மகளிர்மணி

பல்கலை வித்தகரின் சமையல்கலை புத்தகம்!  

27th Jan 2021 06:00 AM | - ஸ்ரீதேவி குமரேசன்

ADVERTISEMENT

 

ஒருவருக்கு ஒரு கலையில் ஈடுபாடு இருப்பது சகஜம். ஆனால், ஒருவரே பல கலைகளில் வித்தகராக இருப்பது அபூர்வம், அப்படி ஓர் அபூர்வ பெண்மணிதான் விசாலட்சி ராமச்சந்திரன். கடல் கடந்து சென்று அமெரிக்காவில் குடியேறி பல ஆண்டுகளை கடந்து விட்டாலும், தமிழர்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் சற்றும் மறக்காமல், அடுத்தடுத்த தலை முறைகளுக்கு எடுத்துரைத்து அழகாக வழிநடத்தி வருகிறார் அமெரிக்கா வாழ் தமிழரான விசாலாட்சி.

88 வயதிலும் சுறுசுறுப்பாய் இயங்கி வரும் இவர், தமிழ் பண்டிட், ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியர், ஓமியோபதி மருத்துவர், ஜோதிடர், எழுத்தாளர், செஸ் விளையாட்டு வீராங்கனை, ஓவியக் கலைஞர், சமையல்கலைஞர், தையல் கலைஞர், சின்மயா மிஷன் அமைப்பின் மூலம் வேதாந்தமும் படித்து முடித்துள்ளார். இப்படி இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது இவர், "விசாலம் கிரியேட்டிவ் குக்கிங்' என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து
கொண்டவை:

"விசாலம் கிரியேட்டிவ் குக்கிங்' புத்தகம் குறித்து ?

ADVERTISEMENT

உண்மை சொல்ல வேண்டும் என்றால் திருமணமாகி நான் வடநாட்டுக்கு சென்ற ஆரம்ப நாள்களில் எனக்கு சமைக்கவே தெரியாது. பல கலைகளை சுலபமாக கற்றுக் கொள்ளும்போது சமைக்க மட்டும் தெரியாமல் இருந்தால் எப்படி என்று சமையல் கலையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, சமையல் குறித்து நிறைய தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் ஒவ்வொரு செய்முறையையும் கற்றேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு உணவு பண்டத்தை சமைக்கும்போது அதை மறக்காமல் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வேன்.

ஏனென்றால் நம் உணவுப் பழக்கம் எவ்வளவு மாறியிருந்தாலும், தெற்கிலிருந்து வந்த இந்தியர்களான நாங்கள் பாஸ்தா அல்லது சாண்ட்விச்களில் மட்டும் வாழ முடியாது - எங்களுக்கு அவ்வப்போது சாம்பார், துவையல், கூட்டு அல்லது ஜீரா ரசம் தேவைப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, என் கணவரும் குழந்தைகளும் நான் செய்த சமையலை ருசித்துவிட்டு பாராட்டினர். என் கணவர் நிறைய ஊக்கப்படுத்தினார். இதுதான் சமையல் கலை மீது ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தது. பின்னர், குழந்தைகள் வளர்ந்து, திருமணம் செய்துகொண்டு சென்ற பின், சில சமையல் குறிப்புகளைக் கேட்டு என்னிடம் வந்தார்கள். ஆரோக்கியமான மற்றும் சுவையான எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுவகைகள் சிலவற்றை நானே முயற்சித்து பலமுறை செய்து பார்த்து நன்றாக வந்ததும் அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தேன். அதன் குறிப்புகளையும் எழுதி வைக்கத் தொடங்கினேன். இப்படி 4 புத்தகங்கள் வரை எழுதியிருந்தேன்.

ஒருமுறை தாய்லாந்தில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றபோது, அங்கு இரண்டு சமையல் புத்தகங்களை விட்டுவிட்டு வந்துவிட்டேன். சில நாள்களில் அது எனக்கு மறந்தும் போனது. தற்போது கரோனா பொது முடக்கக் காலத்தில் மகள் ஓய்வில் இருந்தபோது, வீட்டை சுத்தம் செய்யும்போது அந்தப் புத்தகம் அவளது கையில் கிடைத்துள்ளது. அதைப்புரட்டி பார்த்த அவளுக்கு அதை புத்தகமாக்கினால் அனைவருக்கும் பயன்படுமே என்று தோன்ற என்னைத் தொலைபேசியில் அழைத்து கூறினார். கரும்பு தின்னக் கூலியா, சந்தோஷம் என்றேன்.

பின்னர், தினமும் காலையில் 3 மணி நேரம் இதற்காக ஒதுக்கினோம். அவள், தாய்லாந்தில் இருந்துகொண்டே எங்களுடன் உரையாடலில் கலந்து கொள்வாள், இப்படி 3 மாதம் இதற்காக முழு முயற்சி எடுத்து உழைத்தோம். இதுதான் விசாலம் குக்கரி புத்தகம் வெளிவந்த கதை. இதன் அடுத்தப் பாகங்களும் விரைவில் வெளிவர உள்ளது.

சட்னீஸ் பிரிவுகளைத் தட்டச்சு செய்வதில் சாக்ரமென்டோவிலிருந்த எனது மகளின் தோழி சுதா நல்லமுத்து மற்றும் டாக்டர். பவானி சென்னையில் இந்த புத்தகத்தை அச்சிடுவதற்கும் உதவினார்கள். இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனது மகள்கள் காட்டிய ஆதரவும், ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஓவியக்கலை, ஜோதிடக்கலை, செஸ் விளையாட்டு, ஓமியோபதி மருத்துவம், சமையற்கலை, தையற்கலை என பல கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது குறித்து?
கடவுள் அருள் என்றுதான் நினைக்கிறேன். எனது கணவர் ராமச்சந்திரன் மத்திய ரயில்வே பணியில் அதிகாரியாக இருந்ததால், நாக்பூர், ஜபல்பூர் பிறகு பம்பாய் என அந்தக் காலத்திலேயே தமிழகத்தை விட்டு நாங்கள் வட இந்தியா பக்கம் வந்துவிட்டோம்.

மதிய உணவுக்கு பின் ஓய்வு எடுக்கும் பழக்கம் இதுவரை எனக்கில்லை. அதனால், கிடைத்த நேரத்தில் எல்லாம் எதையாவது கற்றுக் கொண்டே இருந்தேன். கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு அல்லவா. மேலும் பல ஊர்களுக்குச் சென்று கொண்டே இருந்ததும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது என்றும் நினைக்கிறேன். அதுபோன்று சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், மராத்தி, கன்னடம் எனப் பல மொழிகளையும் கற்றுக் கொள்ள முடிந்தது.

போபாலில் இருந்தபோது ஹோம் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். பின்னர், நாக்பூரில் இருந்தபோது ஓமியோபதி மருத்துவம் படித்தேன். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும் மட்டும் வைத்தியமும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பின்னர், மும்பை வந்தபோது, டீச்சர் டிரைனிங் முடித்தேன். அங்குதான் ஓவியக்கலையும், ஜோதிடக் கலையும், தையல் பயிற்சியும் கற்றேன். அதுபோன்று கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் அருகில் உள்ள முதியோர் இல்லங்களுக்குச் சென்று என்னால் முடிந்த உதவிகளையும் செய்துவிட்டு வருவேன்.

ஆசிரியர் பயிற்சி முடித்ததும், இத்தாலி நாட்டின் நிதி உதவியால் இயங்கிவந்த அரசுப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணி கிடைத்தது. அதன் அடுத்தகட்டமாக, நேஷனல் பிளான் ஆஃப் எஜுகேஷன் என்ற அமைப்பில் சிறிது காலம் ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளேன்.

இதைத்தவிர, எனது சிறு வயது முதலே பத்திரிகைகளில் எழுதும் ஆர்வம் உண்டு. 11 வயதில் ஆனந்த விகடனில் சிறுவர் பகுதியில் எழுத தொடங்கியது, இன்று வரை அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். எனது படைப்புகள் மங்கையர் மலரில் நிறைய வெளியாகி இருக்கிறது.

2010 - ஆம் ஆண்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாளில் வேதாந்தத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரை "ஞான பூமி' யில் வெளியானது.

கடவுள் அனைவருக்குமே 24 மணி நேரம்தான் கொடுத்திருக்கிறார். அதை உபயோகமாகவும், மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் கையாளுவதில்தான் இருக்கிறது வெற்றியும் தோல்வியும்.

குடும்பம் குறித்து?

எனக்கு 5 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், நேஷனல் வங்கியில் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இரண்டாவது மகள் கல்வியாளராக உள்ளார். மூன்றாவது மகள்தாய்லாந்தில் பணியில் இருக்கிறார். நான்காவது மகள் கனடாவில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். ஐந்தாவது மகள் அமெரிக்காவில் டாப்ஸிக்காலஜிஸ்ட்டாக இருக்கிறார். நான் அவருடன் தான் இருக்கிறேன். என் மகள்கள், மருமகன்கள், பேர பிள்ளைகள் அனைவரும் எனக்கு கிடைத்த வரம்.

இளைய தலைமுறைக்கு உங்கள் ஆலோசனை?

இன்றைய இளைய தலைமுறையினருக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் தங்களை மேம்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் அமைந்திருக்கிறது. எதையுமே யார் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். அதனால் அவர்கள் கிடைக்கும் வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம் சாதனையாளர்களாக மாற முடியும். இவர்கள் வள்ளுவரையும், நாலடியாரையும் பின்பற்றினாலே வாழ்க்கை நல்ல முறையில் அமைந்துவிடும்.

கலிபோர்னியா வாழ்க்கை குறித்து?

இந்தியாவைவிட தமிழர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், தமிழ் பண்டிகைகளையும் இங்கே உள்ள தமிழர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றி வருகிறோம். நவராத்திரி விழா, தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஏன் தற்போது முடிந்த மார்கழி 30 நாள்களும் காலையில் தீபம் ஏற்றுவதும் பாசுரம் படிப்பதையும் கூட நாங்கள் விடாமல் செய்து வருகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது இங்குள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண அமைப்பு, சின்மயா மிஷன் அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT