ரூபாய்''.
""நாநூறு ரூபாய்க்கு, நாலு மாம்பழம் வாங்கியாந்து, அத்தனைப் பழங்களையும் நீங்களே சாப்பிடுவீங்க. பின்னே சர்க்கரை ஏகமா ஏறிடுச்சுன்னு டாக்டர்கிட்ட நடையா நடப்பீங்க. சர்க்கரை வியாதிக்காரங்க, அதிக இனிப்பான வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு அறுபத்து ஏழு வயசான மனுசனுக்குத் தெரியாது. அதான் செண்பகம் வீட்டுக்கு அனுப்பிட்டேன்''.
""ஐயோ இது மாம்பழ சீசன், இப்ப விட்டா அடுத்த வருஷம்தான் இந்தப் பழங்கள் கிடைக்கும். கடைத்தெருவுக்குப் போனா பழக்கடைகளிலே, எத்தனை வகையான மாம்பழங்களை அடுக்கி வெச்சிருக்கான்''.
""போதும் போதும் நிறுத்திக்கிங்க உங்க மாம்பழப் புராணத்தை; உடம்புலே ஏகமா சர்க்கரை இருக்கும் பொழுதே நாக்கு இப்படி நீளுதே, உங்களைச் சொல்லிக் குத்தமில்ல, உங்க அம்மாவின் வளர்ப்பு அப்படி''.
""ஏய், இங்கத் தொட்டு அங்கத் தொட்டு இப்ப எங்க அம்மாவை இழுக்கறே. இது என்னுடைய தனிப்பட்ட ஆசை. இனிமே காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு என்னை அனுப்பாதே, நீயே போய் வாங்கிக்கோ. அங்கே மாம்பழ சீஸன்லே அடுக்கி வெச்சிருக்கிற மாம்பழம் எல்லாம் என்னப் பார்த்து, வா வா என்னை எடுத்துக்கோ, அப்படின்னு இரு கரங்களை நீட்டிக் கூப்பிடுதுங்க''.
""திருத்த முடியாத மனுசன்'', பவானி தலையில் அடித்துக் கொள்கிறாள்.
கதிரவனுக்குச் சிறுவயது முதலே இனிப்புப் பண்டங்கள் மீது அப்படி ஓர் ஆசை. அவனுடைய அப்பா, தவமாய்த் தவமிருந்துத் திருமணமாகிப் பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த சீமந்தப் புத்திரன் கதிரவனுக்கு, அவனுக்குப் பிடித்தமானச் சாக்லேட்டுகளையும், ஐஸ்கிரீம்களையும் வாங்கிக் கொடுத்து அவன் ஆசையாக அவைகளைச் சாப்பிடுவதை ரசிப்பார்.
கதிரவனின் அம்மாவும் தன் பங்குக்கு வீட்டிலேயே மைசூர்பாகு, லட்டு, ரவா லட்டு, கேசரி, தேங்காய் பர்பி என்று செய்து சுவாமிக்கு நைவேத்தியம் பண்றேன்னு சொல்லி ஒப்புக்குப் பூஜை அறையில் கொலுவிருக்கும் ஸ்வாமிகளுக்குப் படைத்து, கதிரவனுக்கு வேண்டும் அளவுக்குச் சாப்பிடக் கொடுப்பாள்.
இதைத் தவிர ஹோட்டல்கள், பலகாரக் கடைகள், கல்யாணம் போன்ற விசேஷங்களில் கதிரவன் இனிப்புப் பண்டங்களை ஒரு கை பார்ப்பான். விளைவு, இருபத்தைந்து வயது வாலிபனாக பவானியைக் கைப்பிடித்து, முப்பது வயசுலே செண்பகம் மகளாகப் பிறந்த மகிழ்ச்சியைப் பெரியதாகக் கொண்டாடியபோது, பெரும் அளவில் இனிப்புப் பண்டங்களைத் தின்று மயங்கிச் சரிந்தான்.
கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு, பவானி தன் கணவரை டாக்டரிடம் கூட்டிச் சென்றாள். ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவைக் கண்ட டாக்டர் மயக்கம் போட்டு விழாத குறைதான். கதிரவனின் ரத்தத்தில் இருந்த சர்க்கரையின் அளவு அறுநூறைத் தொட்டு இருந்தது.
முப்பது வயசிலேயே இன்சுலின் ஊசி காலை, மாலை என்று போட வேண்டியதானது. நடைப்பயிற்சி, வேப்பிலை லேகியம், பாகற்காய் சாறு என்று கதிரவனுக்குப் பிடிக்காதவை எல்லாவற்றையும் அவன் செய்ய வேண்டியதாகிப் போனது.
கண்களில் விளக்கெண்ணெய்யைஊற்றிக் கொண்டு என்பார்களே, அப்படித்தான் கதிரவனைப் பொத்திப் பொத்தி வைத்துக் காத்தாள் பவானி. வீட்டிலேயே கதிரவனின் உடம்பில் உள்ள சர்க்கரை அளவைக் கண்டறியும் உபகரணங்களை வைத்துத் தினந்தோறும் கணக்கிடுவது, தன் கணவனுக்குத் தானே இன்சுலினை ஊசியின் மூலம் ஏற்றுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டயாபடிக் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் அழைத்துச் செல்வது என்று பார்த்துக் கொண்டதில், பெண் செண்பகத்திற்கு நல்ல முறையில் திருமணத்தை முடித்து, பேரன், பேத்தியையும் பார்த்துவிட்டார் கதிரவன்.
கதிரவனுக்கு வெகுவிமர்சையாக அறுபதாம் கல்யாணமும் நடந்து முடிந்தது. அன்று இரவு தன் ஆசை மனைவியிடம்கதிரவன் என்ன சொன்னார் தெரியுமா?
""பவானி, முப்பது வருடங்களாக உன் பேச்சைக் கேட்டு, எனக்கு மிகவும் பிடித்தமானப் பல உணவுகளைச் சாப்பிடாமல், நீ கொடுத்த வெந்தயப் பொடி, வேப்பிலை லேகியம், பாவக்காய் என்று சாப்பிட்டு என் நாக்கு செத்து விட்டது. எனக்கு வயசு அறுபது முடிஞ்சிப் போச்சு. வாழ்க்கையில் முக்கால்வாசி கிணற்றைத் தாண்டிவிட்டேன். இனி மிச்சம் இருக்கும் ஆண்டுகளை எனக்குப் பிடித்தபடி வாழப் போகிறேன்''.
""பிடித்தபடி என்றால்... பவானி கலவரப்பட்டாள்''.
""வேறு ஒன்றும் இல்லை, எனக்குப் பிடித்தமான இனிப்பு வகைகளை ஒரு கை பார்க்கப் போகிறேன்''.
""அம்மாடி, உங்களுக்கு ஏன் இப்படி புத்தி கெட்டுப் போகிறது? முப்பது வருஷங்களா காலையிலும், மாலையிலும் ஊசியைக் குத்திக் குத்தி உங்க உடம்பு முழுக்க ரணகளமாகிப் போன பிறகும் உங்களுக்கு இனிப்பு ஆசை விடலையா?'' ""உங்களுக்காக கவலைப்பட்டு பட்டு எனக்கு
ரத்தக் கொதிப்பு நோய் வந்து ஆட்டிப்படைக்குது''.
""காலு மறத்துப் போகுது, கண்ணுமங்குது, சர்க்கரை அளவு உங்க உடம்பிலே திடீர்ன்னு குறைஞ்சா நெஞ்சு படபடக்குது, நரம்பு இழுக்குதுன்னு இத்தனை அவஸ்தைப் பட்டும் நீங்க திருந்தலைன்னா நான் என்ன பண்ணுவேன்?'' என்று பவானி முப்பது வருடங்களாகக் கவலைப்பட்டது போலவே இப்பொழுதும் கவலைப்பட்டாள்.
கடந்த ஏழு வருடங்களாக, கதிரவன் உணவு விஷயத்தில் பவானியின் கட்டுப்பாடுகளைத் தகர்த்து எறிந்து வெளி இடங்களுக்குச் சென்று இஷ்டப்படி சாப்பிடுகிறார். அதுவும் மாம்பழ சீஸன் வந்துவிட்டால் போதும், மனுசன் குரங்காக ஆடுகிறார்.
இன்று காலை எழுந்திருக்கும்பொழுதுதே பவானிக்குத் தலை சுற்றியது, ஆனாலும் அதைப் புறம்தள்ளி மெதுவாக எழுந்து, காபி போட்டு கதிரவனுக்குக் கொடுத்துத் தானும் அரை டம்ளர்குடித்தாள்.
கதிரவன் தினசரி செய்தித் தாளில்மூழ்கிப் போயிருந்தார்.
கோதுமை ரவையில், காலை டிபனுக்காகப் பவானி உப்புமாவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
"தடால்' என்று பெரும் சத்தம்.
திடுக்கிட்டு எழுந்த கதிரவன், சமையல் அறையில் பவானி மயங்கி விழுந்திருப்பதைக் கண்டு அலறினார்.
பவானிக்கு ரத்தக் கொதிப்பு ஏகத்துக்கும் ஏறி இருந்தது. ஸ்ட்ரோக் வருவதற்கு முந்தைய நிலை. ஆஸ்பத்திரியில் பத்து நாள்கள் தங்கி வைத்தியம் பார்க்க வேண்டி வந்தது.
அன்று பவானி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பும் நாள். கதிரவன் திடீர் என்று மிகவும் தளர்ந்து போனார். ஆரோக்கியமாக உலா வந்த பவானி தன்னைப் பார்த்துக்கொள்ள இருக்கிறாள், என்கின்ற மனவலிமையில் தன் இஷ்டத்திற்கு நாக்கைக் கட்டாமல் சாப்பிட்டு வந்தார். இந்தப் பத்து நாள்களில் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் நடைபிணமாக நடமாடி வந்தார்.
""அப்பா'' என்று அழைத்தாள் அன்பு மகள் செண்பகம்.
""என்னம்மா, உன்னை வேறு கஷ்டப்படுத்தி விட்டோம். இந்தப் பத்து நாள்கள் உன் குடும்பத்தைக் கவனிக்காமல்எங்களுக்கு உதவுகிறாய்''.
""அப்பா, என்ன இப்படி பேசுறீங்க? இது என் கடமையில்லையா?''
""சரி, ஏதோ சொல்ல வந்தியே?''
""அம்மாவுக்குச் சதா உங்களைப் பற்றிய கவலைதான் அப்பா. என்கிட்ட நேரிலும், தொலைபேசியிலும் நீங்க உடம்பைப் பார்த்துக்க மாட்றீங்க, இப்பெல்லாம் அதிகமா இனிப்பைச் சாப்பிடறீங்க. உங்க உடம்புக்கு ஏதாவது பெருசா ஆயிடுமோன்னு பயப்படறாங்க. நீங்க அம்மா சொல்லறதைக் கேட்டா என்ன? அவங்களுக்கு ஏன்டென்ஷனைக் கொடுக்கறீங்க? நீங்க என்ன பச்ச புள்ளையா, உங்களுக்கு நான் சொல்லணுமா? அம்மா படுத்துட்ட இந்தப் பத்து நாள்லே நீங்க எப்படி ஆயிட்டீங்க தெரியுமா? வயசான காலத்திலே நீங்க அம்மாவுக்கும், அவங்க உங்களுக்கும் பெரும் துணை என்பதைப் புரிஞ்சுக்கோங்க, பார்த்து நடந்துக்குங்க''.

தலைகுனிந்து அமர்ந்திருந்த கதிரவனின் கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.

இரண்டு மாதங்கள் நிமிடங்களாய் ஓடி மறைந்தது. கதிரவன் வெளி உலகத்தையே மறந்து விட்டார் என்றே சொல்லலாம். பவானியைக் கண்களுக்குள் வைத்துப் பாதுகாத்தார். ஹோட்டல் ஏன் மார்க்கெட்டுக்குப் கூடப் போவதில்லை. தொலைபேசியிலேயே மளிகைச் சாமான்கள், காய்கறிகளை வரவழைத்து விடுகிறார்.

ADVERTISEMENT

சமையல்காரி, சமைத்து வைக்கும் அரை உப்பு போட்ட சாப்பாடு, இதை பவானிக்காகச் செய்தது, அதையே அவரும் சாப்பிட்டார். அன்று சமையல்காரி வரவில்லை.

அடுக்களையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்கவே கதிரவன் விரைவாக அங்கே வந்தார்.

""பவானி, எதுக்கு சமைக்க வந்தே?'' உள்ளே போ என்றார்.

""ஐயோ, படுத்துப் படுத்து எனக்குப் போர் அடிச்சிடுச்சி. என்னை நோயாளி ஆக்கிடாதீங்க. இனிமே நான்தான் சமைக்கப் போறேன்'' என்றாள்.

பகல் மணி ஒன்று இருக்கும். ""வாங்க சாப்பிடலாம்'' என்றாள் பவானி.

சாப்பாட்டு மேஜையில், கதிரவனின் தட்டில் ஒரு கரண்டி அளவு கேசரி இருந்தது. ""உங்களுக்காகச் செய்தேன். பாவம் நீங்க, இரண்டு மாசங்களா இனிப்பு எதையும் சாப்பிடலை சாப்பிடுங்க''.

அன்பு மனைவியை ஏறிட்டுப் பார்த்தார் கதிரவன்.

""என்னுடைய இனிப்பு என் எதிரே உட்கார்ந்து இருக்கும் பொழுது எனக்கு இனி இனிப்பு தேவையில்லை. பவானி நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இனிப்புக்கு ஆசைப்பட்டு பட்டு என் உடம்பே சர்க்கரை மூட்டையாகி விட்டது. எனக்காகக் கவலைப்பட்டு நீயும் உடல்நலம் குன்றிவிட்டாய். தெய்வாதீனமாக இரண்டு பேரும் மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்று பெரும் வியாதிகளில் விழாமல்தப்பித்தோம். இனிப்பின் மீது வைத்த ஆசையைத் துறந்தேன், இடைவிடாமல் தொடர்ந்தத் துன்பங்களைத் தொலைத்தேன்'' என்று சொல்லிக் கதிரவன் புன்னகைக்க, தன் அன்புக் கணவனை அணைத்துக் கொள்கிறாள் பவானி. இனிவரும் நாள்கள் அவர்களுக்கு இனியதாக அமையும்.

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

(குறள் எண்: 368)

பொருள் :

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது. இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

(தொடரும்)
 

Tags : magaliarmani ஆசையை துறப்போம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT