மகளிர்மணி

'29 மாநிலங்களை 42 நாளில் சுற்றி வந்தேன்!'

ஸ்ரீதேவி குமரேசன


கடந்த ஜூன் 21-ஆம் தேதி அன்று "உலக மோட்டர் சைக்கிள் தினம்' கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பயணத்தில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு விருதினை வென்று சாதனையாளர் விருது பெற்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த சௌந்திரி சிந்தி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""எனக்கு பூர்வீகம் சென்னைதான். பொறியியல் படிப்பு முடித்திருக்கிறேன். சிறு வயது முதலே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதும் ஓட்டுவதும் மிகவும் பிடித்திருந்தது. அந்த ஆர்வத்தில் பள்ளி பருவத்திலேயே மோட்டார் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

அப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்று இருப்பதெல்லாம் எனக்கு தெரியாது. பிறகு, முகநூலின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால், அதில் எப்படி கலந்து கொள்வது என்பதெல்லாம் தெரியவில்லை. பின்னர், எனது மெக்கானிக் நண்பர் ஒருவர் மூலம் தான் பைக் ரேஸ் பயணத்துக்குள் வந்தேன்.

இது கொஞ்சம் காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ் என்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு எல்லாம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. வீட்டில் நான் பைக் ரேஸில் கலந்து கொள்ள அனுமதி கொடுத்ததே பெரிய விஷயம், அதற்கு மேல் அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் 2013 -இல் நான் பைக் ஓட்ட வந்தபோது, பெண்களுக்கென்று தனிப்பிரிவு எல்லாம் கிடையாது. ஆண் ரேஸர்களுடன்தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

யமஹா நிறுவனத்தின் ஓய்.பி.எக்ஸ்க்காக முதன்முதலாக ரேஸில் கலந்து கொண்டேன். ஆனால், முதல் ரேஸிலேயே விபத்துக்குள்ளானேன். வீட்டில் பயந்துவிட்டார்கள். இருந்தாலும், அடம்பிடித்து மீண்டும் 2014 - இல் ஹோண்டா நிறுவனத்துக்காக ஓட்டினேன். அந்தப் போட்டியில் கலந்து கொண்ட 15 பேரில் 14 -ஆவது நபராக வந்தேன். ஒருவரையாவது முந்தி வந்திருக்கிறேனே என்று நம்பிக்கை வந்தது.

அப்போதெல்லாம் பைக் ஒட்ட பயிற்சி எடுத்துக் கொள்ள இடம் கிடையாது. ரோட்டில் ஓட்டினால், என்னை வேடிக்கையாக பார்ப்பார்கள் ஏன்னென்றால், நான் உயரம் குறைவு. மேலும் அப்போதிருந்த வண்டியெல்லாம் கிக் ஸ்டார்ட்தான் செய்ய முடியும். எனக்கு வண்டியில் அமர்ந்தபடியே ஸ்டார்ட் செய்ய உயரம் தடையாக இருக்கும். அதனால், வண்டியை ஸ்டாண்ட் போட்டு கிக் ஸ்டார்ட் செய்துவிட்டு பின்னர், இடது புறம் வந்து வண்டியில் ஏறி அமர்வேன். இது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

இருந்தாலும் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளமாட்டேன். எனக்கு பிடித்த பைக் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருக்கும். ஒரு தவம் போல் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

பின்னர், 2016-இல் மீண்டும் ஹோண்டா சார்பில் கலந்து கொண்டப் போட்டியில் வெற்றிப் பெற்றேன். அதைத் தொடர்ந்து 2017 -இல் டி.வி.எஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவதாக வந்தேன். அடுத்தடுத்து நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பலமுறை வென்றேன்.

பின்னர், திருமணம். என் கணவர் அனந்தராஜும் பைக் ரேஸர்தான். இந்தியாவிலேயே நானும் எனது கணவரும்தான் முதல் பைக் ரேஸ் தம்பதிகள். பின்னர், பைக் கிளப் ஒன்றை தொடங்கினேன். இதில், பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட பெண்கள் சிலர், ஒவ்வொருவராக வந்து இணைந்தனர். தற்போது, எனது கிளப்பில் 50 பேர்கள் இருக்கிறோம்.

பின்னர், "பைக்கர் பேபேஸ்' என்று ஒன்று தொடங்கினேன். இது ரைடிங்கிற்காக மட்டுமே உள்ள டீம்.

பின்னர், பைக் ரேஸில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, "ஏ.எஸ். மோட்டார் ஸ்போர்ட்ஸ்' என்று ஒன்றை தொடங்கினோம்.

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் ஃபெடரேஷனால் அங்கீகரிக்கப்பட்ட 12 மோட்டார் ரேஸிங் ஸ்கூலில் எங்களுடையதும் ஒன்று. இது தவிர, ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் கார்ட் மேனேஜராக இருக்கிறேன். இதில் எனது பணி, ராயல் என்பீல்ட்டில் வண்டி வாங்க வரும் கஸ்டமருக்கு சிட்டிக்குள் மட்டுமே வண்டியை ஓட்டாமல், நீண்ட தூரம் பயணம் செல்லும்போது வண்டியின் பவர் எப்படியிருக்கிறது, என்ஜின் பிக்கப் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் லாங் டிரைவ் ஏற்பாடு செய்து தருவது, அவர்களுடன் நாங்களும் பயணம் செய்வதுதான் எங்களது பணி.

இதற்காக, வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என ரெய்டு ஏற்பாடு செய்வோம். அதில் கஸ்டமர் சென்னையிலிருந்து, மகாபலிபுரம், பாண்டிச்சேரி என கேரளா வரை கூட கூட்டிச் செல்வோம்.

இப்படி பைக்கில் நீண்ட பயணங்கள் சென்று சென்று, ஒருகட்டத்தில் இந்தியா முழுக்க பைக்கில் சென்று வர வேண்டும் என்ற ஆசை வந்தது. சரி போவது தான் போகிறோம் எதையாவது சாதிக்கலாமே என்று தோன்ற, இந்தியாவின் 29 மாநிலம், 5 யூனியன் பிரதேசங்களை 42 நாள்களில் சுமார், 16 ஆயிரத்து 210 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்தேன். இதுவரை இந்தியாவில் இந்த சாதனையை வேறு எந்த பெண்ணும் தனிப்பட்ட முறையில் செய்யவில்லை.

இதுதவிர, சமீபத்தில் "கோல்டன் குவார்ட்ரிலேட்டரல் ரெய்டு' என்று சொல்லும் 5,870 கிலோமீட்டர் பயணத்தை 118 மணிநேரம் 57 நிமிடத்தில் முடித்திருக்கிறேன். இதையும் நான்தான் முதன்முதலாக செய்திருக்கிறேன். இதற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பிடித்திருக்கிறேன்.

இண்டர்நேஷனல் மோட்டர் சைக்கிள் தினம் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், இது பைக்கர்களுக்கான கொண்டாட்ட தினம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் நீண்ட நாள் பொழுதைக் கொண்ட நாளாக கருதப்படும் ஜூன் மாதத்தின் 21 -ஆம் நாள்தான் ஆண்டு தோறும் இண்டர்நேஷனல் மோட்டர் சைக்கிள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தன்று, உலகில் உள்ள ஒவ்வொரு பைக் ரேஸரும், பைக் விரும்பிகளும் தங்களுடைய பைக்கில் தனியாகவோ, குழுவாக இணைந்து கட்டாயமாக அவரவர் வசதிக்கேற்ப பயணம் செல்வார்கள். அதுதான் இந்த தினத்தின் மையக்கரு'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT