மகளிர்மணி

பள்ளிக் குழந்தைகளுக்காக வானொலியில் ஒரு புதிய அலை!

21st Jul 2021 06:00 AM | - அ.குமார்

ADVERTISEMENT


இந்தியக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மனதில் தோன்றும் எண்ணங்களையோ, சொல்ல விரும்பும் கருத்துகளையோ நம்மில் பலர் காது கொடுத்து கேட்பதில்லை. ஊக்குவிப்பதும் இல்லை. இந்த வெறுப்புணர்வு அவர்கள் அடிமனதில் ஆழமாகப் பதிந்து விடுவதுண்டு. குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றுவதை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருணா கலி என்பவர் "ஸ்கூல் ரேடியோ' என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளார்.

அது தவிர, இவர் ஏற்கெனவே விவசாயத்துறையில் உள்ள பெண்கள் உரிய அங்கீகாரத்தைப் பெறவும், வங்கிகளில் கடனுதவி பெறுவது, புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வது போன்றவைகளில் பயிற்சியளிப்பதோடு, பெண்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இதற்காக இவருக்கு ஊடகத் துறையினருக்கான "லாட்லி விருது' வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய குழுவின் ஒத்துழைப்புடன் தொடங்கிய "ஸ்கூல் ரேடியோ' திட்டம்
எப்படி உருவாயிற்று? எப்படி செயல்படுகிறது? வெற்றிப் பெற்றுள்ளதா, என்பது பற்றி இங்கு விளக்கமளிக்கிறார். அருணா கலி:

பள்ளிக் குழந்தைகளின் குரலை ரேடியோ மூலம் ஒலிப்பரப்ப வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

ஸ்கூல் ரேடியோ என்ற தளத்தை உருவாக்கியது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று கூட சொல்லலாம். சிறுவயதில் என் மனதில் தோன்றியதை வெளியில் சொல்ல தயக்கமும் வெட்கமும் ஏற்பட்டதால் எதையும் துணிவுடன் வெளிப்படுத்த முடியவில்லை. சந்தேகங்களுக்கு விடைகாண முடியவில்லை. நான் மட்டுமல்ல. என்னைப்போல் இந்தியக் குழந்தைகள் பலரின் நிலையும் இதுதான். தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த சந்தர்ப்பமின்றி பயம் காரணமாக தவிர்ப்பதை உணர்ந்தேன். உள்ளுக்குள் அடக்கி வைப்பதை விட வெளிப்படுத்துவது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என நினைத்தேன்.

ADVERTISEMENT

2015 -ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி, உலக ரேடியோ தினத்தன்று ஆந்திர மாநிலத்தில் முதல் ஸ்கூல் ரேடியோ தளத்தை உருவாக்கி, 9 முதல் 21 வயதுடைய மாணவ - மாணவிகள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளித் தேன். இந்த திட்டத்திற்கு என்.எஸ்.ஆர்.சி.இ.எல் மற்றும் ஐ.ஐ.எம் பெங்களூரு ஆகிய அமைப்புகள் அங்கீகாரம் அளித் தன. மாணவர்கள் தயக்கமின்றி உற்சாகத்துடன் தங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் ஸ்கூல் ரேடியோ மூலம் வெளிப்படுத்த முன்வந்தனர்.

கல்வித் துறையில், உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

நான் ஏற்கெனவே ஒரு குழு அமைத்து இருபதாண்டுகளாக மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால், எங்கள் குழு பார்ட்டனர் உதய்குமார் கலி என்னுடைய திட்டத்திற்கு உதவ முன் வந்தார்.

பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுற்றுச் சூழல் கல்வியுடன் ரேடியோ மற்றும் வீடியோ தயாரிப்பு பாடத்தையும் சேர்த்திருந்தோம். குப்பைக் கழிவு நிர்வாகம் பற்றியும் சில மாணவர்கள் தங்கள் ஆலோசனைகளை கூற விரும்புவது தெரிந்தது. தங்களுடைய கண்டுபிடிப்புகள், திறமை, கற்பனைகளை வெளியிட தயங்கினார்கள். வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஸ்கூல் ரேடியோ திட்டம் உருவானது.

ஸ்கூல் ரேடியோ திட்டம் வெற்றிப் பெற்றுள்ளதா?

இந்த புதிய திட்டம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி சேனல்கள் அமைத்து, சந்தா தொகையை எங்களிடம் பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்தோம். ஸ்கூல் ரேடியோ மூலம் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை மட்டுமின்றி கல்வி மற்றும் கல்வி சாரா பொது விஷயங்கள் பற்றியும் பேச முன்வந்தனர். தனிப்பட்ட முறையில் ஒருவரைப் பற்றியோ, சாதி, சமூகத்தை பற்றி தரக் குறைவாகவோ பேசக் கூடாது என்று எச்சரித்துள்ளோம். மற்றபடி அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தவோ விளக்கமளிக்கவோ எந்த வித தடையும் இல்லை.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு அமைப்பாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து ஸ்கூல் ரேடியோவின் முக்கியத்துவத்தை உணரச் செய்வது எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. அமைப்பாகவோ, குழுக்களாகவோ இருந்தால்தா ன் விவாதங்கள் மூலம் 21- ஆம் நூற்றாண்டின் முக்கியத்துவம், அறிவியல் மற்றும் வாழ்க்கையின் மாறுதல்கள் போன்றவை களை அறியமுடியும். தலைமை ஏற்கும் திறமையும், பொறுப்பும் ஏற்படுமென நினைத்தோம். ஏறக்குறைய இது அவர்களுக்குத் துணிவையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் பயிற்சியாகவே அமைந்தது.

இந்தத் திட்டத்தில் பள்ளிக் கூடங்கள் எப்படி இணைந்தன?

ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் இத்திட்டத்தை தேர்வு செய்தபோது, நாங்கள் அவர்களுக்காக சொந்தமான சேனல்களை அளித்து வந்தோம். பொதுமுடக்கம் காரணமாக எங்கள் பணிகள் அனைத்தையும் ஆன்லைனுக்கு மாற்ற வேண்டியதாயிற்று. ராஜமுந்திரியில் உள்ள லாரல் ஹை குளோபல் பள்ளியில் மட்டும் வழக்கமான முறையில் எங்கள் பணி தொடர்கிறது. ஆந்திர மாநில சமூக நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் உள்பட பல அரசு பள்ளிகளில் நாங்கள் பார்ட்னராக உள்ளோம். விசாகபட்டணம் சாகர் நகரில் உள்ள பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக நடத்தப்படும் அரசு பள்ளியில் கூட எங்கள் பணி தொடர்கிறது.

ஸ்கூல் ரேடியோ திட்டத்தால் ஏற்பட்டுள்ள பலனை கூறுங்களேன்?

இத்திட்டத்தை தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நேரடியாக தொடர்பில் உள்ளோம். இது தவிர கடந்த ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஐம்மு - காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

உங்கள் நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் என்ன கற்றுக் கொண்டனர்?

மீண்டும் இரண்டாவது முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் நாங்கள் ஆன்லைன் மூலம் பயிற்சியளித்து வருகிறோம். இன்றைய மாறுதல்களுக்கு ஏற்ப நாங்கள் உருவாக்கும் நிகழ்ச்சிகள்படி, மாணவர்கள் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், அவர்களே சுயமாக நிகழ்ச்சிகளை உருவாக்கவும் வாய்ப்பளித்துள்ளோம். உலக சுற்றுச்சூழல் தினம், உலக தினம், சர்வதேச - மகளிர்தினம், உலக தண்ணீர் தினம் போன்ற சிறப்பு நாள்களில் மாணவர்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கூறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அண்மையில் சில மாணவர்கள் பல்வேறு மொழிகளில் தங்கள் கற்பனையில் உதித்த கதைகளைச் சொல்லத் தொடங்கியுள்ளனர். இதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் "ஸ்டோரிஸ் ஆப் சேஞ்ச் மேக்கர்ஸ்' என்ற தலைப்பில் தொடர்ந்து நடத்தவுள்ளோம். கூடவே பலவித தலைப்புகளில் கருத்தரங்கு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். எதிர்பார்த்ததை விட வரவேற்பு கூடி வருகிறது'' என்கிறார் அருணா கலி.

Tags : magaliarmani radio for school children
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT